வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

பித்அத் இயக்கங்கள்-ஃபித்னா ஆலிம்கள்

பித்அத் இயக்கங்கள்-ஃபித்னா ஆலிம்கள்

 ”அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ’ என்ற கலிமாவை எவர் மொழிகிறாரோ, அந்த நிமிடமே படைத்த ஏக இறைவனை (தவ்ஹீத்) மட்டும் வணங்கி முஸ்லிமாக மாறி விடுகிறார். இவர் பிற ஷிர்க், பித்அத் முஸ்லிம்களிடமிருந்து பிரித்துக் காட்ட “நான் தவ்ஹீது முஸ்லிமாகி விட்டேன்’ என எவரும் கூறுவதில்லை.  உதாரணமாக சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் பெரியார்தாசன் முன்பு, இந்துவாய், பின்பு இறை மறுப்பாளராய், மீண்டும் புத்தரை ஏற்பவராக இருந்தார். பின்பு குர்ஆன் படித்து விளங்கி அல்லாஹ்வின் நேர்வழி காட்டுதல் “அகில உலகத்தையும் படைத்த இறைவன் ஒருவனே! அவனுக்கு இணை வைப்பது பெரும் குற்றம். படைத்த ஒருவனை மட்டுமே (தவ்ஹீது) வணங்க வேண்டும்’ என்று கலிமாவை மொழிந்து பெரியார்தாசன், அல்லாஹ் தாசனாய் அப்துல்லாஹ்வாக தாய் மார்க்கத்திற்கு மீண்டார். 


அவர் வெளி உலகத்திற்கு இச்செய்தியை அறிவிக்கும்போது “நான் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகி விட்டேன்’ என்றுதான் அறிவித்தார்.  
நான் பிற முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்திற்கு வரவில்லை; குர்ஆனை பத்து ஆண்டுகளாக படித்து ஷிர்க், பித்அத் முஸ்லிம்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட “நான் தவ்ஹீது முஸ்லிமாக மாறிவிட்டேன்’ என்று கூறவே இல்லை. அப்துல்லாஹ் அவர்களுக்கு மிக நன்றாவே தெரியும், முஸ்லிமாக ஆகிவிட்டாலே தவ்ஹீது தான் ஏக இறைவனை வணங்குபவன் என்றுதான் பொருள், தனியாக தவ்ஹீது லேபிள் தேவையில்லை என்பது.  
புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர் அப்துல்லாஹ்விற்கு தெரிந்த உண்மை. பரம்பரை முஸ்லிம் ஆலிம் மதனீ, உலவீகளுக்கு ஏன்? புரியவில்லை. ஏன் இவர்கள் முஸ்லிம்களை இரண்டாகப் பிரிக்கிறார்கள். புரோகிதர்களுக்கு பிரித்தால்தான் ஆதாயம். இந்து மதத்தை நான்கு வர்ணமாக பிரித்ததால்தான் இன்று வரை அரசாட்சி செய்ய முடிகிறது. எல்லா மதத்துப் புரோகிதர்களும் மக்களை பிரிக்கவே செய்வார்கள்.  
இப்லீஸ் செய்த முதல் வேலை அதுதான். நெருப்பில் படைக்கப்பட்ட நான் உயர்ந்தவன், மண்ணால் படைக்கப்பட்ட ஆதம்(அலை) தாழ்ந்தவர் என்று அல்லாஹ்வின் முன்னிலையிலேயே அவனது அடியார்களைப் பிரித்து பேதம் காட்டியதால் வெளியேற்றப்பட்டான். இப்லீஸின் ஏஜண்டுகளாக இன்று மக்களை இரண்டாகப் பிரிக்கும் வேலையில் தம்பட்ட தவ்ஹீது ஆலிம்கள் செயல்படுகிறார்கள். தீன் (மார்க்கத்தை) உடைத்து கூறுபோடும் தீன்கள் சில அப்பாவி முஸ்லிம்கள் இந்த வீணான (கமாலு)தீன், (ஜெயினுலாப்)தீன்களின் வார்த்தை ஜாலத்தை நம்பி ஏமாந்து விடுகிறார்கள்.  
“நாங்க எல்லோரும் முஸ்லிம்கள்தான்; யாரு இல்லையென்று சொன்னார்கள். எல்லோரும் முஸ்லிம்கள்தான்; ஆனால் நாட்டில் என்ன நடக்குது? நான் முஸ்லிம் என்று சொல்கிறான்… பெயரைக் கேட்டால் கமாலுதீன். ஜெயினுல் ஆபிதீன் என்று பெயரை வைத்துக்கொண்டு கபுரடியில் கையேந்துகிறான். ஜெயினுலாப்தீன் என்று முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு, கத்தம், மீலாது மெளலூது மெளட்டீக சடங்குகளில் மூழ்கிக் கிடக்கிறான். இதுபோன்ற ஷிர்க், பித்அத் செய்கின்ற முஸ்லிமும் நானும் ஒன்றா? நானும் முஸ்லிம் அவனும் முஸ்லிம்; இது எப்படி சரியா வரும்? ஆகவே தான் எங்களை தவ்ஹீத் முஸ்லிம்கள் என்று அழைக்கிறோம் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். இந்த தவ்ஹீது விளக்கம் கேட்பவர்களும் சரிதானே என்று நினைக்கிறார்கள். இந்த வீண் தவ்ஹீதுகளின் விளக்கம் அறிவுக்கு பொருத்தமாக உள்ளதா? சமுதாயம் சிந்திக்க வேண்டும்.  
ஃபித்னா ஆலிம்களின் பிரிவினை விளக்கம்
1. ஒரு பள்ளிக்கூட வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 40 மாணவர்கள், பெயரில்தான் மாணவர்கள், படிப்பை தவிர எல்லாத் தவறும் செய்பவர்கள், மாணவன் என்ற பெயரில் இவர்களது ஒழுங்கீனமான செயல்களால், 10 நல்ல மாணவர்களின் நற்பெயர் கெடுகிறது. ஆகவே 10 நல்ல மாணவர்கள் ஒன்று சேர்ந்து “நாங்கள் ஒழுக்க மாணவர்கள்’ என்று ஒரு போர்டை போட்டு தனியாக அமர்ந்த வகுப்பை இதுவரை யாரும் கண்டதில்லை. அவசியமும் இல்லை. படித்தவன்-படிக்காதவனை பிரிப்பதற்காக தேர்வு உள்ளது. வினா-விடைத்தாள் அவர்களைப் பிரித்துவிடும். அதுவரை பொறுமையாக ஒன்றாகவே இருப்பார்கள்.  
2. ஒரு தெருவில் சில பெண்கள் “பலான’ தொழில் செய்கிறார்கள். இதனால் அத் தெருவில் உள்ள குடும்பப் பெண்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படும் நிலை. ஆகவே அவர்களிலிருந்து தங்களை பிரித்துக்காட்ட “இது பத்தினி வாழும் வீடு’ என்று போர்டு போட்ட வீட்டை இது வரை எவரும் கண்டிருக்கிறீர்களா?  
3. அரசு அலுவலகத்தில் உள்ள பெரும்பான்மை அதிகாரிகள் லஞ்சத்திலேயே மஞ்சம் கொள்பவர்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரிகள் தங்கள் நேர்மையை பிரித்துக் காட்ட தங்கள் மேஜையின் மீது “நான் லஞ்சம் வாங்கா அதிகாரி’ என்று எழுதி வைப்பதை எவரேனும் செய்திருக்கிறார்களா?  
4. கடை வீதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் கலப்படம், அளவு நிறுவைகளில் மோசடிதான் அவர்கள் தொழில் தர்மம். இந் நிலையில் சில நேர்மையான வணிகர்கள் தங்கள் கடை முன்னால்’ இங்கு கலப்படமோ, அளவு நிறுவைகளில் மோசடியோ நான் செய்வதில்லை’ என்று அறிவிப்புச் செய்ததாக கேள்விப்பட்டதுண்டா?  
நல்லதும், கெட்டதும் கலந்துள்ள சமுதாயத்தில் நல்லவர்கள் தனியே தங்களை பிரித்துக் காட்டி போர்டு வைத்து சங்கம் அமைத்ததில்லை. இப்படி செய்வது அறிவுக்குப் பொருத்தமும் இல்லை. இதனால் வீணான ஃபித்னா குழப்பம். அடிதடி சண்டை, ஒற்றுமை குலையும். மேலும் இப்படி பிரித்துக் காட்டி நல்லவர்கள் போர்டு போடுவதால் அவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள்தானா? என்று அடையாளம் காண ஒரு வழியும் இல்லை.  
இதுவரை எந்த மனிதரும் செய்யாத மடத் தனத்தை தவ்ஹீது மூட ஆலிம்கள் செய்து கொண்டிருக்கின்றனர். ஒருவர் நல்லவர் கெட்டவர் என்று அவரே முடிவு செய்யக் கூடாது. நல்ல மாணவர்கள் நாங்கள் என்று அவர்களாகப் பிரித்து கொள்ள முடியாது. தேர்வு முடிவுகள் தான் பிரித்துக் காட்டும்.  
பலான பெண்ணையும் பத்தினிப் பெண்ணையும் அவர்கள் நடவடிக்கைகளை வைத்து சமுதாயம் பிரிக்கும். நான் யோக்கியன் என்று எவரும் தமக்குத்தாமே சுய சான்றிதழ் அளிக்க முடியாது. உண்மையான முஸ்லிம்கள் யாரென்று அல்லாஹ் இறுதி நாளில் தீர்ப்பளித்து பிரித்து விடுவான். அல்லாஹ்வின் தனி அதிகாரத்தை தவ்ஹீது ஆலிம்கள் தம் கையில் எடுத்துக் கொண்டு மக்களை பிரித்து ஜமாஅத் அமைக்கிறார்கள்.  சமூகத்தில் ஃபித்னா குழப்பத்தை ஏற்படுத்தி, குழம்பிய குட்டையில் ஆதாய மீன் பிடிக்கிறார்கள். குடும்பத்தில் சொத்தைப் பிரிப்பது போல் ஆளாளுக்கு ஒரு ஜமாஅத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் ஈமானையும் செல்வத்தையும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இந்த பகல் கொள்ளை(கை)யும் “அல்லாஹ்வின் பெயரால்…’ தான் நடக்கிறது.  
யூதர், கிருஸ்துவர்களைப் பின்பற்றும் இயக்க ஆலிம்கள்
ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை பிளந்து, தாங்கள் சுத்தமான முஸ்லிம்-ஏகத்துவவாதிகள் என்று பெருமை அடித்து பீற்றித் திரியும் ஆலிம்கள், ஆதாரம் இல்லாமல் எதையுமே செய்ய மாட்டார்கள். இவர்களின் சொல் செயல் ஒவ்வொன்றிற்கும் ஆதாரத்தை யூத, கிருஸ்தவர்களிடம் காணலாம் என அல்குர்ஆன் கூறுகிறது.  
ஒவ்வொரு நபிமார்கள் காலகட்டத்திலும் சில புரோகித ஆலிம்கள் தாங்கள்தான் அல்லாஹ்விற்கு வேண்டியவர்கள், சுத்த தவ்ஹீதுவாதிகள் மற்ற முஸ்லிம்கள் அசுத்த கலப்படமானவர்கள் என்று வீண் பெருமை அடிப்பதை அல்லாஹ் கண்டிக்கிறான்.  
“யூதர்களும் கிருஸ்தவர்களும்’ நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகளாகவும், அவனுடைய அன்பிற்குரியவர்களாகவும் இருக்கின்றோம்’ என்று கூறுகின்றனர். நீங்கள் கூறுங்கள், “அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக உங்களை ஏன் அடிக்கடி தண்டிக்கிறான்? (உண்மை) அவ்வாறன்று, நீங்களும் அவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் தாம், அவன் நாடியவர்களை மன்னிக்கிறான். அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான்’. (அல்குர்ஆன் 5:18)  
கமாலுதீன் மதனீ ஆரம்பித்த “ஜாக்ஹ்’ தான் அல்லாஹ் விரும்பிய யோக்கியமான “அல்ஜமாஅத்’ என்றிருந்திருக்குமானால் அதை இரண்டாக PJஐ வைத்து உடைத்திருக்க அவசியமில்லையே. சரி PJ ஆரம்பித்த TMMK தான் அல்லாஹ் விரும்பிய இயக்கமாக இருந்தால், மீண்டும் அதை இரண்டாக்க TNTJ வர வேண்டியதில்லை. உண்மையில் “ததஜா’ தான் அல்லாஹ்வின் அன்பிற்குரிய ஜமாஅத் ஆக இருந்திருந்தால் அதுவும் இரண்டாக  உடைந்திருக்க தேவையில்லை. ஏன் அல்லாஹ் அவர்கள் ஆரம்பிக்கிற ஜமாஅத்தை அடிக்கடி உடைத்துத் தண்டிக்கிறான்.உண்மை அதுவல்ல. இவர்களும், இவர்கள் ஆரம்பிக்கிற இயக்கங்களும் மற்றவர்கள் ஆரம்பித்த பிரிவினை ஃபிர்ஹா போன்றவையே! வழிகெட்டுச் செல்லும் 72 கூட்டங்களில் உள்ளவையே!. ஆகவே தான் இங்கும் இவர்கள் இயக்கத்திற்கு சோதனை. மறுமையிலும்… அல்லாஹ் காப்பாற்றுவானாக. அல்லாஹ் நாடியவர்களை மன்னிப்பான். நாடியவர்களை தண்டிப்பான்.  
இயக்க ஆலிம்களுக்கு இனிய யோசனை
இஸ்லாம் ஐந்து கடமைகள் கொண்ட மார்க்கம்; ஐந்து தூண்கள் உள்ள கட்டிடம் என்று கூறுவார்கள். இதில் முதலாவது கலிமா, நமது இயக்க ஆலிம்கள் இதுவரை கலிமா சொன்ன முஸ்லிமை இரண்டாகப் பிரித்து முதலாவது தூணை, இயக்க கடப்பாறையைக் கொண்டு மாறி, மாறி மதனீயும் உலவியும் இடிக்கிறார்கள். இன்னும் நாலு தூண்கள் பாக்கி உள்ளன. மேலும் இயக்கத் தொண்டர்களும் மக்கள் சேவை செய்ய துடிக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு பொறுப்பு கொடுத்துவிட்டால் வூடு கட்டி அடிப்பார்கள். ஆகவே தொண்டர்களுக்கு ஒரு நல்லது செய்ய நம்மால் முடிந்த யோசனை.  
முஸ்லிம்களைப் பிரித்து தவ்ஹீதுக்குள் எல்லோரும் வந்துவிட்டார்கள். கலிமாவிற்குப் பிறகு அடுத்த கடமை தொழுகை. இந்த ஐந்து வேளை தொழுகைகளையும் முறையாக தொழுபவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லை. ஆகவே இவர்களிலிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவது மிக அவசியம். எல்லோரும் தவ்ஹீது என்றால் எப்படி? ஐந்து வேளை தொழும் தவ்ஹீது முஸ்லிமும் ஜும்மா தவ்ஹீதும் ஒன்றாக முடியுமா? ஆகவே பிரித்துக் காட்ட வேண்டும். ஆதாரம் உண்டு(?); அமல்படுத்துவோம்.  
“தமிழ்நாடு தவ்ஹீத் முஸல்லிகள் ஜமாஅத்’
“நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிமையையும், இணை வைப்பவரையும் பிரித்துக் காட்டுவது தொழுகை’  
நபி(ஸல்) அவர்கள் சொல்லிவிட்டார்கள். இந்த ஒரு ஆதாரத்தை வைத்து தவ்ஹீது தொழுகை முஸ்லிம், தவ்ஹீது தொழாத முஸ்லிம் என இரண்டாகப் பிரித்து உள் ஜமாஅத் அல்லது புதிய ஜமாஅத் ஏற்படுத்தி தொண்டர்களுக்கு பதவி கொடுக்கலாம். பெயரில்லாமல் எப்படி ஜமாஅத் அமைப்பது? பெயர் வைத்து விடலாம். PJக்கு “தமிழ்நாடு தவ்ஹீத் முஸல்லிகள் ஜமாஅத்’ (ரிஜிஸ்டர்டு) என்று பதிவு செய்து விடலாம். கமாலுதீன் மதனீ எப்பவும் குர்ஆன் ஹதீஸை ஒட்டிப் பிடிப்பவர். ஆகவே அவர் ஜமாஅத்திற்கு “ஜம்மியத் அஹ்லே குர்ஆன் வல் ஹதீஸ் முஸல்லிகள் ஜமாஅத்’ என லேபிள் ஒட்டலாம்.  
ஜக்காத் கடமையை எத்தனை தவ்ஹீது முஸ்லிம்கள் கணக்கிட்டு முறையாக கொடுக்கிறார்கள். கொடுக்காதவர்கள் அனேகம். எனவே ஜக்காத் கொடுக்கும் தவ்ஹீதும், கொடுக்காத தவ்ஹீதும் ஒன்றாக முடியாது. “நன்மையும் தீமையும் சமமாகாது’ என்று அல்லாஹ் குர்ஆனில் கூறிவிட்டான். மேலும் கலீஃபா அபூபக்கர் சித்திக்(ரழி) அவர்கள் ஜக்காத் தர மறுப்பவர்கள் மீது போர் தொடுப்பேன் என்று பிரகடனப் படுத்தியுள்ளார்கள். நம் தவ்ஹீது முஸ்லிம்கள் மீது போர் தொடுக்க வேண்டியது இல்லை. குறைந்தது இரண்டையும் பிரித்துக் காட்டுவது நல்லது. ஆகவே புதிய ஜமாஅத் “ஜம்மியத் அஹ்லே குர்ஆன் வல்ஹதீஸ் ஜக்காத் ஜமாஅத்’ என்று ஏற்படுத்தலாம். அதை “ஜாக்ஹ்’ அறக்கட்டளையுடன் இணைத்து விடலாம்.  
“ஜக்காத்’ விஷயத்தில் PJ அவர்கள் இளகிய மனமுடையவர். பணக்கார ஏழை மக்கள் மீது எப்பவும் பரிவும் பாசமும் உள்ளவர். வருடா வருடம் ஜக்காத் கொடுத்து அவர்கள் வறிய நிலைக்கு போவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு முறை ஜக்காத் கொடுத்தால் போதும் என்று பெரிய மனது பண்ணி சலுகை செய்து விட்டார். ஆகவே “தமிழ்நாடு தவ்ஹீத் வாஹித் மர்ரா ஜக்காத் ஜமாஅத்’ என்று ஆரம்பிக்கலாம். வழமை போல் இதுவும் அல்லாஹ்வின் பெயரால்…’ தான் ஆரம்பிக்க வேண்டும்.  
எல்லா அமல்களும் அடையாளம் காணப்படும். ஆனால் நோன்பு மட்டும் யார் வைத்தவர் -யார் வைக்காதவர் என்று கண்டுபிடிக்க முடியாது. ஆகவே இதை அவசியம் அடையாளம் காட்டியே ஆக வேண்டும். “தமிழ்நாடு தவ்ஹீத் செளம்கள் ஜமாஅத்’ “ஜம்மியத் அஹ்லே செளம்கள் ஜமாஅத்’ என்று போர்டு போட்டு செயல் படுத்தலாம். இந்த ஜமாஅத்தில் சேர்பவர்கள் மட்டுமே நோன்பாளி என்று உறுப்பினர் கார்டு கொடுத்து கஞ்சி ஊற்றலாம்.  
இறுதியாக ஒரு கடமை “ஹஜ்’. பெரும்பாலோர் வசதியிருந்தும் ஹஜ் செய்வதில்லை. சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்கள் ஹாஜி, அல்ஹாஜ் என்று தனி நபர்களை அழைக்கிறார்கள். இது தனி மனித வழிபாடு ஆகிவிடும். ஆகவே “ஜம்மியத் அஹ்லே ஹுஜ்ஜாஜிகள் ஜமாஅத்’ என்று SK பெயர் வைத்து தவ்ஹீது ஹாஜிகள் சங்கம் அமைத்துப் பாராட்டலாம். PJ. எப்பொழுதும் முழுமையாக மார்க்க சேவை செய்வதால் அவர் தனது ஒரிஜினல் ஹாஜிகளை பிரித்துக்காட்ட “தமிழ் நாடு தவ்ஹீது மஃபூலே ஹுஜ்ஜாஜிகள் ஜமாஅத்’ என்று PJ.யும் ஆரம்பித்து விடலாம். இனி உலவியும் மதனீயும் அல்லாஹ்வின் உதவியாளர்கள் ஆகி விட்டார்கள். அல்லாஹ் மறுமையில் மக்களை பிரிக்கும் வேலையை இவர்கள் இம்மையிலேயே செய்து அல்லாஹ்விற்கு உதவி செய்து விட்டனர். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் பாதுகாப்பானாக!

கருத்துகள் இல்லை: