வியாழன், 11 ஆகஸ்ட், 2011

இந்திய மக்கள் தொகை



First Published : 01 Apr 2011 12:00:00 AM IST


புது தில்லி, மார்ச் 31: இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவர அறிக்கை தெரிவிக்கிறது.உலகில் வாழும் மொத்த மக்கள் தொகையில் 17.5 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 62.37 கோடி பேர் ஆண்கள், 58.65 கோடி பேர் பெண்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா. உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதம் பேர் இங்கு வாழ்கின்றனர்.அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேஸில், பாகிஸ்தான், வங்கதேசம், ஜப்பான் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் கூட்டினால் கிடைக்கும் மொத்த எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.2001-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் நாட்டின் மக்கள் தொகை 18.10 கோடி அதிகரித்துள்ளது. இருப்பினும் மக்கள் தொகை பெருக்கம் விகிதம் 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2001-ல் மக்கள் தொகை பெருக்க விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் சி. சந்திரமௌலி இத்தகவலை செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை வெளியிட்டார். அப்போது உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளையும் இருந்தார்.முதலிடத்தில் உத்தரப் பிரதேசம்: மக்கள் தொகை அதிகம் வாழும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 19.90 கோடி பேர் வசிக்கின்றனர். மிகக் குறைவாக லட்சத்தீவுகளில் 64,429 பேர் வாழ்கின்றனர்.உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் மக்கள் தொகை அமெரிக்காவின் மக்கள் தொகையைவிட அதிகமாகும்.மிக அதிக அளவில் தில்லியின் வடகிழக்கில் சராசரியாக 37,346 சதுர மீட்டர் பரப்பில் ஒருவர் வசிக்கின்றனர். அருணாசலப்பிரதேசத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒருவர் வீதம் வசிக்கின்றனர்.பெண்குழந்தை பிறப்பு விகிதம் சரிவு: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது 1,000 ஆண் குழந்தைகள் எனில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 914 ஆக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆண்:பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இப்போது மிக அதிக அளவு குறைந்துள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் என்று சந்திரமெüலி கூறினார்.எழுத்தறிவு: எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதம் 74 சதவீதமாக உள்ளது. 2001-ம் ஆண்டு இது 64.83 சதவீதமாக இருந்தது. குறிப்பாக பெண்கள் எழுத்தறிவு பெறும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. 2001-ல் 53 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆண்களில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 75 சதவீதத்திலிருந்து 82 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலங்களில் மிஜோரத்தில் 98 சதவீதமாகவும், ஐஸ்வாலில் 98 சதவீதமாகவும், கேரளத்தில் 93 சதவீதமாகவும் உள்ளது.மிகக் குறைவாக எழுத்தறிவு பெற்றோர் மாநிலத்தில் பிகார் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது. இங்கு கல்வியறிவு பெற்றோர் விகிதம் 63.82 சதவீதமாக உள்ளது. 10 மாநிலங்கள் 85 சதவீதத்துக்கும் அதிகமான கல்வியறிவு பெற்றோரைக் கொண்டவையாக உள்ளன.6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15.58 கோடியாகும். 2001-ம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் 50 லட்சம் குறைவாகும். 20 மாநிலங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர். ஐந்து மாநிலங்களில் ஒரு லட்சம் குழந்தைகள் கூட இல்லாத நிலை உள்ளது.மக்கள் தொகை நெருக்கம் சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டரில் 382 பேர் வசிக்கின்றனர். இது 2001-ல் 325 ஆக இருந்தது.இப்போது மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியா மேற்கொண்ட 15-வது கணக்கெடுப்பாகும். 1872-ம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இம்முறை இரண்டு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2010 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2001 பிப்ரவரி 2 முதல் 28 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கான செலவு ரூ. 2,200 கோடி. மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் 27 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பணியில் 8 ஆயிரம் டன் பேப்பரும், 10,500 டன் எடையுள்ள பொருள்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: