வியாழன், 11 ஆகஸ்ட், 2011

இந்தியா

இந்தியாhttp://tawp.in/r/g2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசு
இந்தியாவின் கொடி இந்தியாவின் சின்னம்
கொடி
குறிக்கோள்
சத்தியமேவ ஜெயதே
(தமிழ்: வாய்மையே வெல்லும்)
நாட்டுப்பண்
ஜன கண மன (Sound இசைக்கோப்பு)
Location of இந்தியாவின்
தலைநகரம் புது தில்லி
28°34′N 77°12′E
பெரிய நகரம் மும்பை , தில்லி , கொல்கத்தா , சென்னை
ஆட்சி மொழி(கள்) இந்தி, ஆங்கிலம் மற்றும் 21 ஏனைய மொழிகள்
அரசு கூட்டாட்சி குடியரசு
 -  குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல்
 -  பிரதமர் மன்மோகன் சிங்
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 
 -  பெற்றது ஆகஸ்ட் 15, 1947 
பரப்பளவு
 -  மொத்தம் 3,287,590 கிமீ² (7ஆவது)
1,269,346 சது. மை 
 -  நீர் (%) 9.56
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 1,080,264,384 (2ஆவது)
 -  2011 குடிமதிப்பு 1,21,01,93,422 
மொ.தே.உ
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $4.06 டிரில்லியன் (4ஆவது)
 -  நபர்வரி $3339 (125ஆவது)
ம.வ.சு (2003) 0.602 (மத்திம) (127வது)
நாணயம் ரூபாய் 1 (INR)
நேர வலயம் இந்திய நேரம் (ஒ.ச.நே.+5:30)
 -  கோடை (ப.சே.நே.) நடைமுறையில்லை (ஒ.ச.நே.+5:30)
இணைய குறி .in
தொலைபேசி +91
மின்னழுத்தம் 230 V
அலையெண் 50 Hz
1 ஒருமைக்கு Re. (ஒரு ரூபாய்). ஒரு ரூபாய்= 100 பைசா (Paise)
இந்தியா (India) அல்லது அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன[1].
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது[2]. நூறு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] வரலாறு


முதன்மைக் கட்டுரை: இந்திய வரலாறு
அசோகரால் உருவாக்கப்பட்ட சாஞ்சி ஸ்தூபம்
கி.மு.300ல் அசோகரால் கட்டப்பட்டு, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபம் போன்று 40,000 வருடங்களுக்கு முந்திய, பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு, மத்திய இந்தியாவிலுள்ள பிம்பேடகா என்னுமிடத்திலும் வேறு இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவின், முதல் நிரந்தரக் குடியிருப்புகள் சுமார் 9000 வருடங்களுக்கு முன் தோன்றின. இப் பகுதி சார் பண்பாடு, உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்றாக, கி.மு 6000 தொடக்கம் கி.மு 1900 வரை உச்ச நிலையிலிருந்த, சிந்துவெளி நாகரீகமாக வளர்ச்சியடைந்தது.
கி.மு 1500 அளவில், இந்தியாவின் வடமேற்கிலிருந்து ஏற்பட்ட ஆரிய இனக்குழுக்களின் உள்வரவாலும், ஓரளவுக்கு உள்ளூர் வாசிகளுடனான கலப்பினாலும் வேதகாலப் பண்பாடு உருவானதாக ஒரு கருத்து உண்டு. காலப்போக்கில் ஆரியரின் பண்பாடு, மொழி மற்றும் சமயம் என்பன இப்பிரதேசத்தில் மிக முக்கியத்துவம் பெற்றவையாகின என்று இக்கருத்து கூறகிறது. முந்தைய, பரவலாகப் பரிச்சயமான நோக்கில், இவ்வுள்வரவானது, திடீரென ஏற்பட்ட வன்முறை ஆக்கிரமிப்பாகும். எனினும், அண்மைக்காலச் சிந்தனைகள், இது ஒரு படிப்படியான உள்வரவாக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பது போல் தெரிகிறது. (ஆரிய ஆக்கிரமிப்புக் கோட்பாட்டைப் பார்க்கவும்). வடமேற்கிலிருந்து எந்த பிரிவினரும் வரவில்லை என்றும், சிந்து சமவெளி நாகரிகமும் வேத நாகரிகமும் ஒன்று என்ற கருத்தும் ,. சிந்து சமவெளி நாகரித்தினரும், தமிழ் சங்க இலக்கியங்களில் கூறப்படும் மூழ்கிய குமரிக் கண்டத்தைச் சேர்ந்த தென்னகத்தாரும் இன்றைய இந்தியரின் முன்னோர்கள் என்ற மற்றொரு கருத்து உண்டு. எனினும் இதில் எந்த கருத்தும் முழுமையாகவும் திட்டவட்டமாகவும் நிரூபிக்கப் படவில்லை. இது பற்றி ஆராய்ச்சியாளர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் உண்டு.
மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன.
அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களை தொடர்ந்து ஐரோப்பிய வர்த்தகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர்.
முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இந்திய துணைக்கண்டம் மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானாகவும் பிரிந்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு ஆனது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளான மேற்கு மற்றும் கிழக்கு பாக்கிஸ்தானிடையே 1971-இல் உள்நாட்டுப் போர் மூண்டதற்குப் பிறகு இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாக்கிஸ்தான் வங்காள தேசம் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது. 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது.
இயற்கை வளம், மனித வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த நில அமைப்பு ஆகியவை இந்தியாவின் முக்கிய பலங்களில் சிலவாகும். பாக்கிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினை, கவலை தரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச் சூழல் சீர் கேடு, ஊழல் ஆகியவை இந்தியா எதிர் நோக்கும் சவால்களில் சிலவாகும்.
இவற்றையும் பார்க்க: இந்திய வரலாற்று காலக் கோடு

[தொகு] அரசியல் அமைப்பு

இந்தியா 28 மாநிலங்களையும் 7 ஒன்றியப் பகுதிகளையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு அதிகார பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான அதிகாரப் பயன்பாடுகளை, ஊழலை கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றி கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, பிரதேச சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையான பிரச்சினைகள் தொடர்பாக ஆள் வரை உண்டு. மேலும் மேன் முறையீடு ஆள் வரையும் உயர் நீதிமன்றங்கள் மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்கு பொதுவாகவும் 18 உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.

[தொகு] அரசியல்

புது டெல்லியில், இந்தியாவின் அரச அலுவலகங்கள் பலவற்றைக் கொண்டுள்ள செயலகக் கட்டிடம்
இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன. மற்ற பெரிய தேசிய கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜனதா தளம் ஆகியவை ஆகும். குறுகிய இரண்டு காலப் பகுதிகளைத் தவிர்த்து 1950 முதல் 1990 வரையான காலம் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கியது. 1977 க்கு முன் காங்கிரஸ் அரசு காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைச் சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட திருப்தியின்மையினால் 1977 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றது. பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதாக் கட்சியும், இடதுசாரிகள் உட்பட்ட பிற கட்சிகள் சிலவும் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி என்னும் அமைப்பு காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சியமைத்தது. எனினும் இக் கூட்டணியால் நீண்டகாலம் நீடித்து ஆள முடியவில்லை. இரண்டு ஆண்டுக் காலத்திலேயே அரசு கவிழ்ந்தது.
1996 ஆம் ஆண்டுக்கும் 1998 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் நடுவண் அரசைப் பொறுத்தவரை ஒரு குழப்பமான காலமாகும். இக்காலத்தில் முதலில் பாரதீய ஜனதாக் கட்சியும், பின்னர் சில மாதங்கள் ஐக்கிய முன்னணி என்னும் பல கட்சிக் கூட்டணியும் ஆட்சி நடத்தின. தொடர்ந்து 1998 இல் நடை பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த அரசு, நாடாளுமன்றத்தின் முழு ஐந்தாண்டுக் காலமும் பதவியில் இருந்த முதல் காங்கிரஸ் அல்லாத அரசு என்னும் பெயரையும் பெற்றது.
2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள், பிற மாநிலக் கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு உருவாக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது கூட்டணி அரசு இது.

[தொகு] வெளியுறவும், இராணுவமும்

1947 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதில் இருந்து இந்தியா பெரும்பாலான பிற நாடுகளுடன் நல்லுறவையே கொண்டுள்ளது. 1950களில், ஐரோப்பிய நாடுகளின் பிடியிலிருந்து ஆசிய ஆபிரிக்கக் குடியேற்ற நாடுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வந்தது. இந்தியா பொதுநலவாய நாடுகள் குழுவின் ஒரு உறுப்பு நாடும், அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தொடக்க உறுப்பு நாடும் ஆகும். சீன -இந்தியப் போருக்கும், 1965 இல் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போருக்கும் பின்னர் இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் நல்லுறவைப் பேண முயன்றது. இதனால், அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்பட்டது. இந்நிலை சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து, பனிப்போர் முடியும் வரை நீடித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கியமாக, காஷ்மீர்ப் பிணக்குக் காரணமாக மூன்று போர்களில் ஈடுபட்டன. இவற்றைவிட அவ்வப்போது சிறு சிறு சண்டைகளும் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. சிறப்பாக, 1984 ல் இடம்பெற்ற சியாச்சென் பனியாற்றுப் போரையும், 1999 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கார்கில் போரையும் குறிப்பிடலாம்.
அண்மைக் காலத்தில், ஐக்கிய அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான உறவுகள் மேம்பட்டுள்ளன. மார்ச் 2006 ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சும் கை குலுக்கும் காட்சி.
அண்மைக் காலங்களில் இந்தியா "ஆசியான்" எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும், "சார்க்" எனப்படும் பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரமான ஆதரவு நாடும், தொடக்ககால உறுப்பு நாடுமான இந்தியா, இச் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக 55,000க்கு மேற்பட்ட படையினரையும், காவல் துறையினரையும், நான்கு கண்டங்களில் சேவையாற்றுவதற்கு அனுப்பியுள்ளது. எனினும், பல விமர்சனங்களையும், இராணுவத் தேவைகள் தொடர்பான தடைகளையும் சந்தித்தபோதிலும், அணுவாற்றல் திட்டங்களில் தனது இறைமையைப் பேணிக்கொள்ளும் விருப்பினால், முழுமையான அணுக்கருச் சோதனைத் தடை ஒப்பந்தம், அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்து வருகின்றது. இந்தியாவின் அண்மைக்கால நடவடிக்கைகளினால் அது ஐக்கிய அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி வருகின்றது. பொருளியல் அடிப்படையில், இந்தியா ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பிற வளரும் நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியத் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவற்றை உள்ளடக்கியது. இவற்றுடன், துணை இராணுவப் படைகள், கரையோரக் காவல்படை என்பனவும், இராணுவத்தின் கீழ் வருகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவரே, இந்தியப் படைகளின் உயர் தளபதி ஆவார். 1974 ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட சிரிக்கும் புத்தர் நடவடிக்கை (Operation Smiling Buddha) எனப் பெயரிடப்பட்ட தொடக்க அணுக்கருச் சோதனை, பின்னர் 1998 இல் இடம் பெற்ற "நிலத்துக்கு அடியிலான சோதனைகள்" என்பவற்றின் மூலம் இந்தியா ஒரு அணு வல்லரசு என்னும் இடத்தைப் பிடித்தது. 1998 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவுக்கான இராணுவத் தேவைகள் வழங்குவதைத் தடை செய்தன. எனினும் படிப்படியாக இவை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியா தான் முதலாவதாக அணுவாயுதத்தைப் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.

[தொகு] மாநிலங்களும் பிரதேசங்களும்

இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 28 மாநிலங்களும் ஆறு ஒன்றியப் பகுதிகளும் ஒரு தேசியத் தலைநகரப் பகுதியும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன.
இந்திய தேசப்படம்
  1. ஆந்திரப் பிரதேசம்
  2. அருணாச்சல் பிரதேசம்
  3. அஸ்ஸாம்
  4. பிஹார்
  5. சத்தீஸ்கர்
  6. கோவா
  7. குஜராத்
  8. ஹரியானா
  9. இமாசலப் பிரதேசம்
  10. ஜம்மு காஷ்மீர்
  11. ஜார்க்கண்ட்
  12. கர்நாடகம்
  13. கேரளம்
  14. மத்தியப் பிரதேசம்
  15. மகாராஷ்டிரம்
  16. மணிப்பூர்
  17. மேகாலயா
  18. மிசோரம்
  19. நாகாலாந்து
  20. ஒரிஸா
  21. பஞ்சாப்
  22. ராஜஸ்தான்
  23. சிக்கிம்
  24. தமிழ் நாடு
  25. திரிபுரா
  26. உத்தரகண்ட்
  27. உத்தரப் பிரதேசம்
  28. மேற்கு வங்காளம்
  1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  2. சண்டிகர்
  3. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
  4. தாமன், தியு
  5. லட்சத்தீவுகள்
  6. புதுச்சேரி
  7. தில்லி

[தொகு] புவியியல்


முதன்மைக் கட்டுரை: இந்தியாவின் புவியியல்
ஜம்மு காஷ்மீரில் தொடங்கி கிழக்கில் அருணாச்சலப் பிரதேசம் வரை நீளும் இமய மலை இந்தியாவின் எல்லையாகத் திகழ்கிறது
.
பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமயமலைத்தொடர்கள் (உயரமான சிகரம் கஞ்சன்சுங்கா 8,598 மீ), இந்து-கங்கை சமவெளி (மேற்கில் தார் பாலைவனம்) மற்றும் தக்காணப் பீடபூமி. தக்காணப் பீடபூமி மூன்று திசைகளில் முறையே கிழக்கே வங்காள விரிகுடாக் கடல், தெற்கே இந்துமாக்கடல் மற்றும் மேற்கே அரபுக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
இமய மலையில் தோன்றி இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளில் கங்கை ஆறும், பிரமபுத்திராவும் முக்கியமானவை. இவை இரண்டுமே வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. யமுனா, கோசி என்பன கங்கை நதியின் துணை நதிகள். கோசி ஆறு பாயும் நிலப்பகுதி மிகக் குறைவான சரிவைக் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் பொரும் அழிவைக் கொடுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. தீவக்குறைப் பகுதியில் பாயும் கோதாவரி, மகாநதி, காவிரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் சரிவு கூடிய பகுதியில் அமைந்திருப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த ஆறுகளும் வங்காள விரிகுடாவிலேயே கலக்கின்றன. நர்மதா, தாப்பி போன்ற முக்கிய ஆறுகள் இந்தியாவின் மேற்குக் கரையூடாக அரபிக் கடலில் கலக்கின்றன. இந்தியா என்ற பெயர் ஏற்படக் காரணமாக இருந்தது சிந்து நதியாகும். இந்திய எல்லைக்குள் இரண்டு தீவுக்கூட்டங்கள் உள்ளன. பவளப்பாறைத் தீவுகளான லட்சத்தீவுகள் இந்தியத் தீவக்குறையின் மேற்குக் கடற்கரைக்கு அப்பாலும், எரிமலைச் சங்கிலியான அந்தமான்-நிக்கோபார் தீவுக்கூட்டம் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் அந்தமான் கடலிலும் அமைந்துள்ளன.
இந்தியாவின் தட்ப வெட்பம் தெற்கே வெப்பம் மிகுந்த பருவ மழை சார்ந்ததாகவும், வடக்கே மட்டான தட்பவெப்பமுள்ள காலநிலை ஆகவும் ஏனைய பகுதிகளில் பல்வேறு இடைப்பட்ட தட்ப வெட்ப நிலைகளாகவும் நிலவுகிறது.
இந்தியாவில் கடற்கரை 7,517 கிலோமீட்டர்கள் (4,671 மைல்கள்) நீளமானது. இதில் 5,423 கிலோமீட்டர்கள் (3,370 மைல்கள்) இந்தியத் தீவக்குறைப் பகுதியையும், 2,094 கிமீ (1,301 மை) அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகள் ஆகியவற்றையும் சேர்ந்தவை. இந்தியத் தலைநிலப் பகுதியைச் சேர்ந்த கரைகளில், 43% மணற்பாங்கானவை, 11% பாறைகளைக் கொண்டவையாகவும், 46% சேற்று நிலங்கள் அல்லது சதுப்பு நிலங்களாகவும் காணப்படுகின்றன.

[தொகு] இந்தியாவின் தாவர விலங்கு வளங்கள்

இந்தோமாலய சூழ்நிலைவலயத்துள் அமைந்துள்ள இந்தியாவில் குறிப்பிடத்தக்க உயிரியல் பல்வகைமை காணப்படுகின்றது. 18 பெரும்பல்வகைமை நாடுகளுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள மொத்த இனங்களுடன் ஒப்பிடும்போது, பாலூட்டி இனங்களில் 7.6%, பறவை இனங்களில் 12.6%, ஊர்வனவற்றில் 6.2%, ஈரூடகவாழிகளில் 4.4%, மீன்களில் 11.7%, பூக்கும் தாவரங்களில் 6.0% இந்தியாவிலே காணப்படுகின்றன. இங்குள்ள சோலாக் காடுகள் போன்ற பல சூழ்நிலைவலயங்கள், உயர்ந்த விழுக்காட்டிலான பகுதிக்குரிய (endemic) இனங்களைக் கொண்டவையாக உள்ளன. ஏறத்தாழ 33 விழுக்காடு இந்தியத் தாவரங்கள் பகுதிக்குரியவை. இந்தியாவின் காடுகள், அந்தமான், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா ஆகியவற்றின் வெப்பவலய மழைக் காடுகள் தொடக்கம் இமயமலைப் பகுதிகளின் ஊசியிலைக் காடுகள் வரை பல்வேறுபட்டு அமைந்துள்ளன.
இந்த எல்லைகளிடையே, ஆச்சா மரங்களை அதிகமாகக் கொண்ட கிழக்கு இந்தியாவின் ஈரவலய இலையுதிர் காடுகள், தேக்கு மரங்களைக் கூடுதலாகக் கொண்ட மத்திய இந்தியா, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் காணும் இலையுதிர் காடுகள், கருவேல மரங்களைப் பெருமளவில் கொண்ட நடுத் தக்காணத்தினதும், மேற்குக் கங்கைச் சம வெளியினதும் முட்காடுகள் என்பன உள்ளன. முக்கியமான இந்தியத் தாவரங்களுள், நாட்டுப்புறங்களிலே மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படும் வேம்பு, மொஹெஞ்சதாரோவின் முத்திரைகளில் காணப்படுவதும், புத்தர் ஞானம் பெற்றதுமான அரச மரம் என்பவை குறிப்பிடத்தக்கவை.
பல இந்தியத் தாவர, விலங்கு இனங்கள் தொடக்கத்தில் இந்தியாவின் அமைவிடமான கோண்ட்வானாவில் உருவான வகைகளின் வழிவந்தவை. பின்னர், இந்தியத் தீவக்குறை நகர்ந்து, லோரேசிய நிலத்திணிவுடன் மோதியபோது, பெருந் தொகையான உயிரினங்கள் இடம் மாறுவதற்கு வழியேற்பட்டது. எனினும், 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த, எரிமலை வெடிப்புக்களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் பெருமளவு இந்தியப் பகுதிக்குரிய இனங்கள் அழிந்து போயின. இதன் பின்னர், ஆசியப் பகுதிகளிலிருந்து, உருவாகிவந்த இமயமலையின் இரு பக்கங்களிலும் இருந்த விலங்குப்புவியில் கணவாய்கள் வழியாகப் பாலூட்டிகள் இந்தியாவுக்குள் வந்தன. முடிவில், இந்திய இனங்களில், 12.6% பாலூட்டிகளும், 4.5% பறவைகளும் மட்டுமே இந்தியப் பகுதிக்குரியவையாக இருக்கின்றன. இது, 45.8% ஊர்வனவும், 55.8% ஈரூடகவாழிகளும் இந்தியாவுக்கு உரியனவாக இருப்பதுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும். குறிப்பிடத்தக்க ஊள்ளூர் இனங்கள், சிங்கவால் மந்தி (Trachypithecus johnii), புபோ பெதோமீ (Bufo beddomii) என்னும் ஒருவகைத் தவளை இனம் என்பனவாகும். இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் அழியும் வாய்ப்புள்ளவையாகக் குறிப்பிட்டுள்ள இனங்களில் 2,9% இனங்கள் இந்தியாவில் உள்ளவை. இவற்றுள் ஆசியச் சிங்கம், வங்காளப் புலி என்பவை அடங்கும்.
அண்மைப் பத்தாண்டுகளில், மனித ஊடுருவல் காட்டுயிர்களுக்கு ஆபத்தாக அமைந்தன. இதனால், தேசியப் பூங்காக்களும், 1935 ஆம் ஆண்டில் முதன் முதலாக அமைக்கப்பட்டுப் பின்னர் விரிவாக்கப்பட்டன. 1972 இல் இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட காப்பகங்களும், 13 உயிர்க்கோள ஒதுக்ககங்களும், 25 ஈர நிலங்களும் ராம்சார் ஒபந்தம் (Ramsar Convention) எனும் அனைத்துலக ஒப்பந்தத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

[தொகு] பொருளாதாரம்


முதன்மைக் கட்டுரை: இந்தியாவின் பொருளாதாரம்
வேகமாக வளரும் இந்தியாவின் த.தொ. துறையின் வருமானம் 13 பில்லியன் அளவில் உள்ளது. படத்தில் காண்பது முன்னணி த.தொ. நிறுவனமான இன்ஃபோசிஸ்
விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியில் இந்தியா, தனியார் தொழில் முயற்சிகளிலும், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற துறைகளிலும் இறுக்கமான அரசுக் கட்டுப்பாடுகளைக் கொண்டு ஒரு சோசலிசம் சார்ந்த அணுகு முறையையே கடைப்பிடித்து வந்தது. ஆயினும், 1991 ஆம் ஆண்டு முதல், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் படிப்படியாக அதன் சந்தைகளைத் திறந்துவிட்டதோடு, வெளிநாட்டு வணிகம், முதலீடு என்பவற்றின் மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வந்தது. மத்திய, மாநில அரசிகளின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை குறைந்துள்ளதோடு, 1991 மார்ச் மாதத்தில் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்கம், 2008 ஜூலையில் 308 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தலும், சில துறைகளைத் தனியார் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்புக்காகத் திறந்து விடுவதும் தொடர்ந்து வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் மரபுவழி வேளாண்மை, தற்கால வேளாண்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, பல தரப்பட்ட புதிய தொழில்கள் மற்றும் மென்பொருள் உட்பட்ட பல துணைச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 2003-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி மென்பொருள் ஏற்றுமதி மட்டும் சுமார் 1000 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இருப்பினும் மக்கள் தொகையில் கால் பங்கு வகிப்பவர்கள் சரியான உணவின்றி வறுமையில் வாழ்கின்றனர்.
இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணய மதிப்பு 2001 மற்றும் பின் வரும் ஆண்டுகளில் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.089 டிரில்லியன் டாலர்கள் அளவை எட்டியுள்ளது. பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் $4.726 டிரில்லியன் (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த இரு பத்தாண்டுகளாக 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. 516.3 மில்லியன் அளவான இந்தியாவின் தொழிலாளர்படை உலகின் இரண்டாவது பெரிய தொழிலாளர்படை ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் வேளாண்மை அல்லது அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 28 விழுக்காட்டினர் சேவைத்தொழில்கள் அல்லது அது சார்ந்த துறைகளிலும், 12 விழுக்காட்டினர் தொழில்துறைகளிலும் பணிபுரிகின்றனர். இந்தியாவின் முதன்மை வேளாண்மைப் பயிர்கள் அரிசி, எண்ணெய்விதை, பருத்தி, சணல், தேயிலை, கரும்பு, உருளைக்கிழங்கு என்பனவாகும். வேளாண்மைத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% ஐ வழங்குகிறது. சேவைத்துறையும், தொழில்துறையும் முறையே 54%, 18% பங்களிப்பைச் செய்கின்றன. முக்கியமான தொழில்துறைகளில், தானுந்து, சிமெந்து, வேதிப்பொருட்கள், நுகர்வோர் மின்னணுவியல் பொருட்கள், உணவு பதனிடல், இயந்திரங்கள், சுரங்கத்தொழில், பெட்ரோலியம், மருந்துவகை, உருக்கு, போக்குவரத்துச் சாதனங்கள், உடைகள் என்பன அடங்குகின்றன. விரைவாக வளரும் பொருளாதாரத்துடன் கூடவே, ஆற்றல் தேவையும் அதிகரித்து வருகின்றது. ஆற்றல் தகவல் நிர்வாகத்தின் (Energy Information Administration) கணக்கீட்டின் படி, எண்ணெய் நுகர்வில் இந்தியா ஆறாவது இடத்திலும், நிலக்கரி நுகர்வில் மூன்றாவது இடத்திலும் உள்லது.

[தொகு] வறுமை நிலை

இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350 - 400 மில்லியன்[1] மக்கள் வறுமை கோட்டின் கீழேயே வாழ்கின்றார்கள். உலக வங்கியின் உலக வளர்ச்சி அளவீடுகளின் அடிப்படையில் 35% இந்தியர்கள் $1 வருமானத்திலேயே வாழ்கின்றார்கள்.[2] இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிட, கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மேலும், 40%[3] மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. இந்தியாவின் பொருளாதர பகிர்வு மிகவும் சமனற்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், நகர வாசிகளுக்கும், கிராம வாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரிது.

[தொகு] மக்கள்தொகை பரம்பல்

இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தியைக் காட்டும் நிலப்படம்.
இந்தியாவின் மக்கள்தொகை 102 கோடிக்கும்[3] மேலாக மதிப்பிடப் பட்டு, உலக நாடுகளில், இந்தியா மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில், மருத்துவ முன்னேற்றங்கள் காரணமாகவும், இந்தியாவின் பசுமைப் புரட்சியால் விவசாய வளர்ச்சி அதிகமான காரணத்தினாலும், இந்திய மக்கள்தொகை அதீத வளர்ச்சி பெற்றது.[4][5] இந்தியாவின் நகரங்களில் வாழும் மக்கள்தொகையின் சதவீதம் முரணற்ற வகையில் வளர்ந்துள்ளது. 1991இல் இருந்து 2001 வரை, இந்தியாவின் நகரத்து மக்கள்தொகை 31.2% அதிகப்படியானது.[6] 2001இல் சுமார் 28.5 கோடி இந்தியர்கள் நகரத்தில் வாழ்த்து வந்தனர். 70 சதவீதத்திற்கும் மேலான இந்திய மக்கள்தொகை, கிராமப்புறங்களில் இருந்தது.[7][8] 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 27க்கும் மேலாக 10 லட்சம் மக்களை கொண்ட நகரங்கள் உள்ளன.[6] அதில் மும்பை, தில்லி மற்றும் கொல்கத்தா அதிகபட்ச மக்கள்தொகையை கொண்டவை ஆகும்.
இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 64.8% (பெண்களுக்கு 53.7%, மற்றும் ஆண்களுக்கு 75.3%).[9] கேரள மாநிலம் அதிகபட்ச எழுத்தறிவு விகிதமான 91 சதவீதத்தையும் பீகார் மாநிலம் குறைந்தபட்ச விகிதமான 47 சதவீதத்தையும் கொண்டது.[10][11] தேசிய ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 944 பெண்களாகும். இந்தியாவின் இடைநிலை வயது 24.9, மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் வருடத்திற்கு 1.38% ஆகும். வருடத்தில் 1000 பேருக்கு 22.01 பிறப்புகள் நிகழ்கின்றன.[9] இந்தியா, உலகின் பலதரப்பட்ட நவீன உடல்நல கவனிப்பு முறையை கொண்டுள்ள போதும், இந்நாடு இடைவிடாமல் பல பொதுநலம் தொடர்பான சவால்களை சந்தித்து வருகிறது.[12][13] உலக நல அமைப்பின்படி 9 லட்ச இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் கெடுநீர் ஆவதாலும், கெடுதியான காற்றை சுவாசிப்பதாலும் உயிரிழக்கிறார்கள்.[14] இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 60 மருத்துவர்கள் உள்ளனர்.[15]

[தொகு] மொழி


முதன்மைக் கட்டுரை: இந்திய மொழிகள்
இந்தியாவில் இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களுளின் இருப்பிடம் ஆகும். அவை 74% மக்களால் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழிக்குடும்பமும், 24% மக்களால் பேசப்படும் திராவிட மொழிக்குடும்பமும் ஆவை. இந்தியாவில் பேசப்படும் மற்ற மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மற்றும் திபெத்தோ-பர்ம மொழிக்குடும்பங்களை சார்ந்தவை. இந்திய அரசியல் அமைப்போ, இந்திய சட்டங்களோ, தேசிய மொழியாக, எந்த ஒரு மொழியையும் விவரிக்கவில்லை.[16] அதிகபட்ச பேச்சாளர்களை[17] கொண்ட இந்தி மொழி, இந்திய அரசின் ஆட்சி மொழியாகும்.[18] ஆங்கிலம், உப ஆட்சி மொழியாக நிலைபெற்று, பெருமளவில், வேலையிடங்களிலும், நிர்வாக இடங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.'[19] கல்வி பெறுவதில், அதிலும் உயர்கல்வி பெறுவதில் ஆங்கிலம் பெரும்பங்கு வகிக்கிறது. அதோடு, ஒவ்வொரு மாநிலமும் தனக்குத் தானே, அந்தந்த மாநிலங்களில் பரவலாக பேசப்படும் மொழியை ஆட்சி மொழியாக கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு 21 மொழிகளை அடையாளம் கொள்கிறது. தமிழ், சமசுகிருதம், தெலுங்கு, கன்னடம், ஆகியன செம்மொழித் தகுதி பெற்ற இந்திய மொழிகளாகும்.மரபாக செம்மொழிக்கு இருக்கும் வரையறையை பயன்படுத்தாமல் இந்தியா தானாக செம்மொழிக்கான வரையறையை வகுத்து உள்ளது

[தொகு] சமயம்


முதன்மைக் கட்டுரை: இந்திய சமயங்கள்
2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 80 கோடிக்கும் மேலான இந்தியர்கள் (80.5%), இந்துக்கள் ஆவர். மற்ற மதத்தினவர்கள், இசுலாமியர்கள் (13.4%), கிறித்தவர்கள் (2.3%), சீக்கியர்கள் (1.9%), பௌத்தவர்கள்(0.8%), சமணர்கள் (0.4%) ஆவர்.[20] மக்கள்தொகையில் 8.1% ஆதிவாசிகள் ஆவர்.[21] இசுலாமியர் அதிகம் வாழும் நாடுகளில், உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

[தொகு] சமூக அமைப்பு

சாதிய அமைப்பே இந்திய சமூக கட்டமைப்பின் சமூக அதிகாரப் படிநிலை முறைமையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும் பிரிவுகளில் காணலாம். இவற்றுள் பல்லாயிரக் கணக்கான உட்பிரிவுகளும் இருக்கின்றன. அவற்றிற்கு இடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. தற்போது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான பல சட்டங்கள் உள்ளன. இது தவிர தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடும் உள்ளது. இருப்பினும் இந்நாட்டின் அரசியல் வாழ்விலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.
இந்தியாவில் பெண்களின் சமூக நிலை என்றும் சம நிலமையுடையதாக இருக்கவில்லை. அரசியலில், தொழில் வாய்ப்பில், கல்வியில், பொருளாதார பங்கில் பெண்கள் புறக்கணிகப்பட்டோ தடுக்கப்பட்டோ வந்துள்ளார்கள். பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணம், சீதனம், உடன்கட்டையேறுதல், மறுமண மறுப்பு, மணவிலக்கு மறுப்பு, உடமை மறுப்பு, கொத்தடிமையாக்கல், கோயிலுக்கு அடிமையாக்கல் (தாசிகள்) என பெண்களின் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்ட ரீதியாக பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என கூட சொல்ல இயலாது ஏனெனில் இந்தியாவில் சமய அடிப்படையிலான குடியியல் சட்டம் நடப்பில் இருக்கின்றது. எனினும், இந்திய வரலாற்றில் மற்ற நாடுகள் போல் அல்லாத ஒரு முரண்பாடும் உண்டு. அதாவது, பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படல், பெண்களை சிவனுடைய சரி பாதியாக, சக்தியாக அங்கீகரித்தல் போன்றவையாம். மேலும், நவீன இந்தியாவின் ஆளுமை படைத்த தலைவர்களாக பெண்களும் இடம் பெறுகின்றார்கள். இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஜெயலலிதா ஆகியோர் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் பெண்களின் நிலை ஒரே ரீதியில் அமைந்திருக்கின்றது என்றும் கூற முடியாது. குறிப்பாக கேரள மாநிலத்தில் பெண்களின் உரிமைகள் நன்கு பேணப்படுகின்றன.
சமீப காலங்களில் பெண்களின் நிலை குறிப்பிடத் தகுந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சி மற்றும் அதை தொடர்ந்த இந்திய பொருளாதார வளர்ச்சி பெண்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

[தொகு] பண்பாடு


முதன்மைக் கட்டுரை: இந்தியாவின் பண்பாடு
இந்திய பண்பாடு உலகின் முக்கிய பண்பாட்டு ஊற்றுக்களில் ஒன்று. பல இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி இந்திய பண்பாடு வெளிப்பட்டு நிற்கின்றது. இப்பண்பாடு உயரிய, பலக்கிய (complex), பன்முக இசை, நடனம், இலக்கியம் என பல கூறுகளை கொண்டது. இந்திய பண்பாட்டின் தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளை கொண்டது. பின் வருவன ஒரு சுருக்கமே.
கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரு முக்கிய செந்நெறி இசை மரபுகள் ஆகும். கர்நாடக இசை தெற்கிலும், இந்துஸ்தானி இசை வடக்கிலும் தோற்றம் கொண்டன. இந்துஸ்தானி இசை, இஸ்லாமிய இசையின் தாக்கங்களை உள்வாங்கிய ஒரு மரபு. இவை தவிர நாட்டார் இசை, தமிழிசை என பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. இந்திய நடனக்கலையில் பரத நாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, கதக், கதகளி போன்று பல நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம் மூலம் கதைகளும் சொல்லப்படுகின்றன. இவை தவிர நாட்டுபுற நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு.
உலகின் மிக முக்கிய இலக்கிய உருவாக்கங்களை இந்தியா கொண்டுள்ளது. சமசெகிருதம், தமிழ், வங்காள மொழி, உருது போன்ற பல முக்கிய உலக மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இந்தியாவின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன. வேதம், வேதாந்தம், ஆகமங்கள், புத்தசமய படைப்புக்கள், காப்பியங்கள் (இராமாயணம், மகாபாரதம்), தமிழ் சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் தமிழ் காப்பியங்கள் என பல கோணங்களில் இந்திய இலக்கியம் வெளிப்படுகின்றது.
கொண்டாட்டங்கள் இந்திய பண்பாட்டின், வாழ்வியலின் இணை பிரியா கூறுகள் ஆகும். பொங்கல், தீபாவளி, நவராத்திரி என கொண்டாட்டங்கள் பல உண்டு. இந்திய சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு.
பண்டைய இந்தியாவானது அறிவியலில் சிறந்து விளங்கியது. ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோர் கோள்களின் இயக்கங்களின் பற்றி ஆராய்ந்த அறிஞர்களில் முக்கியமானவர்களாவர். இன்று பொதுவாக பயன்படுத்தப்படும் கணித எண்கள், இந்து-அரேபிக் எண்கள் ஆகும். இந்தியாவிலேயே பூச்சியம் என்ற எண்ணக்கரு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பர்.
சேலை, வேட்டி, குர்தா, சல்வார் கமீஸ் போன்றவை, இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும், கோதுமையும் இந்திய உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாளி, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை இந்தியர்கள் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும்.
இந்தியர்களின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாக திரைப்படங்கள் விளங்குகின்றன. இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு கூறுகளுக்காகவும் வங்காள மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
இந்தியாவின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க சில பண்பாட்டு வேறுபாடுகளை காண முடியும் என்றாலும் மாநில மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து பண்பாட்டுச் கூடல் நிகழும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிகழ்வுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, பெருகி வரும் மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆகும். 1990களுக்குப் பிறகு நிகழ்ந்த உலக மயமாக்கலும், பொருளாதார தாராளமயமாக்கலும் இந்தியப் பண்பாட்டை குறிப்பிடத்தக்க அளவு மேல் நாட்டு பண்பாட்டின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், மொழிகள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு / உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன.
பல்வேறு காலக்கட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், இந்திய பண்பாட்டின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், குடும்ப உறவுகளுக்கான மதிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை இன்னும் நீர்த்துப் போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும்.
இவற்றையும் பார்க்கவும்:

[தொகு] விளையாட்டு


முதன்மைக் கட்டுரை: இந்தியாவில் விளையாட்டு
இந்தியாவில் தேசிய விளையாட்டு, ஹாக்கி இந்தியாவால் கையாளப்படும் வளைதடிப் பந்தாட்டம் ஆகும். இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி, 1975 வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று உலக அளவில் அதிக வெற்றி பெற்ற ஹாக்கி அணியாக திகழ்கிறது. இருப்பினும், கிரிக்கெட் தாம் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும்.[22] இந்திய கிரிக்கெட் அணி, 1983 துடுப்பாட்ட உலகக் கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் மற்றும் 2007 ஐசிசி உலக இருபது ஓவர் கோப்பையை வென்று, அதோடு 2002 ஐசிசி சாம்பியன் வெற்றிக் கோப்பையை இலங்கையுடன் பங்கு கொண்டது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நிர்வகித்து வருகிறது. உள்நாட்டுப் போட்டிகளான ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை, இரானி கோப்பை மற்றும் என்.கே.பி. சால்வே சேலஞ்ஜர் கோப்பையையும் அது நிர்வகித்து வருகிறது. இவற்றோடு பிசிசிஐ, இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியையும் விமரிசையாக நடத்தி வருகிறது.
இந்தியா பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டுக்களின் துவக்க இடமாகவும் இருப்பிடமாகவும் திகழ்கிறது. அவை கபடி, சடுகுடு, பெஹெல்வாணி, மற்றும் கில்லி தண்டா ஆகும். இந்திய வீர விளையாட்டுக் கலைகளான கலரிப்பயட்டு, மல்யுத்தம், சிலம்பாட்டம், வர்மக் கலை ஆகியவற்றின் முற்கால வடிவங்கள் இந்தியாவில் தொடங்கின. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது இரண்டும் இந்தியாவில் விளையாட்டிற்காக கொடுக்கப்படும் உயர்ந்த பட்ச விருதுகளாகும். அது போல் துரோணாச்சார்யா விருது விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசால் கொடுக்கப் படும் உயர்ந்த பட்ச விருதாகும்.
இந்தியவிலிருந்து ஆரம்பமானதாக கருதப்படும், சதுரங்கம், இந்திய பெருந்தலைவர்கள் எனப்படும் வெற்றி வீரர்களின் அதிக எண்ணிக்கை அதிகமாகி வருவதால், மீண்டும் பரவலான விளையாட்டாக தலைதூக்குகிறது.[23] இந்திய டேவிஸ் கோப்பை அணி மற்றும் பல்வேறு டென்னிஸ் ஆட்டக்காரர்களின் வெற்றிகளாலும், டென்னிஸ் விளையாட்டும் புகழ்பெற்று வருகிறது.[24] துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஒலிம்பிக் போட்டி, உலக துப்பாக்கி சுடுதல் போட்டி, மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பல்வேறு தங்கப் பதக்கங்களையும் வென்று, இந்தியா திடமான முன்னிலை வகிக்கிறது. [25] இவற்றோடு இந்திய விளையாட்டாளர்கள் சர்வதேச அளவில் பூப்பந்தாட்டம்[26], குத்துச்சண்டை[27] மற்றும் மற்போர்[28][29] விளையாட்டுக்களில் பல பதக்கங்களையும் பரிகளையும் வென்றுள்ளனர். காற்பந்தாட்டம், வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், கோவா, தமிழ் நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் புகழ்பெற்ற விளையாட்டாகும்.[30]

[தொகு] விடுமுறை நாட்கள்

இந்தியாவில் மூன்று நாட்கள் தேசிய விடுமுறை நாட்களாகும். அவை:
  1. விடுதலை நாள் (ஆகஸ்ட் 15)
  2. குடியரசு நாள் (ஜனவரி 26)
  3. காந்தி பிறந்த நாள் (அக்டோபர் 2)
இவை தவிர விழாக்களுக்கென உள்ளூர் விடுமுறைகளும் உண்டு.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] துணை நூல்கள்

  • ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உடன் ய.சு.ராஜன். நெல்லை சு. முத்து (தமிழாக்கம்). (2002). இந்தியா 2020. சென்னை: நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (பி) லிட்.
  • மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.

[தொகு] மேற்கோள்கள்

  1. "Andaman & Nicobar Command – Indian Navy". Indiannavy.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2010-08-23.
  2. Kumar, V. Sanil; K. C. Pathak, P. Pednekar, N. S. N. Raju (2006). "Coastal processes along the Indian coastline" (PDF). Current Science 91 (4): 530–536.
  3. Indian Government. "Indian Official Population - 2001 Cencus". பார்க்கப்பட்ட நாள் 22 January 2011.
  4. The end of India's green revolution?. BBC News. accessdate= 22 January 2011.
  5. Food First/Institute for Food and Development Policy. accessdate= 22 January 2011
  6. 6.0 6.1 Subhash Chandra Garg. "Mobilizing Urban Infrastructure Finance in India". World Bank. பார்க்கப்பட்ட நாள் 22 January 2011.
  7. Dyson, Tim; Visaria, Pravin (2004). "Migration and urbanisation:Retrospect and prospects". in Dyson, Tim; Casses, Robert; Visaria, Leela. Twenty-first century India: population, economy, human development, and the environment. Oxford University Press. pp. 115–129. ISBN 0199243352.
  8. Ratna, Udit (2007). "Interface between urban and rural development in India". in Dutt, Ashok K.; Thakur, Baleshwar. City, Society, and Planning: Planning Essays in honour of Prof. A.. Dutt. Concept Publishing Company. pp. 271–272. ISBN 8180694615.
  9. 9.0 9.1 "CIA Factbook: India". CIA Factbook. பார்க்கப்பட்ட நாள் 22 January 2011.
  10. "கேரள எழுத்தறிவு விகிதம்". kerala.gov.in. கேரள அரசு. பார்க்கப்பட்ட நாள் 22 January 2011.
  11. "Census Statistics of Bihar: Literacy Rates பீகார் எழுத்தறிவு விகிதம்". பீகார் அரசு. பார்க்கப்பட்ட நாள் 22 January 2011.
  12. "Country Cooperation Strategy: India". World Health Organization (November 2006).
  13. "Healthcare in India". Boston Analytics.
  14. Robinson, Simon."India's Medical Emergency", TIME magazine, 1 May 2008. 
  15. "இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கான மருத்துவர் விகிதம்". IndiaReports.
  16. "Hindi, not a national language: Court", The Hindu, 25 January 2010. 22 January 2011 அன்று தகவல் பெறப்பட்டது. 
  17. "Languages by number of speakers according to 1991 census". Central Institute of Indian Languages. பார்க்கப்பட்ட நாள் 2 August 2007.
  18. Mallikarjun, B. (Nov., 2004), Fifty Years of Language Planning for Modern Hindi–The Official Language of India, Language in India, Volume 4, Number 11. ISSN 1930-2940.
  19. "Notification No. 2/8/60-O.L. (Ministry of Home Affairs), dated 27 April 1960". பார்க்கப்பட்ட நாள் 22 January 2011.
  20. "Census of India 2001, Data on Religion". Census of India. பார்க்கப்பட்ட நாள் 22 November 2007.
  21. "Tribes: Introduction". தேசிய தகவல் மையம். Ministry of Tribal Affairs, Government of India. மூல முகவரியிலிருந்து January 10, 2007 அன்று பரணிடப்பட்டது. பார்க்கப்பட்ட நாள் 12 April 2007.
  22. Shores, Lori. Teens in India. Compass Point Books, 2007. ISBN 0756520630, 9780756520632.
  23. "Anand crowned World champion", Rediff, 29 October 2008. 22 January 2011 அன்று தகவல் பெறப்பட்டது. 
  24. "India Aims for Center Court", WSJ, September 11, 2009. 22 January 2011 அன்று தகவல் பெறப்பட்டது. 
  25. "Sawant shoots historic gold at World Championships", TOI, Aug 9, 2010. 22 Januar 2011 அன்று தகவல் பெறப்பட்டது. 
  26. "Saina Nehwal: India's badminton star and 'new woman'", BBC, 1 August 2010. 22 January 2011 அன்று தகவல் பெறப்பட்டது. 
  27. "Is boxing the new cricket?", Live Mint, Sep 24 2010. 22 January 2011 அன்று தகவல் பெறப்பட்டது. 
  28. "India makes clean sweep in Greco-Roman wrestling", TOI, Oct 5, 2010. 22 January 2011 அன்று தகவல் பெறப்பட்டது. 
  29. "Sushil Kumar wins gold in World Wrestling Championship", TOI, Sep 12, 2010. 22 January 2011 அன்று தகவல் பெறப்பட்டது. 
  30. Majumdar & Bandyopadhyay 2006, pp. 1–5.
Culture
  • Majumdar, Boria; Bandyopadhyay, Kausik (2006). A Social History Of Indian Football: Striving To Score. Routledge. ISBN 0415348358
இந்தியா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
Wiktionary-logo-en.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி

[தொகு] அதிகாரப்பூர்வமானவை

[தொகு] பிற

கருத்துகள் இல்லை: