புதன், 10 ஆகஸ்ட், 2011

பிரபுதேவாக்களுக்கு

பிரபுதேவாக்களுக்கு திருமணம் ஒரு செக்ஸ் லைசென்ஸ்!

Sunday, July 3, 2011 at 1:58 am | 5,969 views
பிரபுதேவாக்களுக்கு திருமணம் ஒரு செக்ஸ் லைசென்ஸ்!
ந்த விஷயத்தை கடைசிவரை என்வழியில் எழுதக் கூடாது என்று ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தோம்.
ஆனாலும், ‘திருமணம் என்பது சமூக ஒழுக்கமல்ல, வெறும் சந்தர்ப்ப தேவை மட்டுமே. காதல் என்பது சாஸ்வதமல்ல, உடல் இச்சையின் எல்லை வரை மட்டுமே’ என்ற புதிய இலக்கணத்தை படைத்திருக்கும் பிரபு தேவா என்ற தவறான முன்னுதாரணத்தை இனி வருபவர்கள் பின்பற்றாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையோடு இதைப் பதிவு செய்கிறோம்!
காதலித்து, பெற்றோரை எதிர்த்து, ரஜினி, தாணு போன்றவர்களின் ஆசியோடு லதா என்கிற ரமலத்தை 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட பிரபு தேவா, அந்த உறவை அதிகாரப்பூர்வமாக வெட்டிவிட்டார். எதற்காக… ரம்லத் சரியில்லை, வாழ்க்கையில் நிம்மதியில்லை… என்பதற்காக அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன்பு ரம்லத்திடமிருந்த வனப்பு இப்போதில்லை. அவரை விட இளமையும் கூடுதல் கவர்ச்சியும் கொண்ட நயன்தாரா என்ற நடிகை கிடைத்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக!
பிரபு தேவா – ரம்லத் விவாகரத்தை உயர்நீதிமன்றம் ஜூலை 2-ம் தேதி சனிக்கிழமை மாலை அறிவித்துவிட்டது.
உடனே, நயன்தாரா பிரவு தேவா திருமணம் எப்போது என மீடியாக்களில் செய்தி பரபரக்கிறது. அது வியாபாரம்…. நடக்கட்டும்!
நம் கேள்வி எல்லாம், திருமணம் என்பது அவ்வளவுதானா? காதல் இல்லையேல் சாதல் என்பது செக்ஸ் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பயன்படும் வெறும் டயலாக்தானா?
செட்டில்மெண்ட் கொடுக்க ஒப்புக் கொண்டால், கணவன் செய்த தவறுகள் மன்னிக்கப்படுமா?
அதேநேரம், இந்தக் கேள்விகளுக்கு பதில்களாய் எழும் எதிர்க்கேள்விகளையும் புறம் தள்ள முடியவில்லைதான்.
ஒரு காலத்தில் மனசுக்குப் பிடித்து, மணந்து… பின் மனம் கசந்த பிறகு நொந்துபோன அந்த வாழ்க்கையைத் தொடரத்தான் வேண்டுமா?
பிடிக்காத கணவன் மேல் கேஸ் போட்டு கோர்ட்டுக்கு அலைந்து செத்து சுண்ணாம்பாவதை விட, கிடைக்கிற செட்டில்மெண்டை வைத்துக் கொண்டு மிச்ச காலத்தை நிம்மதியாகக் கழிப்பதில் தவறென்ன?
-இந்த இருதரப்பு கேள்விகளிலும் உள்ள நியாயங்கள் மறுக்க முடியாதவையே. ஆனால் இந்த நிலைக்கு முக்கிய காரணம், தனி மனித ஒழுக்கம் தவறிப் போனதுதான்.
பலதார மணத்தை முன்னர் ஆதரித்து, ஆராதித்து, இப்போது சட்டத்துக்குப் பயந்து உள்ளுக்குள் கள்ளக்காதலுடன் திரியும் சமுதாயம்தான் இது. இடையில் கொஞ்சகாலம், ராமனின் ஏக பத்தினிக் கதைகள், பலதார மண தடைச் சட்டம் போன்றவை அலைபாயும் ஆண் / பெண் மனங்களைக் கொஞ்சம் கட்டிப் போட்டிருந்தன.
இப்போது அதெல்லாம் ‘ஹம்பக்’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். ஆண் – பெண் இருபாலருமே இதில் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை. அவர்களின் வக்கிரத்தை நியாயப்படுத்தும் அரும்பணியில் இருக்கவே இருக்கின்றன மீடியாக்கள்!
‘நீயும் நானும் இப்போது கல்யாணம் செய்து கொள்ளலாம்… அப்புறம் அவரவருக்குப் பிடித்தவர்களுடன் சுகத்தைப் பரிமாறிக் கொள்ளலாம். அதுவும் சரிப்படாவிட்டால், இருக்கவே இருக்கு விவாகரத்து. ‘சட்டப்படி விபச்சாரம்’ (கற்பு, விபச்சாரம் போன்றவற்றுக்கு இன்றைய சமூகம் தரும் அர்த்தத்தை மனதில் கொண்டு இந்தப் பதத்தைப் படியுங்கள்…!) செய்து கொள்ளலாம்,’ என்பதை ஒரு ஒப்பந்தமாகப் போட்டுக்கொள்ளாதது மட்டும்தான் பாக்கி.
அட நாசமாப் போனவர்களா… இந்த கல்யாணம், கட்டில் சுகம், கள்ளக் காதல், விவாகரத்து போன்றவற்றுக்கு நடுவில் கிடைத்த குழந்தைகள் என்ற விலை மதிப்பில்லா பொக்கிஷங்களை நாசமாக்குகிறோம் என்ற எண்ணமே உங்களுக்கு தோன்றுவதில்லையா? நாளைய சமூகம் முழுக்க பிரபுதேவாக்கள், பிரகாஷ்ராஜ்கள், நயன்தாராக்கள் என விஷமாய் நிரம்பி வழியப் போகும் அபாயத்தை உணரவே மாட்டீர்களா… அந்த கற்கால திறந்த வெளி செக்ஸில் இந்த சமூகம் சங்கமிக்கத்தான் இத்தனை பாடு படுகிறீர்களா..!
யோசித்துப் பார்த்தால், எனக்கு நினைவு தெரிந்த பிறகு, பல முறை என் அப்பா அம்மா சண்டை போட்டிருக்கிறார்கள். அடிதடி வரை கூட போயிருக்கிறது. இரண்டு நாள் பேசாமல் இருந்திருக்கிறார்கள். தாத்தாவின் தலையைக் கண்டதும் அந்த சண்டை பிசுபிசுக்கும். பின்னர் மெல்ல நாங்கள் தூதுவர்களாகி, அவர்களை சமாதானப்படுத்தி, அப்புறம் இருவரும் அன்புடன் எங்களுக்கு சோறூட்டிய நாட்கள் இன்னும் மனதுக்குள் நிரம்பித் ததும்புகின்றன. அந்த சண்டைகள் விவாகரத்து வரை போகாததன் காரணம், நயன்தாராக்கள் கிடைக்காததாலா… இல்லை! தன்னை உணர்ந்து, தன்னை நம்பியுள்ளவர்களின் உணர்வுகளை, உறவுகளை மதித்ததால்!
என் மனைவியுடன் எனக்கு மனஸ்தாபம் வரும் சமயங்களில், என் தாய் தந்தையரின் அந்த பழைய ‘சண்டையும் சமாதானமும்’ மனதுக்குள் நிழலாடி, அடுத்த நிமிடமே எங்கள் ஊடலைத் துடைத்துப் போடுவதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. பிரபுதேவாக்களே, உங்களுக்கு இப்படிப்பட்ட தாய் தந்தைகள் அமையவில்லையா…
நியாயமான காரணங்கள், சேரவே முடியாத அளவுக்கு மனப் பிளவுகள் இருந்தால், விவாகரத்து அனுமதிக்கப்படக் கூடியதே. அறுத்துக் கட்டுதல் என்பது தமிழ் சமுதாயம் அறியாததுமல்ல. ஆனால் அதற்கெல்லாம் நியாயமான காரணங்கள் தேவைப்பட்டன அன்று. ஆனால் காரணத்தை தேடி வைத்துக் கொண்டு விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது பிரகாஷ்ராஜ், பிரபுதேவாக்கள் ஸ்டைல் ஆகிவிட்டது. இன்னொரு அழகிய பெண் கிடைத்துவிட்டாள் என்பதற்காகவே விவாகரத்து கோரியவர்கள் இவர்கள்.
‘இந்த உலகத்துல ஒண்ணைவிட ஒண்ணு பெட்டராதான் தோணும்…’ அதற்காக…?
ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் பெற்றோர். அதில் விபச்சாரத்தையும் கள்ளத்தனத்தையும் வக்கிரத்தையும் மட்டுமே கற்றுத் தந்தால்… அன்புக்கு அவர்கள் அகராதியில் ‘காண்டம்’தானே குறியீடாகத் தெரியும்!
-வினோ
என்வழி.காம்
You might also like:

கருத்துகள் இல்லை: