வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கேள்வி...?

43 கேள்வி : ஒரு குறிப்பிட்ட சொத்துக்கு ஒரு வருடம் மட்டுமே ஜகாத் கொடுக்க வேண்டும், ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க தேவையில்லை என்று ஒருவர் கூறினார். உங்களது கேள்வி எண் 25 இல் ‘ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுப்பவர்’ என்ற வாசகத்திற்கு விளக்கம் தாருங்கள். அதே சொத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது வெவ்வேறு சொத்திற்கா? (ஹாஜா மொய்னுத்தீன் யாகூ டாட் காம் மெயில் மூலமாக)
ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா? அதாவது எனது சேமிப்பிற்காக ஒரு கிலோ தங்கம் வாங்கினேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து 2.5 சதவிகிதம் ஜக்காத்தை முதல் வருடம் மட்டும் கொடுத்து விட்டால் போதுமா? அல்லது அதற்கு ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தாருங்கள். (பீர் முஹம்மது, ஜித்தா சவூதி அரேபியா, சவூதி ஆன் லைன் மெயில் மூலமாக)
‘நிஸாப்’ என்ற குறிப்பிட்ட அளவை நம்மிடமுள்ள நகையோ அல்லது பணமோ அடைந்து விட்டால் அதற்காக ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டுமென்பதே எல்லா இஸ்லாமிய அறிஞர்களதும் முடிவாகும்.
அதற்குச் சான்றாக பல ஹதீஸ்கள் காணப்பட்ட போதிலும் பின்வரும் ஹதீஸை உங்கள் கவனத்திற்கு தருகிறோம்.
‘மூன்று விஷயங்களைச் செய்யும் ஒருவர் ஈமானின் சுவையை அனுபவித்தவராவார். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை என்று நம்பிக்கை கொண்டு, தனது செல்வங்களிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுப்பவர்…’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஆவியா அல்காழிரி (ரழி), நூல்: அபூதாவூது)
இந்த ஹதீஸ் ஸஹீஹானது என அஷ்ஷெய்க் நாஸிருத்தீன் அல்-அல்பானீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: ஸஹீஹ் சுனன் அபூதாவூது, ஹதீஸ் எண் 1580)
இதுதான் முன்பு கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான நமது பதிலும் ஆகும்.
1. வார்த்தைப் பிரயோகம்:
ஸகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு திரும்பவும் ஸகாத் கொடுக்கத் தேவையில்லை என்றிருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் தெளிவான வார்த்தைகளில் சொல்லி இருப்பார்கள்.
‘ஸகாத் கொடுக்கப்படாத தனது செல்வங்களுக்கு தவறாமல் ஸகாத் கொடுப்பவர்’ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.
‘தனது செல்வங்களிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுப்பவர்’ என்ற வாசகம் ஒரே செல்வத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுப்பவரைக் குறிக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
தனது செல்வம் என்றால் தனது செல்வம் முழுமைக்கும் என்பது பொருள். அவ்வாறு இல்லை என்றால் அது எந்த செல்வம் என்பது குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.
2. ஸஹீஹான ஹதீஸ்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் நம்பகத்தன்மை அற்றது என்று சிலர் கூறி வருகிறார்கள். அதற்குரிய விளக்கத்தை தந்தால் தான் இந்த ஹதீஸை முழுமையாக விளக்கியதாக ஆகும்.
விமர்சனம்: 1
இந்த ஹதீஸை பதிவு செய்த இமாம் அபூதாவூது அவர்கள், அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பவரின் ஏட்டிலிருந்து பதிவு செய்ததாகவும், அந்த ஏட்டை அம்ரு பின் ஹாரிஸ் என்பவரது குடும்பத்தினரிடமிருந்து பெற்றதாகவும் கூறுகிறார்கள். அம்ரு பின் ஹாரிஸ் பற்றிய விபரம் கிடைக்கவில்லை. இவரது நேர்மை நிரூபணமாகவில்லை என்று தஹபீ அவர்கள் கூறுகிறார்கள்.
பதில்: அம்ரு பின் ஹாரிஸ் அவர்களின் ‘நேர்மை நிரூபணமாகவில்லை’ என்ற வாசகத்திற்கு பதிலாக ‘நேர்மை அறியப்படவில்லை’ என்ற வாசகத்தையே தஹபி அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி மீஸானுல் இஃதிலால் என்ற நூலில் காணப்படுகிறது.
தஹபி அவர்கள் எழுதிய அல்காஷிப் என்ற நூலில் அம்ரு பின் ஹாரிஸ் அவர்கள் நம்பகமானவராக கருதப்பட்டுள்ளார் என்று எழுதி, முந்தைய தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார்கள். அதனால் அவர் நம்பகமானவரே.
விமர்சனம்: 2
அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது? அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற விபரம் ஏதுமில்லை.
ஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிஸ் என்பவரின் குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாக வில்லை என்பதால் இது பலவீனமானதாகும்.
பதில்: இமாம் அபூதாவூது அவர்கள் இது அப்துல்லாஹ் பின் ஸாலிமின் ஏடுதான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு தான் அதை தனது நூலில் பதிவு செய்கிறார்கள். இந்த விமர்சனம் இமாம் அபூதாவூது அவர்கள் மீது களங்கம் ஏற்படுத்துவதாகும்.
இங்கே ஏடு ஒன்று கைமாறி இருக்கிறது அவ்வளவு தான். அம்ரு பின் ஹாரிஸ் அவர்களோ அவர்களின் குடும்பத்தினரோ இந்த ஹதீஸை அறிவிப்பதில் ஈடுபட வில்லை. அதனால் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது. அறிவிப்பாளராக இல்லாதவர்கள் பற்றிய விமர்சனம் தேவையில்லை என்பதால் அது பதிவு செய்யப்பட்டிருக்காது. இந்த ஹதீஸை எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இங்கே தெளிவாகத் தெரிகிறது.
மேலும் இந்த விமர்சனம் ஹதீஸ் துறையில் புதுமையான விமர்சனமாகும்.
விமர்சனம்: 3
அப்துல்லாஹ் பின் முஆவியா அல்காளிரி (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் என்று சில நூல்களில் எழுதப்பட்டிருந்தாலும் நபித்தோழர் என்பதை முடிவு செய்வதற்குரிய அளவு கோல் இவருக்குப் பொருந்த வில்லை.
நபித் தோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபித்தோழர் என்று பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதும் இல்லை.
‘நான் நபியிடம் கேட்டேன்’ என்றிருப்பதற்கு பதிலாக ‘நபி சொன்னார்கள்’ என்றுதான் இருக்கிறது. இதுவும் இவர் ஸஹாபி என்பதை நிரூபிக்க வில்லை.
நபித்தோழரோ அல்லது தாபியீயோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளித்திருக்க வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்க வில்லை.
நபித்தோழரைத் தீர்மானிப்பதற்குரிய தத்ரீப் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள அளவு கோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாக வில்லை. எனினும் சில நூற்களில் இவரை நபித்தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை.
பதில்: இவர் நபித்தோழர் தான் என்று பலர் கூறியிருப்பதும் அவை பல நூல்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் இவர் நபித்தோழர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்யுமே தவிர சந்தேகத்தை ஏற்படுத்தாது.
இவர் நபித்தோழர் தான் என்பதை கீழ்காணும் நூல்களில் பார்க்கலாம்.
1.தக்ரீப் அத்தஹ்ரீப் 3631, 2.அல்காசுஃப் 2995, 3.தஹ்தீப் அல்கமால் 3583, 4.அல்இஸாபா 4968, 5.தஹ்தீபுத் தஹ்தீப், 6.மீஸானுல் இஃதிலால் 7.தஹ்தீபுல் கமால் இவைபோன்ற இன்னும் ஏராளமான கிதாபுகளில் நபித்தோழர் என்பது கூறப்பட்டுள்ளது.
இதுவே இவர் நபித்தோழர் என்பதை சந்தேகமற நிரூபிக்கிறது. மற்ற துணை விமர்சனங்கள் அவ்வளவு வலுவானவை அல்ல.
விமர்சனம்: 4
இந்த ஹதீஸில் வரக்கூடிய யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர் பின் நுஃபைர் என்பவருக்கும் இடையே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். அதனால் இது அறிவிப்பாளர்களிடையே தொடர்பு விடுபட்ட ஹதீஸ் என்பது அவர்களின் விமர்சனம்.
பதில்: ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் சொல்கிறார்கள்: அபூதாவூதில் வரக்கூடிய ஹதீஸில் தான் ஒரு அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். ஆனால் இப்னு ஹஜர் அவர்கள் அதே அறிவிப்பாளர் வரிசையை பதிவு செய்யும் போது யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர் பின் நுஃபைர் என்பவருக்கும் இடையே விடுபட்டுள்ள அப்துல்லாஹ் என்பவரை பதிவு செய்து, இது தொடர்பு அறுந்த ஹதீஸ் இல்லை என்கிறார்கள். இமாம் அபூதாவூது அவர்களின் மூலப் பிரதியில் அப்துல்லாஹ் என்பவர் விடுபடாமல் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது ஆகும். அதனால் இதில் அறிவிப்பாளர் விடுபட வில்லை.

கருத்துத்

கருத்துகள் இல்லை: