வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ஈமான்

ஈமான்

17 11 2010
யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் முதன் முதலில் விதி தொடர்பாக (அப்படி ஒன்று இல்லை என மாற்று)க் கருத்துத் தெரிவித்தவர் மஅபத் அல் ஜுஹனீ
என்பவரேயாவார். இந்நிலையில், நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்களும் ஹஜ்’ அல்லது உம்ரா’ச் செய்வதற்காக (புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் யாரேனும் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்கள் கூறிவருவதைப் பற்றிக் கேட்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டோம்.
அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்துகொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சூழ்ந்துகொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப் பக்கத்திலும் மற்றொருவர் அவர்களுக்கு இடப் பக்கத்திலும் இருந்துகொண்டோம். (நான் சரளமாகப் பேசக்கூடியவன் என்பதால் அன்னாருடன்) பேசுகின்ற பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டுவிடுவார் என எண்ணி நானே பேசினேன்.
அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர்
தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்து கல்வி பயில்கின்றனர்” என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, ஆனால், அவர்கள் விதி என்று ஏதுமில்லை எனவும், நடக்கின்ற காரியங்கள் (இறைவன் திட்டமிடாமலேயே) தற்செயலாகத்தான் நடக்கின்றன என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்றேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நானும் என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்கள் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார்மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹுத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கை கொள்ளாதவரை
அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றும் கூறிவிடுங்கள்).
பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை; எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின்
முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார்.
பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை
வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்’ செய்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்” என்றார்.
அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.
அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்” என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்” என்றார்.
அடுத்து அம்மனிதர், இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர்,மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.)” என்று கூறினார்கள்.
அம்மனிதர்,மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள்,உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்” என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் 1



நோன்பைத் தாமதமாகத் திறத்தல்

8 08 2010
இன்று சில பள்ளிகளில் நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்துகின்றனர். சூரியன் மறைந்தவுடன் நோன்பைத் திறக்காமல், சூரியன் மறைந்து 7-10 நிமிடங்கள் கழிந்த பின்பே நோன்பு திறக்கின்றனர். அவர்கள் வெளியிடும் நோன்பு கால அட்டவணையில் கூட சூரியன் மறைவு என்று ஒரு நேரம் போட்டிருப்பார்கள். அதை விட 7-10 நிமிடங்கள் கூடுதலாக நோன்பு திறக்கும் நேரத்தைப் போட்டிருப்பார்கள். கேட்டால் பேணுதல் என்கின்றனர். இவர்களின் இந்த செயல் தவறு என்பதை பின்வரும் ஆதாரங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!
திருக்குர்ஆன் 2:187
“நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 1957
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், ‘இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர் ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! எனறார்கள். அதற்கவர் ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!” என்றார். நபி(ஸல்) அவர்கள். ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?’ என்று கேட்டதற்கும் நபி(ஸல்) அவர்கள் ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, ‘இரவு இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி 1955
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்.
அறிவிப்பாளர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2006
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப்படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)” என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?” என்று கேட் டார்கள். நாங்கள் “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)’ என்றோம். அதற்கு, “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்)
நூல் : முஸ்லிம் 2004
எனவே சூரியன் மறைந்தவுடன் நோன்பாளி நோன்பைத் திறந்து விட வேண்டும். நபி(ஸல்) அவர்களே செய்யாத ஒன்றை பேணுதல் என்ற பெயரில் யார் சொன்னாலும் அதனை ஏற்கத் தேவையில்லை. நாம் அனைவரும் குர்ஆன் , ஹதீஸின் அடிப்படையில் செயல்படுவோம்.



சுபுஹூத் தொழுகையின் முன் சுன்னத்

8 07 2010
சுபுஹூத் தொழுகையின் முன் சுன்னத் சம்பந்தமாக சில முஸ்லிம்கள் செய்யும் தவறு :
நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி 1169
இதிலிருந்து சுபுஹின் முன் சுன்னத் முக்கியமானது என்பதை அறியலாம். ஆனால் சில முஸ்லிம்கள் பள்ளிவாசலில் சுபுஹூ பர்ளு தொழுகை நடக்கும் போது தாமதமாக வந்து முன் சுன்னத் தொழுது விட்டு பின்பு ஜமாஅத்தில் கலந்து கொள்வார்கள். ஆனால் இவ்வாறு செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
‘(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1281,1282
அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள்; என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தொழுது முடித்ததும் நாங்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துகொண்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டோம். அவர், “உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்கிவிடப் பார்க்கிறார்’ என்று கூறினார்கள் என்றார்.
நூல்: முஸ்லிம் 1283
இப்னு புஹைனா (அப்துல்லாஹ் பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது:
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டது; அப்போது ஒரு மனிதர் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுகொண்டிருப்பதை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள்; முஅத்தின் இகாமத் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), “சுப்ஹை நான்கு ரக்அத்களாகத் தொழப்போகிறீரா?” என்று கேட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 1284
அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகை (சுப்ஹுத்) தொழுவித்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் பள்ளி வாசலுக்குள் நுழைந்தார்; பள்ளிவாசலின் ஒரு மூலையில் (சுப்ஹுடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) சேர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததும், “இன்னாரே! இவ்விரு தொழுகைகளில் எதைக் கருதி வந்தீர்? நீர் தனியாகத் தொழுவதற்கா? அல்லது எம்முடன் சேர்ந்து தொழுவதற்கா?” என்று கேட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 1285
அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுது கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மக்கள் அந்த மனிதரை சூழ்ந்துவிட்டனர். அப்போது அந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? என்று (கடிந்தவாறு) கேட்டார்கள்.
நூல்: புகாரி 663
சுபுஹின் ஜமாஅத் நடக்கும் போது ஜமாஅத் தொழுகையை தொழுது விட்டு பின்பு விடுபட்ட முன்சுன்னத்தை பின்பு தொழலாம் என்பதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன் சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
அறிவிப்பவர்: கைஸ் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 2471
“இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருவரை ஸுப்ஹுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், “ஸுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத்கள்” என்று சொன்னார்கள். அதற்கவர், “ஸுப்ஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்களைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்” என்று பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.”
அறிவிப்பவர்: கைஸ் பின் அம்ர் (ரலி)
நூல்: திர்மிதீ 387
நபிவழிப் படி நம் தொழுகைகளை அமைத்துக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை: