வியாழன், 18 ஆகஸ்ட், 2011

மூன்றாவது உலகப்போர் வருமானால் உலகம் தாங்காது.

உலகில் மறக்கமுடியாத நிகழ்வுகள் நிறையவே இருக்கின்றன; நினைக்க வேண்டிய நினைவுகளும் ஏராளம் என்றாலும், நடந்து முடிந்த இரண்டு உலகப் போர்களை மனிதகுலம் மறக்க முடியுமா?  1914-ல் தொடங்கிய முதல் உலகப் போரும்,1944-ல் தொடங்கிய இரண்டாவது உலகப்போரும், உலக வரலாற்றில் முக்கிய அத்தியாயங்கள்; மனிதகுலம் படிக்க வேண்டிய பாடங்கள்; வெற்றி பெற்றே தீர வேண்டும் என எழுத வேண்டிய தேர்வுகள், எனவே இவை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியவை.  இரண்டாம் உலகப்போர் பற்றிய வரலாற்றில் மறக்க முடியாத இரண்டு நாள்களே 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகும். அந்த நாள்களில்தான் உலகம் முன்னும், பின்னும் கண்டறியாத அணுகுண்டுகள் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களில் வீசப்பட்டன.  "தி லிட்டில் பாய்' என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்த அணு அரக்கன் 14 அடி நீளமும் 5 அடி அகலமும் 10 ஆயிரம் பவுண்ட் எடையும் கொண்டதாக இருந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 5,050 கி.மீ. தொலைவில் உள்ள "டீனியன்' என்ற தீவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்துதான் ஹிரோஷிமா நகரில் வீசப்பட்டது. இது நடந்து 3 நாள்களுக்குப் பிறகு நாகசாகி மீது "ஃ பேட்மான்' வெடித்தது.  இதனால் இந்த நகரங்கள் இரண்டும் சுடுகாடாக மாறின; அழுவதற்குக்கூட யாரும் இல்லை. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பதைவிட கரிக்கட்டைகளாக மாறினர் என்றே கூறவேண்டும். அழிவும், அதிர்ச்சியும் ஏற்படுத்திய சோக வடுக்கள் இன்னும் மறையவில்லை.  அதே ஜப்பான் நாட்டில் கடந்த 2011 மார்ச் 11-ம் நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட "சுனாமி' பேரலைகளால் கடற்கரை நகரமான புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையம் பெருத்த சேதம் அடைந்தது. அதனால் அங்குள்ள அணு உலைக்களங்களில் கதிர்வீச்சு ஏற்பட்டு நாடே அச்சத்தில் உறைந்து போனது.  கடைசியாகக் கிடைத்த தகவலின்படி ஜப்பான் அணு உலைகள் வெடிப்பால் 3.5 லட்சம் மக்கள் வீடு வாசல், தோட்டம், வயல்வெளிகள், தொழிற்சாலைகள் என எல்லாம் இழந்து தாற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். கதிர்வீச்சு அடங்கி அந்த பூமியைப் பயன்படுத்துவதற்கு இனி எத்தனை காலங்கள் காத்துக் கிடக்க வேண்டுமோ? அந்த பூமியில் கலந்திருக்கும் கதிர்வீச்சுப் பொருளை அகற்ற எத்தனை தொழிலாளர்கள் கதிர்வீச்சுக்கு ஆளாக வேண்டுமோ?  முதலில் இந்த விபத்தை மூடிமறைக்கவே ஜப்பான் அணுசக்தி குழுமமும், டெப்கோ நிருவாகிகளும் முயன்று பார்த்தனர். அணு உலைக்குள் நிகழ்ந்தது விபத்தல்ல, ரசாயன கிரியையால் ஏற்படும் நெருப்பு என்றனர். அணுமின் நிலைய விபத்துகள் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்துவதால் வேறுவழியின்றி ஒப்புக் கொள்ளவும், அறிவிக்கவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  சர்வதேச அணுசக்தி குழுமத்தின் டைரக்டர் ஜெனரல் யுக்கியா அமானோ 2011 ஏப்ரல் 20-24 ஆகிய நாள்களில் நடந்த செரிநொபில் அணுவளாக விபத்தின் 25-ம் ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கில் பேசும்போது மறைக்கப்பட்ட உண்மையை வெளியிட்டார். ஜப்பானில் நிகழ்ந்த அணுவளாக விபத்தும், செர்னோபில் விபத்தைப்போல 7 ஸ்கேல் ஆகும் என்று ஜப்பான் நாட்டு அணுசக்தி மற்றும் தொழில்பாதுகாப்பு ஆணையம் அறிவித்ததாக உலகறிய அறிவித்தார்.  இக்காலத்தில் சர்வதேச அணுசக்தி குழுமம் முதல் எல்லா நாடுகளின் அதிகாரபூர்வ அமைப்புகளும் டெப்கோவைக் காப்பாற்றுவதிலும், அணுசக்தியைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகளை மறைப்பதிலும், குறிப்பாகக் கதிர்வீச்சு அபாயம் பற்றிய தகவலை மறைப்பதிலும் கவனம் செலுத்தினர்; இருந்தாலும் உண்மைகள் பலவழிகளில் மக்களைச் சென்றடைந்தன.  உலக நாகரிக வளர்ச்சியில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பணி மகத்தானது. அவைகளில் இப்போது மனித இனத்துக்குத் தேவையானது மின்சாரம். அனல் மின்சாரம், புனல் மின்சாரம் என்ற மரபு சார்ந்த நிலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அணுசக்தியின் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யும் முயற்சிகளைக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.  1932-ம் ஆண்டு ஜேம்ஸ் சாட்விக் என்பவர் நியூட்ரான் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த முயற்சி விரைவு பெற்றது. அணுக்களைப் பிளந்து அவற்றை மோதச் செய்வதன் மூலம் உண்டாகும் அணுசக்தியைக் கண்டுபிடித்தனர். அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  அணுசக்தியைப் பயன்படுத்தி முதன்முதலில் 1951 டிசம்பர் 20 அன்று அமெரிக்காவில் ஐதஹோ மாநிலத்தில் ஆர்கோ என்ற இடத்தில் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்போது மின்சாரம் தயாரிப்பதற்காகப் பல்வேறு நாடுகள் அணு உலைகளை அமைத்துள்ளன.  அணுசக்தி உற்பத்தியில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. உலகில் உற்பத்தியாகும் மின்சக்தியில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 27 விழுக்காடாகும். இதையடுத்து 17 விழுக்காடு பங்களிப்புடன் பிரான்ஸ் இரண்டாவது இடத்திலும், 13 விழுக்காடு பங்களிப்புடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும், 6 விழுக்காடு பங்களிப்புடன் ரஷியா நான்காவது இடத்திலும், 5 விழுக்காடு பங்களிப்புடன் ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.  31 உலகநாடுகளில் அணுசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் இப்போது 443 அணுஉலைகள் இருக்கின்றன. மேலும் 62 உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை தவிர புதிதாக 482 அணுஉலைகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் சேரவே இந்தியா துடிக்கிறது.  ரஷியாவின் செர்னோபில் மற்றும் ஜப்பானில் அணுஉலைகள் வெடித்துச் சிதறிக் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டதன் விளைவாக உலக மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. அணுசக்தி பாதுகாப்பு பற்றி அரசுகள் தரும் உறுதிமொழிகளில் மக்கள் நம்பிக்கையிழந்து போய்விட்டனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று உண்மைகள் மறைக்கப்படுகின்றன என்பது தெரியாமலா போய்விடும்?  "நிலநடுக்கத்தின் அளவையும் அளந்திடலாம், கதிர் வீச்சுகளின் ஆயுளையும் கணக்கிடலாம். ஆனால், அது உருவாக்கிய சமூக அவலத்தை அளக்க முடியுமா?' என்று சமூக ஆர்வலர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் கூற முடியவில்லை. மக்களுக்காக மின்சாரமா? மின்சாரத்துக்காக மக்களா? இரண்டும் இல்லை; பன்னாட்டு முதலாளிகளின் லாபத்துக்காகவே என்றால் மனிதகுலம் கவலைப்படவே செய்யும்!  ஏற்கெனவே 1984-ம் ஆண்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தால் ஏற்பட்ட விஷவாயு விபத்தால் போபால் நகரம் சந்தித்து வரும் துயரங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தேடித்தரவில்லை; அவர்கள் அழும் குரல் இன்னும் ஓயவில்லை. அந்தக் குழுமத்தின் தலைவன் ஆண்டர்சனைத் தப்பி ஓட வைத்த இந்திய அரசாங்கமும், அதற்குத் துணைநின்ற காவல்துறையும், நீதிமன்றங்களும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன.  இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் ஜெய்தாப்பூரில் 10 ஆயிரம் மெகாவாட் திறன்கொண்ட அணுமின்நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 6 மின் உலைகள் கொண்ட இந்த மின்நிலையம் உலகத்திலேயே மிகப் பெரியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் இவ்வளவு அணு உலைகள் நிறுவுவதை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் பார்க்க இயலாது. இவ்வளவு பெரிய ஆபத்தை விலைக்கு வாங்க இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் துணியாது.  இதற்காக "ஏரேவா' என்ற பிரெஞ்சு நிறுவனமும், இந்திய அணுசக்திக் கழகமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த அணுமின் நிலையம் அமைக்கப்படுவதை அம்மாநில மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.  அணுமின் நிலையத்தால் ஏற்படும் ஆபத்து என்பது எப்போதும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியைப் போன்றது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதால் மக்களிடம் அச்சமும், கவலையும், அதனால் எதிர்ப்பும் ஏற்படுவதைப் பரிவோடு கவனத்தில் கொள்ளவேண்டும். மின்சாரம் தேவை என்பதற்காக உயிரையும், வாழ்வாதாரங்களையும் இழக்க வேண்டுமா?  1982-ல் அணு உலைகளை மூடவேண்டும் என்று குரல் கொடுத்தவர் அமெரிக்க அணுசக்தியின் தந்தை என அழைக்கப்பட்டவரும், முதல் அணுமின் நிலையத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டவரும், கப்பற்படையின் அணுசக்திப்பிரிவில் அட்மிரலாக இருந்தவருமான ஹைமென் ரிக்கோவர் என்பவரே! இவர் அணுசக்தியை எதிர்ப்பதற்குக் கூறும் காரணமும் சரிதான்!  இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமி வாழத்தகுந்த இடமாக இல்லை. எல்லாமே கதிர்வீச்சாக இருந்தது. அண்டத்திலிருந்து இயற்கையாக வந்த அண்டவெளி கதிர்வீச்சு தாக்கம் இருந்தது. படிப்படியாக கதிர்வீச்சுக் குறைந்து உயிர்கள் வாழும் நிலை வருவதற்கு பலகாலமானது. இப்போது மீண்டும் கதிர்வீச்சை உருவாக்கும் வேலையை மானுடம் செய்தால் பூமி பழைய நிலையை அடைந்துவிடும். கதிர்வீச்சு அபாயம் மக்களைப் பயமுறுத்துவதே அணுசக்தியின் எதிர்ப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.  "அணுயுகத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானில் போடப்பட்ட அணுகுண்டால் ஏற்பட்ட அழிவைக் கண்டு மனம் வருந்தினார்; போரையே விரும்பாத அவர் தம்மையே நொந்துகொண்டார்.  ""உலகத்தின் நன்மை குறித்தே அறிவியல் உண்மைகள் கண்டறியப்படுகின்றன. இவ்வுண்மைகள் அழிவு வேலைகளுக்கும் பயனாவதைக் கண்டு அறிவியலைக் குறை கூறலாகாது. மாறாக, அழிவு வேலைகளுக்குக் காரணமான மனிதனையே குற்றம் கூற வேண்டும்.'' என்றார் அவர்.  அந்த அறிவியல் மேதையின் இந்த அறிவுரையை ஏற்று நடந்தால் உலக அமைதி தொடரும். இல்லாவிட்டால் மூன்றாவது உலகப்போர் வருமானால் உலகம் தாங்காது. 

கருத்துகள் இல்லை: