வியாழன், 18 ஆகஸ்ட், 2011

முல்லைப் பெரியாறு அணை



First Published : 17 Aug 2011 05:00:57 AM IST


1947-ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டபோது, சிந்து நதி தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி தலைகாட்டின. இருவேறு தேசங்கள், இருவேறு மக்கள், இருவேறு ஆட்சியாளர்கள் என்று முகம் திருப்பிக் கொண்டிருந்தபோதும், 1960-ம் ஆண்டுகளில் சிந்துநதியின் நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தில் கண்டுள்ள விவரங்களின்படி மாற்றங்கள் ஏதுமின்றி சிந்து நதி நீர்ப்பங்கீடு இன்றும் தொடர்கிறது. இருநாடுகளுக்கிடையே, சண்டைகள், சச்சரவுகள், எல்லைகளில் ஊடுருவல்கள், போர்கள் என்று நடந்த பொழுதும் நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் மட்டும் மீறப்படவேயில்லை. இதுபோலவே இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கான நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கைகள் 1996-ல் கையெழுத்தானது. அதிலும் பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை. 1997-ம் ஆண்டு இந்தியாவும், நேபாளமும் மகாகாளி ஆற்றுநீரைப் பங்கிடுவதுபற்றி 1992-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையைச் சீரமைத்து, 1997-ம் ஆண்டு புதிய உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அந்த உடன்படிக்கையும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றில் ராணுவத் தாக்குதல்கள் மற்றும் எல்லைப் பிரச்னைகள் பல இருந்தாலும் நாட்டுக்கு நாட்டுடனான தண்ணீர் உரிமைகளை மதித்தே வந்திருக்கின்றன,  வருகின்றன. இஸ்ரேல் - சிரியா, ஈரான் - இராக் போன்ற நாடுகளிலும்கூட நீர் உரிமைகள் மீறப்படுவதில்லை. ஆனால், இவற்றுக்கு நேரெதிராக, எதிரியாகத் தண்ணீர் பங்கீட்டு உரிமைகளை மதிப்பதற்குப் பதிலாக காலில் போட்டு மிதிக்கிற நிலை இந்திய மாநிலங்கள் சிலவற்றில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் கேரள மாநிலம். 2002-2003-ம் ஆண்டுகளில் பவானி நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஒன்றான முக்காலியில் அணைகட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. அதுகுறித்து அப்போது பரவலான செய்திகள் வந்தன.  ஆனால், அந்த அணை கட்டும் முயற்சி எந்த நிலையில் இருக்கிறது என்ற தகவல் இப்போது ஏதும் தெரியாத நிலை உள்ளது. இதற்கு முன்பாகவே, கம்பம் பள்ளத்தாக்கு, சிவகங்கை மற்றும்  ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஜீவாதாரமாகிய முல்லைப் பெரியாறு அணையிலும், கேரளம் தனது ஆளுமைக்கரங்களை மிக அழுத்தமாகப் பதித்துக்கொண்டு முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கிறது. 1801-ம் ஆண்டு சென்னை ராஜதானிக்கு உள்பட்ட தமிழகத்தில் மழைவளம் குறைவுற்றது.    அதன் காரணமாக 1806 முதல் 1840 வரை சுமார் 34 ஆண்டுகள் பஞ்சமோ பஞ்சம்.  தடுமாறிய வெள்ளையர் அரசு, நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி விவசாய உற்பத்தியைத் தேவைக்கேற்ப அதிகரிக்கத் திட்டங்களைத் தயார் செய்தது. நீர்ப் பாசனங்கள் முறையாக நடக்க வேண்டும் என்பதற்காக நீர்வள ஆதாரங்கள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆகியவற்றைக்  கணக்கெடுக்கவும், கண்டறியவும் தனது பொறியாளர்களுக்கு உத்தரவிட்டது. அப்பொறியாளர்கள் குழு கண்டுபிடித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் முதன்மையானது இப்போது முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கும் பகுதியாகும். இந்த நீர்ப்பிடிப்புப்  பகுதி பற்றி விரிவான ஆய்வுகள் நடத்தி, புள்ளிவிவரங்கள், காடுகளின் பரப்பளவு, இயற்கை வளம் ஆகியவற்றின் தன்மைகளை ஆராய்ந்து தெளிவு பெற்றபின், 29.10.1886-ல் சென்னை ராஜதானி அரசுக்கும் திருவிதாங்கூர் அரசுக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டுவது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானது. 1887-ம் ஆண்டு சென்னை கவர்னர் கன்னிமாராவும், அவரின் தனிச்செயலர் ஹாரிங்டனும், மதுரை ஆட்சியரும் தேக்கடிக்கு அருகில் முல்லைப் பெரியாறு அணையின் சுரங்க வேலைகளைத் தொடங்கிவைத்தனர். இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கூத்து நடந்தது. அந்தக் கூத்தின் மூலமாகத்தான் இன்றுள்ள முல்லைப் பெரியாறு பிரச்னைகள் தொடர்கின்றன. இப்போது முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடத்தில் இருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் கொட்டாரக்கரை, அடூர் என்ற இடங்களிருக்கும் பகுதியிலேயே திருவிதாங்கூர் சமஸ்தான எல்லை முடிவுறுகிறது. ஆனால், முல்லைப் பெரியாறு அணைப்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதி எனத் தவறாகக் கணக்கிட்டு, 1862-ல் சென்னை ஆங்கிலேயே அரசு அணைகட்ட அனுமதி கேட்டுக் கடிதம் எழுத, அந்த இடத்துக்கும் தன்னுடைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் சம்பந்தமில்லை என்று அரசர் ஒதுங்கிக் கொண்டார். இது புரியாத ஆங்கில அரசு, மீண்டும் 1863 மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கவர்னர் வாயிலாகக் கடிதம் எழுதியது. தனது ஆளுமைக்கே உள்படாத பகுதியைச் சென்னை அரசு தானே முன்வந்து கேட்கும்போது ஏன் மறுக்கவேண்டும் என்று நினைத்த திருவிதாங்கூர் அரசர் முறைப்படி அனுமதி அளித்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குத் தொடர்பில்லாத, உரிமையில்லாத பகுதியில் அணைகட்ட அனுமதி வாங்கி, சுதந்திரத்துக்குப்பின் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, அந்தப் பகுதி கேரள அரசின் ஆளுமைக்கு உள்படுத்தப்பட்டது. இந்தக் குளறுபடிகளால் தமிழகத்தின் உரிமை சட்டரீதியாக வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டது. திருவிதாங்கூர் ஒப்பந்தத்துக்குப் பிறகு, 1874-ம் ஆண்டு பொறியாளர் பென்னிகுக் தலைமையில் மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு மற்றும் முல்லை நதிகளுக்கிடையே அணைகட்டும் பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்தது. அடர்ந்த வனப்பகுதியில் 3,500 அடி உயரத்தில் 4,290 மில்லி மீட்டர் மழைப் பொழிவுள்ள இடத்தில் அணை கட்டி எழுப்பப்பட்டது. தமிழகத்தில் இருந்தே இந்த அணை கட்டத் தேவையான கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன. குறிப்பாக, இப்பொருள்களின் அனுப்பும் தளமாக மதுரை விளங்கியது. பல்வேறு சோதனைகளுக்கிடையே 176 அடி உயரமும், 152 அடி நீர்த்தேக்க அளவும் கொண்ட அணை கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. இங்கு நினைவுகூரத்தக்கவர் பொறியாளர் பென்னிகுக். சென்னை ராஜதானி அரசு பல்வேறு காரணங்களால் முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்தை நிறுத்தியபோதும், இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகள் அனைத்தையும் விற்று அதன் மூலம் அணையைக் கட்டிமுடித்த பெருமகன் அவர். 1895-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டு, 999 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள இந்தியக் கவுன்சில் செயலகமும், திருவிதாங்கூர் சமஸ்தானமும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இவ்வொப்பந்தத்தில் சென்னை ராஜதானி சார்பாக ஜான் ஹைல்ட் ஹாமில்டனும், திருவிதாங்கூர் சமஸ்தானம் சார்பாக திவான் வெங்கட்ராமையங்காரும் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி நீர்பிடிப்புப் பகுதி 9,777 சதுர கிலோ மீட்டருக்கும், நீரில் மூழ்கும் பகுதி 8,000 ஏக்கருக்கும் தமிழக அரசு, கேரள அரசுக்கு ஆண்டுக்கு 4,000 ரூபாய் வாடகை செலுத்தி வந்தது. 1960-ம் ஆண்டுக்குப் பிறகு 2,57,789 ரூபாய் செலுத்தி வருகிறது. இப்போது இந்தக் குத்தகைத்தொகை எவ்வளவு என்று அரசுதான் கூற வேண்டும். இந்த நிலையில் 25.11.1979-அன்று அணையின் நீர்மட்ட உயரம் 152 அடியில் இருந்து 135 அடியாகக் குறைக்கப்பட்டது. இந்தச் செயலே முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பங்கீட்டு உரிமைச் சிக்கலுக்கு மூலகாரணியாகி விட்டது. அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்கிற எண்ணப்பாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் கேரள அரசு மூலம் பின்னப்பட்ட சதிவலைகள் ஏராளம். கேரளத்திலுள்ள காம்ரேட்டுகளும், காங்கிரஸ்காரர்களும் முல்லைப் பெரியாறை காவுவாங்க தங்களின் முழு மூளையைச் சிந்தாமல் சிதறாமல் செலவழித்தனர். 1976-ம் ஆண்டு கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில், இடுக்கியில் ஒரு மிகப் பெரிய அணை கட்டியது. அவ்வணையின் உயரம் 555 அடிகள்.  நீர்த்தேக்கப் பரப்பு 16,000 ஏக்கர். இவ்வணையில் 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீர்மின் உற்பத்தி நிலையத்தையும் அமைத்தது. போதுமான நீர்வரத்து, போதுமான நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஏதுமின்றி கட்டப்பட்ட அவ்வணைக்குத் தண்ணீர் கிடைக்காது என்று கேரள ஆட்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவர்கள் கண் வைப்பது நமது முல்லைப் பெரியாறின் மீது என்று அப்போது நம்மவர்களுக்குப் புரிந்ததோ புரியவில்லையோ தெரியாது. அப்போது இருந்த கேரள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் பரமேஸ்வரன் நாயர்,  முல்லைப் பெரியாறின் நீர்மட்ட அளவை 136 அடிகளாகக் குறைத்து மீதமுள்ள 16 அடிகள் பெரியாறு அணையின் நீரை இடுக்கி அணைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற பரிந்துரையைச் செய்தார். ஆனால், சென்னை ராஜதானி - திருவிதாங்கூர் ஆகிய அரசுகளின் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் உள்ளதை யோசித்த கேரள அரசு, பீர்மேடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.கே.தாமஸின் மூலம் பெரியாறு அணை பலவீனமடைந்து விட்டது,  அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் அந்த அணை தாங்காது, உடைந்துவிடும் என்று போலிப் பிரசாரங்களையும், பொய் மூட்டைகளையும் கட்டவிழ்த்து விட்டது.  நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற போராட்டத்தைத் தூண்டியது. இது தொடர்பாக 25.11.1979 அன்று பேச்சுவார்த்தை நடந்தபோது மத்திய நீர்வளக் கமிஷன் தலைவராக இருந்தவர் கே.சி. தாமஸ். இவர், கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பேச்சுவார்த்தையின் முடிவில் ரூ.21 கோடியே 51 லட்சம் செலவில் பெரியாறு அணையைப் பலப்படுத்த வேண்டும். அந்தச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை அப்போது தமிழகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராஜா முகமது எதிர்த்துக் கையொப்பம் இடவில்லை. தமிழக அரசு பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. பலப்படுத்தும் பணி நிறைவுபெறும்வரை 136 அடியாக நீர்த்தேக்க அளவு இருக்க வேண்டும் என்றும், பிறகு 152 அடியாக உயர்த்தலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டு முல்லைப் பெரியாறின் நீர்தேக்க அளவு 152 அடியில் இருந்து 136 அடியாக 25.11.1979 அன்று குறைக்கப்பட்டது. இடுக்கி அணை மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டதும், மிகமிக அதிகமான மின் உற்பத்திக்கு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டதும், கேரளத்துக்கு மட்டுமே, முல்லைப் பெரியாறு என்ற எண்ணத்தை ஈடேற்ற செய்யப்பட்ட சதியாகும். எனவேதான், இவையெல்லாம், தமிழகத்துக்குத் தண்ணீர் தந்து வாழ்வளிக்கக் கூடாது என்ற கொடூர துரோகத்தின் விளைவாக நடந்தேறியது. அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டதால் ரூ.70 கோடிக்கு மேல் விவசாய உற்பத்தி இழப்பு ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. அணையின் மின் உற்பத்தித் திறனும் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு உரிய பாசன நீரைத் தரமறுக்கும் வகையில் எவ்விதமான அணை கட்டும் பணியையும் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றையெல்லாம் கேரள அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. பெரியாறு புலிகள் சரணாலயத்தில் இப்போதுள்ள முல்லைப் பெரியாறின் பெரிய அணைக்குப் பதிலாக சிறிய அணை கட்டுவதற்கான சர்வே பணிகளில் 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரள அரசு ஈடுபட்டது. முல்லைப் பெரியாறு அணையில் முழுக் கொள்ளளவு நீரைத் தேக்கிவைத்துக்கொள்ள தமிழகத்துக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் கேரள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இப்போதுகூட புதிய அணை கட்டுவதற்குக் கேரளத்தின் காங்கிரஸ் அரசு பலகோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.  காவிரி என்று வரும்போது கர்நாடகத்திலும், பெரியாறு என்று வரும்போது கேரளத்திலும், பாலாறு என்று வரும்போது ஆந்திரத்திலும் ஏற்படும் அரசியல் ஓர்மை தமிழகத்தில் மட்டும் ஏற்படுவதே இல்லை. இந்நிலையை மாற்றி, ஒட்டுமொத்தமான தமிழகம் திரண்டெழ வேண்டும். அப்போதுதான் நதிநீர் உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் இருந்து மீட்டெடுக்கவும் முல்லைப் பெரியாறு போன்ற நதிகளைப் பறிபோகாமலும் காக்க முடியும்

கருத்துகள் இல்லை: