வியாழன், 18 ஆகஸ்ட், 2011

காவல்துறைக்கு மூன்றாவது கண்ணாக

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கும் பொது இடங்களைக் கண்காணிப்பதற்கும், காவல்துறைக்கு மூன்றாவது கண்ணாக பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. ÷2008 நவம்பர் 26-ல் நிகழ்ந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பிடிபட்ட ஒரு குற்றவாளி அஜ்மல் கசாப் ஒரு சலனமுமின்றி சகட்டுமேனிக்கு மும்பை ரயில் நிலையத்தில் அப்பாவி பிரயாணிகளைச் சுட்டுக்குவித்தது இந்த மூன்றாவது கண் கேமராக்கள் மூலம் பிடிக்கப்பட்ட படங்கள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டதைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. ஒரு வழியாக வழக்கும் முடிவுற்றது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதை நிறைவேற்றுவதில்தான் நடைமுறை சட்டரீதியான தடைக்கற்கள்.  ÷மும்பை காவல்துறையைச் சேர்ந்த துக்காராம் ஓம்ப்ளே, கசாப்பின் ஏகே 47 ரக துப்பாக்கியைப் பிடித்து அவனது தாக்குதலை எதிர்கொண்டபோது உயிரிழந்தார். மனேஷ் என்ற இந்தியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஜவான் மும்பைத் தாக்குதலின்போது தனது உயிரைத் துச்சமாக மதித்து தீவிரவாதிகளை எதிர்கொண்டு கொடிய காயமுற்றாலும் பொருள்படுத்தாது மக்களைக் காப்பாற்றினார். மக்களுடைய பாராட்டைப் பெற்றார். சூரிய சக்கர விருது வழங்கப்பட்டது. ஆனால், காயங்கள் முழுவதும் குணமடையவில்லை. ஆயுர்வேத சிகிச்சைக்கு மாதம் ரூ. 4,000 செலவு அரசு விதிகளின்படி வழங்க முடியாது. அது அவரது சொந்தச் செலவு. ஆனால், தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்ட குற்றவாளிகளுக்குச் சிறையில் நல்ல கவனிப்பு, பூரண மருத்துவ சிகிச்சை!  ÷நாம் நமது பாதுகாப்பு வீரர்களைப் போற்றுவதில்லை. ஓர் அசம்பாவிதம் நடந்த பிறகு அதனை ஆராய்ந்து வருங்காலத்தில் அந்த நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை. அந்த நிகழ்வு கற்பிக்கும் பாடங்கள் என்ன என்பதை உணர்ந்து தெளிவு பெறுவதில்லை. அதனால் தான் என்னவோ தீவிரவாதம் தொடர்கதையாகவே உள்ளது. முடிவுக்கு வந்தபாடில்லை.  ÷2001 செப்டம்பர் 11-ம் நாள் நியூயார்க் இரட்டைக் கோபுர கட்டடம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதில் 2,752 பேர் பலியாயினர். ஸ்பெயின் தலைநகரம் மாட்ரிட்டில் ரயில் நிலையங்களில் தீவிரவாதத் தாக்குதல் மார்ச் 11-ம் தேதி 2004ல் நிகழ்ந்தது. அதில் 191 பேர் மாண்டனர். ஜூலை 7-ம் நாள் 2005-ல் லண்டன் மாநகரில் தீவிரவாதத் தாக்குதல் பல இடங்களில் ஒரே நாளில் நிகழ்ந்தது. 52 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஆனால், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அந்த நாடுகளில் பெரிய அளவில் வேறு தீவிரவாதத் தாக்குதல் நடைபெறவில்லை. அந்த நாடுகள் சுதாரித்துக் கொண்டு தீர்க்கமான தடுப்பு நடவடிக்கைகளையும் சட்ட மாறுதல்களையும் காவல்துறையைப் பலப்படுத்தும் வழிமுறைகளையும் துரிதமாக நிறைவேற்றின. லண்டன் மாநகரில் பிரத்யேகமாக தீவிரவாத ஒழிப்புப் படை உருவாக்கப்பட்டது. 1,500 வீரர்களைக் கொண்ட இந்தப் படை லண்டன் மாநகரின் 78 லட்சம் மக்களுக்கு உயர்ரக பாதுகாப்பு அளிக்கிறது.  ÷26.11.2008 தாக்குதலுக்குப் பிறகு மும்பையில் 720 வீரர்களைக் கொண்ட தீவிரவாத ஒழிப்புப் படை உருவாக்கப்பட்டது. "போர்ஸ் ஒன்' என்று பிரத்யேகப் பாதுகாப்பு படையும் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் மும்பை நகரத்தின் மக்கள்தொகை 1.25 கோடி கடலில் கரைத்த பெருங்காயமாக முக்கிய நபர்கள் பாதுகாப்பில் அவை கரைந்து விடுகின்றன.  ÷மும்பையில் அதிக உயிர்களைப் பலி கொண்ட தீவிரவாதத் தாக்குதல் 1993-ல் நிகழ்ந்தது, அந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து மீண்டும் 2003, 2006, 2008 இப்போது ஜூலை 13/2011 மூன்று குண்டுவெடிப்புகள் இதில் உயிரிழப்பு 26. ஒன்று இரண்டு தாக்குதல்களை மக்கள் சகித்துக் கொள்வார்கள். அதுவே தொடர்ச்சியாக நிகழ்ந்தால்? "ஸ்பிரிட் ஆப் மும்பை' என்று அந்த நகர மக்கள் துணிவோடும், மனதிடத்தோடும் எதையும் எதிர்கொள்கிறார்கள் என்று புகழ்ந்து விட்டு மறந்துவிட முடியுமா? மும்பை நகரம் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்று பெருமை கொள்கிறோம். அந்த நகரத்தில் போதிய பாதுகாப்பு இல்லையென்றால் மேலும் முதலீடு செய்ய யார் முன்வருவார்கள்? முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் மும்பையிலிருந்து தில்லிக்குச் செல்ல எத்தனித்துள்ளார்கள் என்றும் செய்தி வந்துள்ளது.  ÷இந்தியா என்ன இவ்வளவு சாதுவான நாடா, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற நிலையா என்று கேள்வி எழுகிறது. 2004-ல் இருந்து 41 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 3,674 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது, முறியடிப்பது என்பது பற்றி விவாதங்களும், சர்ச்சைகளும் ஓய்ந்தபாடில்லை.  ÷நுண்ணறிவுப்பிரிவு (இன்டலிஜன்ஸ்) உரிய தகவல்களைக் கொடுக்கவில்லை. நிறையத் தகவல்கள் வருகின்றன. அவை சரியாக ஆராயப்படவில்லை. தகவல்கள் கொடுக்கப்பட்டன. அவை சரியாக விசாரிக்கப்படவில்லை. கொடுத்த தகவல் உண்மையானதாக இல்லை. நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல் கொடுக்கப்படவில்லை என்று பலவகையான குற்றச்சாட்டுகள் ஒருவரை ஒருவர் சாடும் வாதங்கள்.  ÷26/11/2008 சம்பவத்துக்குப் பிறகு முன்னாள் உள்துறைச் செயலர் ப்ரதான் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, இத்தகைய நிகழ்வுகள் வருங்காலத்தில் எவ்வாறு தடுக்கப்பட வேண்டும் என்று ஆராய்ந்து மும்பை நகரம் மற்றும் மாநிலக் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பன்னிரெண்டு கடலோர காவல்நிலையங்கள் திறக்கப்பட்டன. கரையை ஒட்டி ஆழமில்லாத கடல் பகுதியில் ரோந்து செய்வதற்கு விசைப்படகுகள் வழங்கப்பட்டன. பிரத்யேக பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது. மேலும் பல நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றும் சுமார் எண்பது சதவிகிதம் ப்ரதான் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டன என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், படகுகள் ஓட்டப்படாமல் பழுதடைந்து கவிழ்த்து வைக்கப்பட்டநிலையில் உள்ளதை ஊடகங்கள் படம்பிடித்துக் காண்பித்தன. படகுகளை ஓட்டுவதற்குத் தேவையான டீசல் கொடுக்கப்படுவதில்லை என்பதும் ஒரு காரணம்.  ÷திட்டங்கள் தீட்டப்படுகின்றன. குறைபாடுகள் அறியப்படுகின்றன. ஆனால், செயலாக்கத்தில் தவற விட்டுவிடுகிறோம். இது எல்லாநிலைகளிலும் காணப்படுகிறது. ப்ரதான் கமிட்டி பரிந்துரைகள் மூலம் முக்கியமான கருவிகள் நவீன உபகரணங்கள் மும்பை போலீஸýக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால், தகவல் சேகரிக்கும் முறை நுண்ணியமாக்கப்படவில்லை. உயர்தர பயிற்சி இதில் மிக அவசியம். தீவிரவாத இயக்கங்களை ஊடுருவி தகவல் சேகரித்தால்தான் இத்தகைய இயக்கங்களின் கொடூரமான திட்டங்களை முறியடிக்க முடியும். குருதிப்புனல் படத்தில் இத்தகைய தீவிரவாத ஊடுருவல் தத்ரூபமாக சித்திரிக்கப்பட்டிருக்கும். வீரப்பன் கும்பல் பிடிபட்டதும் இத்தகைய ஊடுருவல் மூலமாகத்தான் சாத்தியமானது.  ÷தீவிரவாத இயக்கங்களுக்கு மதச்சாயம் பூசக்கூடாது. தீவிரவாதிகள் மதங்களின் போர்வையில் மறைந்து மதவெறியைத் தூண்டுவார்கள். எங்கு பிரச்னைகள் இருக்கிறது என்பதை அறிந்து அந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட மக்களைத் தீவிரவாத இயக்கங்களுக்கு இரையாக்கத் தூண்டில் போடுவார்கள். இத்தகைய தீவிரவாத தேர்வு மையங்களைப்பற்றி தகவல் சேகரித்து முறியடிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு தீவிரவாத ஒழிப்புப்படைக்கு உள்ளது. அதே சமயம் தீவிரவாதத்துக்கு வித்திடும் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டியது அரசின் பொறுப்பு. சமுதாய, பொருளாதார முன்னேற்றத்தில் எல்லா இனத்தவரும் மேன்மையடைந்தால்தான் ஆரோக்கியமான வளர்ச்சி உண்டாகும். முன்னேற்றத்தில் நமக்குப் பங்கு இல்லை என்றோ, புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு வேரூன்றினால் அது தான் தீவிரவாத பிரசாரம் வளர்வதற்குக் காரணமாக அமைந்துவிடும். முதிர்ந்த அரசியல் விவேகம் இருந்தால்தான் இத்தகைய எதிர்மறை உணர்வுகள் வளராமல் பாதுகாக்க முடியும்.  ÷தீவிரவாதிகளின் வஞ்சகமான எண்ணங்களுக்கு இணையானது அதைவிடக் கொடூரமான அவர்களின் செயல்கள், அதன் விளைவுகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு. ஆந்தர் பிரஸ்நிக் என்ற 32 வயது கொடூரன் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் ஜூலை 23-ம் நாள் தனிமனிதனாக தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதில் 92 இளைஞர்கள் உயிரிழந்தனர்.  ÷தனிநபர் தீவிரவாதமாக இருந்தாலும் ஓர் இயக்கம் மூலமாக பயங்கரவாத முறைகளைக் கையாண்டாலும் பாதிப்பு பொதுமக்களுக்குத்தான். அதுதான் இந்த இயக்கங்களின் குறிக்கோளும்கூட. இத்தகைய நிகழ்வுகளை எவ்வாறு நடக்காமல் தவிர்ப்பது என்பதில் காவல்துறையும், சமூக அமைப்புகளும், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் முடியும். காவல்துறைக்கு ஆள்பற்றாக்குறை என்பது எப்போதும் சொல்லப்படும் காரணம், முக்கிய நபர்கள் பாதுகாப்பு, விஷேசங்களுக்கும், விழாக்களுக்கும், பாதுகாப்பு என்று காவலர்களை விரயமாக்குவது தவிர்க்கப்பட்டு பொது இடங்கள், பொது மக்களின் பாதுகாப்பு சீரமைக்கப்பட வேண்டும் என்பது எல்லோருடைய ஒருமித்த கருத்து. இத்தகைய இயங்காத அசைவற்ற பணிகளுக்கு பிரத்யேகமாக ஒரு பாதுகாப்புப் படை உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து மும்பை பயங்கரவாதத்துக்குப் பிறகு பரிசீலிக்கப்பட்டு இதர பணிகளுக்காகத் தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அணி ஆந்திர மாநிலத்திலும் இயங்குகிறது. இதன் மூலம் தேர்ச்சி பெற்ற காவலர்கள் சாதாரணப் பாதுகாப்பு பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு பொதுஇடங்களின் பாதுகாப்பில் ஈடுபடுத்த முடியும்.  ÷இன்னொரு முக்கிய நடவடிக்கை பொதுமக்களின் எதிர்பார்ப்பை எந்த அளவு காவல்துறை பூர்த்தி செய்திருக்கிறது என்பது பற்றி அவ்வப்போது பாரபட்சமின்றி தணிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் எந்தெந்த இடங்களில் பாதுகாப்பு தொய்வு இருக்கிறது, எங்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவு செய்ய முடியும்.  ÷ஏதோ மற்ற நகரங்களில் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்று நாம் அசட்டையாக இருந்து விட முடியாது. நிரந்தர விழிப்புணர்வுதான் முழுமையான பாதுகாப்புக்கு அடித்தளம். அதற்கு காவல்துறையின் பணிகள் கண்ணியம், கனிவு, கடமையுணர்வோடு அமைய வேண்டும். நில அபகரிப்பு புகார்கள் இப்போது குவிவதைப் பார்த்தால் முன்பு ஏன் காவல்துறை பாராமுகமாக இருந்துள்ளது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அப்போதிருந்த உயர் அதிகாரிகளின் மெத்தனப்போக்குத்தான் காரணம் என்பதில் ஐயமில்லை. இத்தகைய நேர்மையற்ற செயல்கள்தான் அசாதாரண பிரச்னைகளுக்கு வித்திடுகின்றன.  ÷"நெட்டை மரங்களாக நின்று புலம்பினர் பெட்டைப்புலம்பல் பிறர்க்கு துணையாமோ' என்ற பாரதியாரின் வரிகளை நினைவில் வைத்து பெட்டைப் புலம்பலைத் தவிர்த்து பொதுமக்கள் பாதுகாப்பில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும். 

கருத்துகள் இல்லை: