புதன், 17 ஆகஸ்ட், 2011

எகிப்து, சிரியா, லிபியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் வெடிக்கிறது புரட்சி! (5ஆம் இணைப்பு)


எகிப்து, சிரியா, லிபியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் வெடிக்கிறது புரட்சி! (5ஆம் இணைப்பு)
மாபெரும் புரட்சி ஒன்றுக்கு தாயாராகிறார்கள் இந்திய மக்கள். பாபாராம்தேவ் போன்ற சந்தர்ப்பவாத சாமியார்களைப் போல நினைத்து அன்னாவைக் கைது செய்த சோனியா தலைமையிலான காங்கிரசுக்கு விழுந்த மாபெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த விடயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற அளவில் நாடெங்கிலும் மக்கள் அணி அணியாகத் திரண்டுள்ளார்கள்.

இந்தியாவின் சிறிய குக் கிராமங்களில் இருந்து பெரிய பெரிய நகரங்கள் வரை ஊழலுக்கு எதிராக அன்னாவுக்கு ஆதரவாக மக்கள் அணியணியாகத் திரண்டுள்ளார்கள்.
காங்கிரஸ் அரசோ அன்னாவுக்கு வலுத்து வரும் ஆதரவைப் பார்த்து மிரண்டு போய் திரிசங்கு நிலைக்கு ஆளாகியுள்ளது.
பொதுமக்கள் ஒவ்வொருவரின் பேச்சிலும் காங்கிரஸ் காங்கிரஸ் அரசுக்கெதிரான கோபம் கொப்பளிக்கிறது.

இன்று காலை ஊழலுக்கெதிராக டெல்லியில் உண்ணாவிரதம் இருக்க இருந்த 74 வயதான முதியவரான அன்னாவை அவரது வீட்டில் வைத்து டெல்லி பொலிஸார் கைது செய்தனர்.
காலை 7 மணிக்கு கைது செய்த பொலிஸார் பகல் 12 மணியளவில் சிறப்பு நீதிமன்றில் ஆஜர் செய்தனர். பின்னர் மாலை 3 .30 மணியளவில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ராஜாவும், கல்மாடியும் அங்கு தான் உள்ளனர்.
ஊழலுக்கெதிராக போராடிய அன்னா ஹசாரேயும் ஒரே சிறையில் அதாவது திகாரில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.


இந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்படும் மும்பையின் இந்தியா கேட் பகுதியிலும், திகார் ஜெயிலின் முன்பும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தமது போராட்டத்தை தற்போதும் தொடர்ந்தவண்ணமுள்ளனர்.

ஊழலுக்கெதிராக இந்திய தேசமே திரண்டு எழுந்துள்ளது. அற வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற காந்திய வாதியான அன்னாவை கைது செய்ததன் மூலம் காங்கிரஸ் அரசு பொதுமக்களின் ஒட்டு மொத்த கோபத்துக்கு ஆளாகியுள்ளது.
அன்னாவின் காலில் விழுந்த காங்கிரஸ்! 2 ஆம் இணைப்பு...
பொதுமக்களின் மாபெரும் ஆதரவைப் பார்த்து ஆடிப் போயுள்ள காங்கிரஸ் அரசு அன்னாவை இன்று இரவே விடுதலை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதும் திகார் சிறையின் முன்பு பெருமளவான பொது மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சதரசால் மைதானத்திலும் திரண்ட மக்களின் எழுச்சியைப் பார்த்து மிரண்டு போன பொலிஸார் மைதானத்துக்கான மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.
சிறையை விட்டு வெளியேற மறுக்கும் அன்னா! 3 ஆம் இணைப்பு...
அன்னா ஹசாரேயை விடுவித்துள்ளதாக திஹார் சிறை நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனாலும் அன்னா ஹசாரே சிறையை விட்டு வெளியேற மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள Jaiprakash Narain Park பூங்காவில் நிபந்தனையின்றி உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதித்தால் மட்டுமே சிறையில் இருந்து வெளியேறுவதாக அன்னா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஹசாரே இரவு உணவையும் இன்று தவிர்த்துள்ளார். அவருடன் கைதாகி சிறையில் உள்ள அவரது ஆதரவாளர்களும் இரவு உணவை தவிர்த்தனர்.

அன்னாஹசாறேவுக்கு ஆதரவாக திகார் சிறை உட்பட நாடெங்கிலும் மக்கள் அணி அணியாகத் திரண்டு போராடி வருகின்றனர்.
கொழுந்து விட்டு எரியும் தீப்பந்தங்களுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவு நெருங்குவதையும் பொருட்படுத்தாமல் அன்னாவுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

யார் இந்த அன்னா ஹசாரே? 4 ஆம் இணைப்பு...
இந்தியாவையே மிரள வைக்கும் உருவெடுத்துள்ள சக்தியாக அன்னா ஹசாரே என்பவர் யார்? அவர் உருவாகியது எப்படி? அவர் அடைய நினைப்பது எதனை? அதை அவர் எவ்வாறு அடைய நினைக்கிறார்? போன்ற விபரங்களை தெளிவாக தருகிறோம்.

இவரது இயற் பெயர் கிசான் பாபத் பாபுராவ் ஹசாரே, 1938ம் ஆண்டு ஜூன் 15ம் திகதியன்று மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிறந்தார் , இந்திய ராணுவத்தில் கனரக வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவர்.
தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போது எல்லாம், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஆச்சார்யா வினோபா பாவே போன்றோரின் புத்தகங்களை படித்தார். இதனால், இவருக்கு சமூக சேவை செய்வதிலும், அஹிம்சையிலும் ஆர்வம் ஏற்பட்டது.
1978ல், ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, முழு நேர சமூக சேவகரானார். ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராட்டங்களை நடத்தினார்.
இவரின் பெரும்பாலான போராட்டங்கள், ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரானதாக அமைந்தது.
இவரின் தீவிரமான போராட்டம் காரணமாக, 1995-96ல், அப்போதைய மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருந்த சிவசேனா - பா.ஜ.க, அரசை சேர்ந்த ஊழல் அமைச்சர்கள் இரண்டு பேர் நீக்கப்பட்டனர். 2003ல், ஹசாரேயின் போராட்டம் காரணமாக, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த நான்கு பேருக்கு எதிராக, மகாராஷ்டிரா அரசு, விசாரணை கமிஷன் அமைத்தது.
இவரின் போராட்டங்களால் கடும் அதிருப்தியடைந்த சரத் பவார், பால் தாக்கரே போன்ற அரசியல்வாதிகள், அவரை "பிளாக் மெயில் மனிதர்' என கடுமையாக விமர்சித்தனர்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். ஹசாரேயின் பெரும்பாலான போராட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்களாகவே இருந்தன.
ஊழலுக்கு எதிரான இவரின் போராட்டங்களுக்கு மேதா பட்கர், கிரண் பேடி, ஆன்மிக தலைவர்கள் சுவாமி ராம்தேவ், சுவாமி அக்னிவேஷ் போன்றோர், தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
இவருக்கு சொத்து இல்லை; வங்கியில் ஒரு பைசா கூட சேமிப்பும் இல்லை என்பது பெரும்பாலானோருக்கு தெரியாத விஷயம். அகமது நகர் மாவட்டம், சித்தி நகர் கிராமத்தில் யாதவபாபா கோவில் அருகே உள்ள, பத்துக்கு பத்து சதுரடி கொண்ட ஒரு சிறிய அறை தான் இவரது வசிப்பிடம்.
இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு மனிதரா என, ஆச்சர்யப்பட வைக்கும் இவர் தான், தற்போது, ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் எதிராக, மிகப்பெரிய புரட்சியை நிகழ்த்தி வருகிறார்.
பிரதமர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, லோக்சபாவில் சட்டம் இயற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சரவை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம், தற்போது உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வரும், சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
"ஊழலை ஒழிக்க சட்டம் இயற்றும்போதே, அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளிலேயே கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார் ஹசாரே.

இந்த விவகாரத்தில், ஹசாரே அவசரப்படுவதாகவும், அவர் கூறுவதை அரசு அப்படியே செயல்படுத்த வேண்டும் என, ஹசாரே வற்புறுத்துவதாகவும் அரசு தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஹசாரே தன் போராட்டத்தை துவக்கி விட்டார்.
"சாவை கண்டு நான் பயப்படவில்லை. நான் இறந்து விட்டால், எனக்காக அழுவதற்கு, குடும்பம் என்று யாரும் இல்லை. நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே, போராடி வருகிறேன். ஊழலுக்கு எதிராக இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.
அரசு துறைகளில் வெளிப்படையான அணுகுமுறை அவசியம். நேர்மையான அதிகாரிகளை, அடிக்கடி இடமாற்றம் செய்வது தடுக்கப்பட வேண்டும். இந்த நோக்கங்கள் நிறைவேறும் வரை, என் போராட்டத்தை தொடர்வேன்!'' - அன்னா ஹசாரே.
அவருடைய கனவை இன்றைய காங்கிரஸ் அரசு நிறைவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தொடங்கியது! அன்னா கருத்து 5 ஆம் இணைப்பு...
தான் கைது செய்யப்பட்டது இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கான துவக்கம் என்றும், நாட்டு மக்கள் அனைவரும் சிறை செல்ல தயாராகும்படியும் அன்னா ஹசாரே அறைகூவல் விடுத்துள்ளார்.
வலிமையான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்போவதாக கூறிய அன்னா ஹசாரே இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பின் பேசிய ஹசாரே கூறியதாவது:
“எனதருமை நாட்டு மக்களே! எனது கைதின் மூலம் நாட்டில் இரண்டாவது சுதந்திர போராட்டம் துவங்கியுள்ளது. நான் கைது செய்யப்பட்டுள்ளேன். ஆனால் எனது கைதுடன் இந்த இயக்கம் நின்று விடாது. இது தொடரும்.
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இனி ஒரு இந்தியனை அடைக்க இடம் இல்லை என கூறும் அளவுக்கு அவற்றை நிரப்பும் காலம் வந்து விட்டது. நான் மீண்டும் உங்களிடம் கோரிக்கை வைப்பது என்னவென்றால், இப்போராட்டத்தில் அமைதி பேணி காக்கப்படவேண்டும். இந்த இயக்கத்தில் வன்முறைக்கு இடமில்லை.
கோடிக்கணக்கான மக்கள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். எனக்குப்பின்னால் இரண்டாம் கட்ட தலைவர்கள் இந்த இயக்கத்தை நடத்த தயாராக உள்ளனர்” என்று தெரிவித்தார்.

அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் அன்னாவுக்கு ஆதரவாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் போராட்டம் நடாத்தினார்கள்.
‘’மத்திய அரசும், ஹசாரே குழுவினரும் தனது நிலையில் விட்டு கொடுக்க வேண்டும். நாடு முழுவதும் எழுந்த சிக்கலை சரிகட்ட இருவரும் தனது நிலையில் இருந்து இறங்கி வரவேண்டும். என்று கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் அன்னா ஹசாரே திஹார் சிறையில் தொடர்ந்தும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

கருத்துகள் இல்லை: