புதன், 10 ஆகஸ்ட், 2011

மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.

மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.

E-mail அச்செடுக்க
ஐந்து வருடங்களுக்கு முன் 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து அஹமதாபாத்துக்குத் திரும்பிய  40 வயது பெண் அனுரிதாவுக்குக்  கணவனை இழந்த துயரம் ஒருபக்கம் இருந்தாலும் கணவனின் வாரிசைத் தன்னால் சுமந்து பெற முடியும் என்ற நம்பிக்கையும் அதிகம் இருந்தது.  ஏனெனில், கணவனின் உறைந்த விந்தணுக்கள் அடங்கிய  திரவ நைட்ரஜன் குடுவைகளை அவர் எடுத்து வந்திருந்தார்.
இங்கிலாந்தில் பணிபுரிந்துவந்த இந்தியரான அனுரிதா, 2001 ல் அங்கே இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த மைக்கேல் என்பவரைத் திருமணம் புரிந்திருந்தார். ஆனால், விதிவசத்தால் 2006 ல் குருதிப் புற்றுநோய் காரணமாக மைக்கேல் மரணம் தழுவிய போது, அனுரிதா மிகவும் உடைந்து போனார். "மைக்கேல் என்மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார். அவருக்குப் பின்னரும் இன்னொருவரை மணக்க நான் விரும்பவில்லை" என்கிறார் அனுரிதா.

இங்கிலாந்தில் ரத்தப் புற்று ஆண் நோயாளிக்குக் கீமோ தெரபி சிகிச்சை மேற்கொள்ளுமுன் அவருடைய விந்தணுக்களைச் சேகரிப்பது என்பது ஒரு வழக்கம். அப்படித்தான் மைக்கேலின் உறைந்த விந்தணுக்கள் அனுரிதாவுக்குக் கிடைத்தன.

இறந்து விட்ட அன்புக் கணவனின் நினைவாக ஒரு குழந்தை வேண்டும் என்பதில் அனுரிதா  தீவிரமாக இருந்தார். ஐந்து வருடங்களுக்குப் பின்னர் அவருடைய எண்ணம் நிறைவேறப் போகிறது இப்போது. ஆம், அனுரிதா  இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.

கணவனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு செய்து கொண்ட அனுரிதாவின் முதல் முயற்சி  தோல்வியில் முடிந்தது. அவர் மிகவும் கலங்கித்தான் போனார். ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை.

இரண்டாம் முறையாக கடந்த  பிப்ரவரி 2011 ல் தனது கணவனின் சேமிக்கப்பட்ட விந்தணுக்களைப் பயன்படுத்தி செயற்கையாக கருத்தரிப்பு முயற்சியினை  அனுரிதா மேற்கொண்டபோது, பலருக்கும் இது வீண் முயற்சி என்றே தோன்றியது. ஆனால், அனுரிதாவின் நம்பிக்கை வீண் போகவில்லை. "இதோ, இறந்து விட்ட தன் கணவனின் குழந்தையை ஐந்து ஆண்டுகள் கழித்து தன் வயிற்றில் வெற்றிகரமாகச் சுமக்கிறார் அனுரிதா" என்று சொல்கிறார் டாக்டர் ஃபால்குனி பாவிஷி. அகமதாபாத்திலுள்ள பாவிஷி கருத்தரிப்பு மருத்துவ மையத்தின் தலைவர்.

"அனுரிதாவின் கருமுட்டைகளுடன் இறந்த கணவரின் உறைந்த விந்தணுக்கள் 'செயற்கை'யாக இணைக்கப்பட்டு பின்னர் அந்தக் கலவை அனுரிதாவின் கருவறையில் செலுத்தப்பட்டது. IVF எனப்படும் இந்த செயற்கை முறை கருத்தரிக்கும் மற்ற பெண்களைப் போலில்லாமல் அனுரிதா மிகவும் மன அழுத்தத்துடனே தான்  காணப்பட்டார். ஏனெனில், கணவனின் உறைந்த விந்தணுக்கள் மிகக் குறைந்த அளவே இருப்பில் இருந்தன; அதுவுமில்லாமல், இங்கிலாந்து, துருக்கி, மும்பை ஆகிய இடங்களில் அவர் மேற்கொண்ட செயற்கை முறைகள் தோல்வியைச் சந்தித்திருந்தன. இம்முறை அவருடைய பிரார்த்தனை பலித்துவிட்டது" என்கிறார் டாக்டர் ஹிமான்ஷு பாவிஷி

கருத்துகள் இல்லை: