ஞாயிறு, 9 அக்டோபர், 2011

உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை

உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 150கோடியைத் தாண்டுகிறது. அதாவது உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பாகம் முஸ்லிம்கள் ஆவர். இவர்களில் சன்னி முஸ்லிம்கள் 140 கோடி. அதே நேரத்தில்,உலக கத்தோலிக்க கிறித்தவர்களின் எண்ணிக்கை 130 கோடி ஆகும்.

பியூ மைய ஆய்வாளர்கள் கடந்த மூன்றாண்டுகளாக 232 நாடுகளிலும் பகுதிகளிலும் மேற்கொண்ட ஆய்வில் இந்தப் புள்ளிவிவரம் கிடைத்தது. ஆயினும்,உண்மையில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை இதைவிட ...அதிகமாக இருக்கும் என்கிறார் ஆய்வாளர்களில் மூத்தவரான பிரியன் கிரைம். ஏனெனில், இந்த ஆய்வெல்லாம்2009 மக்கட் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் அவர்.

எடுத்துக்காட்டாக, ஐரோப்பாவில் பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்கிறது இந்த ஆய்வு. 2001ஆம் ஆண்டு பிரிட்டனில் 16 லட்சமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2011லும் அதே அளவில் உள்ளதாக இந்த ஆய்வு காட்டுகிறது. உண்மையில் பிரிட்டனில்25 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 80 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால், பியோவின் ஆய்வில் 46 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் முஸ்லிம்கள் எண்ணிக்கையிலும் இதே நிலை காணப்படுகிறது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பத்து பெரிய நாடுகள் ஆசியாவில்தான் உள்ளன. எகிப்து, அல்ஜீரியா,மெராக்கோ, துருக்கி போன்ற நாடுகளும் இவற்றில் அடங்கும். உலக முஸ்லிம்களில் 20 சதவீதம்பேர் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்காவில்தான் உள்ளனர். அதாவது உலக முஸ்லிம்களில் ஐவரில் ஒருவர் இந்நாடுகளில் வசிக்கின்றார். 62 விழுக்காடு முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் மேற்கே துருக்கி முதல் கிழக்கே இந்தோனேஷியா வரை பரவியுள்ளனர்.

ஆனால், இந்த ஆய்விலிருந்து சில உண்மைகள் வெளிப்பட்டுள்ளன; அவற்றை ஆய்வுக் குழுவால் மறைக்க முடியவில்லை. முஸ்லிம்கள் என்றாலே அரபியர்தான்; அரபியர் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற வாதம் தவறு என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. ஆம்! உலக முஸ்லிம்களின் எண்ணிக்கையில் ஒரு சிறு விழுக்காடுதான் மத்திய கிழக்கு நாடுகளான அரபுநாடுகளில் இடம்பெறுகிறது.

உலக முஸ்லிம்களில் ஷியா பிரிவினர் வெறும் 10 விழுக்காடு முதல் 13 விழுக்காடுதான். ஷியா முஸ்லிம்களில் 80 விழுக்காட்டினர் உலகில் ஈரான், பாகிஸ்தான், இந்தியா, இராக் ஆகிய நான்கு நாடுகளில் வசிக்கின்றனர்.

ஆக, இஸ்லாம் உலக மதங்களில் இரண்டாவது பெரிய மார்க்கமாகும். கிறித்தவம் -அதன் அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து- உலகின் முதலாவது பெரிய மதமாகும். உலகக் கிறித்தவர்களின் எண்ணிக்கை 202 கோடி ஆகும்.

கடந்த 2010ஆம் ஆண்டு வாடிகன் வெளியிட்ட ஓர் அறிக்கை பின்வருமாறு அங்கலாய்க்கிறது: கத்தோலிக்கத்தை இஸ்லாம் முந்திவிட்டது. 1900ஆம் ஆண்டில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முஸ்லிம்கள் உலக மக்கள் தொகையில் 12.3 விழுக்காடு இருந்தனர். அண்மையில் இது இரட்டிப்பாகி உள்ளது. உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 11 சதவீதம் உயர்ந்து 23 சதவீதத்தை எட்டிவிட்டது.

இந்த உயர்வு பழைய முஸ்லிம்களின் பெருக்கம் மட்டுமே என்றும் யாரும் கருதினால் அது உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவு. வேறு மதத்தார் இஸ்லாத்தில் அதிக எண்ணிக்கையில் இணைந்துள்ளனர் என்பதையே இந்த உயர்வு காட்டுகிறது.

பியூ அமைப்பின் துணை மேலாளர் அலன் கூப்பர்மன் [Alan Cooperman] குறிப்பிடுகிறார்: ஐரோப்பிய முஸ்லிம்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றே பலரும் கருதுகின்றனர். இது மேற்கு ஐரோப்பாவிற்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஐரோப்பாவின் மற்றப் பகுதிகளான ரஷியா, அல்பானியா, குசோவா ஆகிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அங்குள்ள பூர்வீகக் குடிகளே. ஆக, ஐரோப்பிய முஸ்லிம்களில் பாதிக்கும் அதிகமானோர் மண்ணின் மைந்தர்கள்தான். மேற்கு ஐரோப்பாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

கூப்பர்மேன் மற்றொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறார்: சில நாடுகள் பற்றி‘முஸ்லிம் நாடுகள்’ என்ற எண்ணமே யாருக்கும் தோன்றாது. ஆனால், அங்கெல்லாம் முஸ்லிம்கள் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் எடுத்துக்காட்டுகளாகும்.

ஆனால், அவர் குறிப்பிடும் நாடுகளில் இஸ்லாத்தின் அழுத்தமான வேர்கள் பரவியிருப்பதை வரலாறு கூறும். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் 1 கோடியே 61 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அதாவது இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தியாதான். பெரிய அரபு நாடாகக் கருதப்படும் எகிப்தில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையில் இது இரு மடங்காகும்.

அவ்வாறே, ஜெர்மனில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை, லெபனானில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிடப் பெரியது. ஜோர்தான், லிபியா ஆகிய இரு நாடுகளின் முஸ்லிம் எண்ணிக்கையைவிட ரஷிய முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட எத்தியோப்பியா முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகம். சிரியா முஸ்லிம்களைவிட சீன முஸ்லிம்கள் அதிகம்.

சீனாவில் முஸ்லிம்கள் 2.2. கோடிபேர் உள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்தாலும், 5 கோடிபேர் இருக்கலாம் என்கின்றன கணக்கெடுப்புகள். சீனாவிலுள்ள முஸ்லிம்கள் அமைப்பு ஒன்று, சீனாவில் 10கோடி முஸ்லிம்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றது.

சீனாவுக்கும் இஸ்லாத்திற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. ஹிஜ்ரீ 29ஆம் ஆண்டிலேயே கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் சீனாவுக்கு ஒரு குழுவை அனுப்பினார்கள். நபித்தோழர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தலைமையில் சென்ற அக்குழுவினர், அப்போதைய சீனப்பேரரசர்‘வீ’யைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தனர். அவர் இஸ்லாத்தின் கொள்கைகளைக் கேட்டு வியந்துபோனார். அத்துடன் கான்தூனில் ஒரு பள்ளிவாசலை எழுப்புமாறு ஆணையிட்டார். அது 15நூற்றாண்டுகளாக சீனாவில் இஸ்லாத்தை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது.

சோவியத் ஒன்றியம் சிதைந்தபிறகு ரஷியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2 கோடி ஆகும். ஆனால், 1.65 கோடி என்கிறது பியூ அறிக்கை. சுமார் 10 லட்சம் முஸ்லிம்கள் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் வாழ்கின்றனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே ரஷியாவில் இஸ்லாம் அறிமுகமாகிவிட்டது. கி.பி. 642ஆம் ஆண்டில் ஆதர்பீஜானில் முஸ்லிம்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. 1924 புரட்சிக்குப் பிறகு முஸ்லிம்கள் பகுதிகளில் உரிமைகள் பறிக்கப்பட்டன. வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது. பல பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன.

இஸ்லாமிய நாடுகள் அல்லாத நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். எத்தியோப்பியா: 2.8 கோடி (மொத்த மக்களில் 34 விழுக்காடு);தான்ஸானியா: 1.3 கோடி (30 விழுக்காடு);ஐவரிகோஸ்ட்: 80 லட்சம் (37 விழுக்காடு); மொஸம்பிக்: 50 லட்சம் (23 விழுக்காடு); பிலிப்பைன்: 40.7லட்சம் (5%) ஜெர்மன்: 40 லட்சம் (5%).

எல்லாம் சரி! இவ்வளவு பெரிய வலுவான சக்தியை உலக அளவில் ஒருங்கிணைக்க யாருமில்லையே! நமது பலத்தை உலகம் அறிந்துள்ளதா? நமது குரலுக்கு மரியாதை உள்ளதா? ஐக்கிய நாடுகள் சபையில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் பதவி பாதுகாப்பு மன்றத்தில் முஸ்லிம்களுக்கு உண்டா? அதில் ஐ.நா.வுக்கு அடுத்து பெரிய அரசு அமைப்பாக விளங்கும், 57 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்புக்கு ஐ.நா.வில் அங்கம் உண்டா?
மேலும் பார்க்க