வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

உடல் உறுப்புகளை உயிருடனோ, மரணித்த பின்போ தானமாக தரலாமா?

   ஒருவர் பணத்திற்காகவோ, பாசத்திற்காகவோ, அல்லது தர்மத்திற்காகவோ உயிருடன் இருக்கும்போது அல்லது இறந்த பின்போ தன்னுடை கண், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை பிற மனிதர்களுக்கு தானம் கொடுக்கலாமா? இதில் இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பார்ப்போம்.
    மனிதனின் உடற்கூறுகளை ஆராயும் மருத்துவத்துறையின் வளர்ச்சி சென்ற ஒரு நூற்றாண்டில் பல நூறு ஆண்டுகள் காணாத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் மனித இனம் பற்பல நன்மைகளை அடைந்துள்ளது. அதில் ஒன்று உடல் உறுப்புகளை மாற்றும் Transplantation முறையாகும்.
    முழுமை பெற்ற இஸ்லாம் இவ்விதம் உடல் உறுப்புகளை உயிருடனோ, மரணித்த பின்போ தானமாக தரலாமா? போன்ற நியாயமான கேள்விகள் முஸ்லிம்களிடையே எழுந்துள்ளது. இதற்கு ஒரிரு வார்த்தைகளில் பதிலலிப்பது விவேகமாகாது. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆராய்ந்தால் எக்காலத்திற்கும் உகந்தது இஸ்லாம் என்ற கருத்து அனைவரிடமும் நிலவும். எனவே நாம் இதனை சிறிது விளக்கமாகவே பார்ப்போம்.
   
வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்். அவன் நாடியதைப் படைக்கிறான்். இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (
அல்குா்ஆன5:17)
    வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! (அல்குா்ஆன24:64)
    அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்் பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்் அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (
அல்குா்ஆன2:29)
    போன்ற திருக்குர்ஆன் வசனங்களின்படி அல்லாஹ் அனைத்திற்கும் அதிபதி என்பதை அறிகிறோம். இப்படிப் படைக்கப்பட்ட அனைத்தும் எதற்கு? ஏன் அல்லாஹ் படைத்தான்? என்ற வினாவுக்கு அல்லாஹ் பதிலலிக்கிறான்.
     அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்் (அல்குா்ஆன 2:29)
    நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்் இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்் அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்் நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர். (
அல்குா்ஆன31:20)
    இவ்விதமாக அகத்திலும் புறத்திலும் அருட்கொடைகளாக அளித்திருப்பவை தனது உடலிலும் உண்டு. வானங்களிலும் பூமிகளிலும் உள்ள அனைத்திலும் உள்ளன. அவற்றை பயன்படுத்திக்கொள்வது நமது கடமையாகும். அவற்றை செம்மையாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் அல்லாஹ் அமைத்திருக்கிறான்.
    அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்் அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன. (
அல்குா்ஆன45:13)
    அல்லாஹ் படைப்புகளில் மிக உயர்ந்த படைப்பான மனித இனத்திற்கு மற்ற படைப்பினங்களை கட்டுப்படுத்தி தந்திருக்கிறான். அதே நேரத்தில் மனிதனுக்கு மனிதன் உபயோகமாக இருக்க வேண்டுமென்பதையும் இஸ்லாம் கூறாமலில்லை. அதன் அடிப்படையில்தான் தர்மங்கள் நல்லெண்ண உறவுகள் பந்தப்பினைப்புகளை அல்லாஹ் அவசியமாக நற்செயலாக நமக்கு காட்டுகிறான்.
   
நன்மையிலும்் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்். (அல்குா்ஆன5:2)
   
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குா்ஆன3:92)
    அவனது படைப்பில் எப்பொருளும் வீணுக்காகவோ விளையாட்டுக்காகவோ படைக்கப்படவில்லை என்பதை அலுத்தம் திருத்தமாக அல்லாஹ் கூறுகிறான்.
    வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை.(38:27) இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்் காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு. (38:27)
    என எச்சரிக்கையும் செய்கிறான். எனவே எதனையும் வீணாக்கவோ, உதாசீனப்படுத்தவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஒரு சிட்டு குருவியைக்கூட முறை தவறி கொள்வதை அல்லாஹ் விசாரிப்பான் என நபி
صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.
    ஒருவர் ஒரு சிட்டுக்குருவியை அல்லது அதைவிடப் பெரிய பிராணியை அதற்குரிய முறையின்றி கொன்று விடுவாராயின் அதைக் கொன்றது குறித்து அல்லாஹ் அவரிடம் (கேள்வி) கேட்கவே செய்வான் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! அதற்குரிய முறை என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அதை அவர் அறுத்து புசித்திட வேண்டும். அதன் தலையைத் துண்டித்து அதை(க்கொன்று வீணாக) வீசிவிடக் கூடாது என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ர்பின் ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்: அஹ்மது, நஸயீ, தாரமி.
    எனவே அல்லாஹ்வின் படைப்புகளில் எதனையும் உரிய முறையில் உபயோகப்படுத்துவதையே அல்லாஹ் விரும்புகிறான். உபயோகிக்க தகுதியுள்ள நிலையில் அதனை வீணாக்குவதை வெறுக்கிறான். அதனைப்பற்றி கேள்வியும் கேட்பான் என்பது தெளிவாகிறது.
    இதன் அடிப்படையில் இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் உயிருடன் உடல் உறுப்புகளை மாற்றுவது விஷயத்திலும், இறந்தவர்களின் உறுப்புகளை உயிருடனிருப்பவருக்கு தர்மம் செய்வது விஷயத்திலும் இஸ்லாம் காட்டும் வழியை நோக்கவேண்டும்.
     நாம் வானங்களையும், பூமியையும், இவை இரணிடிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (அல்குா்ஆன15:85)
    அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை. (அல்குா்ஆன30:8)
    ஒரு மனிதன் இறக்கிறான் அவனைப் பொருத்த வரையில் அவனது தவணை முடிவடைகிறது. அவன் உடல் அமைப்பிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையையும் அல்லாஹ் வைத்திருக்கிறான். எனவேதான் ஒருவன் இறந்த பின்பும் அவனது உறுப்புகள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை மீண்டும் உபயோகிக்கும்படியான உயிர் தன்மையுடன் இருக்கின்றன.
    எனவே, இறந்து விட்டவரின் உடலிலுள்ள கண், சிறுநீரகம், இதயம் போன்றவை அக்குறிப்பிட்ட நேரத்திற்குள் இறந்தவரின் உடலிலிருந்து சரியான முறையில் பிரிக்கப்பட்டால் அதனை உயிருடன் இருப்பவர்களுக்கு பொருத்தி பயன் அடையலாம் என்பதை மருத்துவ ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர். அதனை செயல்படுத்தி வருவதையும் கன்கூடாக பார்க்கிறோம்.
    அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்் அவர்களுக்குக் கண்கள் உண்டு் ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்் இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (அல்குா்ஆன7:179)
    இதயங்களைக் கொண்டும், கண்களைக் கொண்டும், காதுகளைக் கொண்டும் நல்லுபதேசங்கள் பெறவேண்டும். அவ்வுறுப்புகள் மூலம் பெறாதவன் மிருகத்தைவிட மோசமானவன் என்பதை (7:179) வசனத்தின் கருத்தாக இருக்கிறது.
மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்குா்ஆன5:32)
    உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்் காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்்  எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பாிகாரமாகும்். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (
அல்குா்ஆன5:45)
    பலிக்கு பழி வாங்குவதைவிட அதனை மறந்து மன்னித்து விடுவதையே பெரும் தர்மமாகவும், பாவத்திற்கு பரிகாரமாகவும் காட்டும் இஸ்லாம், சமுதாயத்தில் வாழ தவணையுள்ளவர்களுக்கு தனது தவணைக்குப்பின் தனது உறுப்புக்குள்ள தவணையைத் தந்து வாழ வைப்பது எவ்வளவு சிறப்புக்குறியது என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
    உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்் (அல்குா்ஆன67:2)
    இவ்வசனத்தில் முதலில் மரணத்தையும், வாழ்வையும் என முதலில் மரணத்தை குறிப்பிடுகிறான். எனவே, ஒருவரின் மரணத்தின் மூலமும் அவரது அழகிய செயல் வெளிப்படுவதை அறியலாம். மரனமடைந்தவர் தனது உடல் உறுப்புகளை தேவையுடையோருக்கு கொடுப்பதன் மூலம் அழகிய செயல் செய்தவராகவே கணிக்கப்படுகிறார் என்பது தெளிவு.
    உயிரோடு இருப்பவர்கள் தனது உறுப்புகளை தரும்போது தன்னைத்தானே அழித்துக்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. உயிரோடி இருப்பவர் தனது உறுப்புகளை தருவதால் அவரது உயிருக்கு ஊறு விளையுமானால் அதனை இஸ்லாம் உண்மையாக கண்டிக்கிறது. அல்லாஹ்வின் பாதையில் உதவ நாடுகிறவர் வரம்பு மீறி தன்னை அழித்துக் கொள்ளக் கூடாது என்பதை அல்குர்ஆன் இப்படி கூறுகிறது.
   அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்். (அல்குா்ஆன2:195)
    எனவே உயிரோடு இருப்பவர் இதயம் போன்ற ஒரு உறுப்புகளைத் தானம் செய்து தன்னை மாய்த்துக்கொள்ள இஸ்லாத்தில் இடமில்லை. இரு உறுப்புகளில் ஒன்றைத் தானமாக தந்து மற்றொன்றைக் கொண்டு எவ்வித ஊனமும் இடையூறுமின்றி வாழ முடியுமென்றால் கொடுப்பது தவறில்லை. மறு உறுப்பால் வாழ்க்கையில் அது வீணாகி அதன் மூலம் தனக்கு உயிர் வாழும் பிரச்சனை ஏற்படுமெனில், சந்தேகம் வந்தால் மற்றெவரின் உறுப்பை பெறவும் வாய்ப்பிருக்காது என நினைத்தால் இரண்டில் ஒன்றை தானமாகத் தருவதை இஸ்லாம் தடுக்கிறது.
    எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்் (அல்குா்ஆன17:36)
    உனக்கு சந்தேகமானவற்றை விட்டுவிடு, உனக்கு சந்தேகமற்ற உறுதியான விஷயங்களில் பால் சென்றுவிடு என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரி)
    eநிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்  (அல்குா்ஆன9:111)
    என்ற இறைவசனப்படி மூமின்களின் உடல், பொருள், ஆவி அனைத்தும் அல்லாஹ்வின் அமானிதமாகும். அதனை விலை பேசுவதற்கு நமக்கு உரிமையில்லை. எனவே உறுப்புகளுக்கு பணம் வாங்குவது தடுக்கப்படுகிறது. ஒருவரின் எண்ணம் நிய்யத்தை பொருத்துதான் அவரது செயல்கள் கணிக்கப்படும் என்பதையும் நபி صلى الله عليه وسلم எடுத்துரைத்துள்ளார்கள்.
    நபி صلى الله عليه وسلم கூறியதாக, எவரொருவர் மக்களிடம் இரக்கம் காட்டவில்லையோ அவரிடம் அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். (ஜாபிர் பின் அப்துல்லாஹ்  رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்:புகாரி, முஸ்லிம்)
    பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுவோருக்கு வானில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள். இப்னு உமர்  رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்:திர்மிதீ, அஹமது)
    தாகத்தால் வருந்திய நாய்க்கு உதவிய ஒரு தீய பெண்ணுக்கு பாவமன்னிப்பு அளிக்கப்பட்டது என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். மேலும் ஈரமான இதயமுள்ள பிராணிகளுக்கு உதவுவதாலும் நன்மையுண்டு என்றார்கள். (அபூஹுரைரா  رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்:புகாரி, முஸ்லிம்
    மேற்காணும் ஹதீஸ்களில் நபி صلى الله عليه وسلم அவர்கள் மனித இனத்தின்மீது முழுமையாக இரக்கம் காட்டுவதையே குறிப்பிட்டுள்ளார்கள். முஸ்லிம்கள், மூமின்கள் மீது மட்டும்தான் இரக்கம் காட்டவேண்டும் என குறிப்பிடவில்லை. அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் அருளப்பட்ட இறுதி வேதம். நபி صلى الله عليه وسلم அவர்கள் முந்திய நபிகளைப்போல ஒரு இனத்திற்கோ நாட்டுக்கோ அனுப்பப்படவில்லை. நபி صلى الله عليه وسلم அவர்கள் அகில உலகிற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள்.
    ஆனால், அதே நபி صلى الله عليه وسلم அவர்கள் மரணித்து விட்டவரின் உடல் எலும்பை முறிப்பது அவர் உயிருடனிருக்கையில் எலும்பை முறிப்பது போலாகும். எனவும் கூறினார்கள். (ஆயிஸாرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஅத்தா, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா)
    இந்த நபி மொழியில் எவ்வித நலனும் கருதாமல் மரணித்தவரை ஊனப்படுத்தவும், வெறுப்பை, குழப்பத்தை ஏற்படுத்தவும் செய்யப்படும் செயலாக செய்வதையே தடுத்தார்கள். உதாரணமாக உஹது போரில் மரணித்த ஹம்ஸா رَضِيَ اللَّهُ عَنْهُ  அவர்களை ஹிந்தா என்ற பெண்மனி அசிங்கப்படுத்திய  செயல் போன்றவற்றையே தடுத்தார்கள் என கொள்ளவேண்டும்.
    வளரும் எதிர்கால  சமுதாய நலன் கருதி மருத்துவத்துறையில் ஆபரேஷன், போஸ்ட்மார்டம் போன்றவற்றால் பற்பல உண்மைகள் உலகுக்குத் தெரிய வருகிறது. மரணித்தவரின் உண்மைக் காரணங்கள் தெரிய வருகின்றன. எனவே அல்லாஹ்வின் பொருத்தம் நாடி உலக ஆதாயங்களை எதிர்பாராமல் ஒருவர் தர்மத்திற்காகவோ, மனிதாபிமானத்திற்காகவோ  தனது உறுப்புகளை பிர மனிதர்களுக்கு கொடுப்பது இஸ்லாமிய அடிப்படையில் கூடும். உயிரோடு இருப்பவர்கள் தனது உயிரை பாதிக்காத வகையில் தேவையுள்ளவர்களுக்கு  தானம் கொடுப்பது கூடும். அவ்விதம் தானம் செய்பவரின் எண்ணம் நிய்யத்துக்கொப்ப அல்லாஹுவிடம் அவர் கூலி பெறுவார்.
    அல்லாஹ்் உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்் இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (
அல்குா்ஆன
6:3)
    ஒரு சிலர் உடல் உறுப்புகளை தானம் செய்வதால் ஊனத்துடன் மறுமையில் எழுப்பபடுவார்கள் என ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். ஆனால் அல்லாஹ் மறுமையில், மனிதன் இறை கட்டளைப்படி வாழாத காரணத்தால் அவர்கள் குருடர்களாக செவிடர்களாக எழுப்பப்படுவவார்கள், மறுமையில் அவர்களின் கண் பார்க்கும் சக்தியை இழந்து விடும் என்பது போன்ற பல கருத்துகளை குர்ஆன் எடுத்துக் கூறுகிறது. எனவே இப்புற உறுப்புகளுக்கும், மறுமையில் எழுப்பப்படும் நிலைக்கும் வேறுபாடு உள்ளது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
    சிலர் உடல் அல்லாஹ்வுக்கு சொந்தம், இதனை பிறருக்கு கொடுக்க இவனுக்கு உரிமையில்லை. அவ்வுடலை மண்ணுக்கே சொந்தப் படுத்த வேண்டுமென மார்க்க தீர்ப்பு அளிக்கின்றனர். உண்மையில் உடல் மட்டுமல்ல உயிர், உடல், செல்வம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அல்லாஹ்வுக்கு சொந்தமான செல்வத்தை தேவையுடையோருக்கு கொடுப்பதை அல்லாஹ் வரவேற்று வலியுறுத்துகிறான் எனில் அவனுக்குச் சொந்தமான உடல் உறுப்புகளையும் தேவையுடைவர்களுக்கு கொடுப்பதை அல்லாஹ் வரவேற்கவே செய்வான் என்பதில் ஐயமில்லை. மேலும் அவ்வுறுப்புகள் அதன் தவணை முடிந்ததும் மண்ணில்தான் போய்ச்சேரும் என்பதிலும் ஐயமில்லை

கருத்துகள் இல்லை: