புதன், 5 அக்டோபர், 2011

நேரத்தின் முக்கியத்துவம்,


நேரம் குறித்து எழுதுவது என்பது வாழ்க்கை குறித்து எழுதுவதாகும். ஆகவே இந்தத் தலைப்பு ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்டதாகும். இருப்பினும் இதன் சாராம்சத்தை முன்று உபதலைப்பின் கீழ் பிழிந்து விடலாம். அவை:
1) நேரத்தின் முக்கியத்துவம்,
2) நேரம் வீணாவதற்கான காரணங்கள்
3) நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்
I. நேரத்தின் முக்கியத்துவம்:
நேரம் என்பது என்ன? மனிதன் வாழுகின்ற வாழ்க்கை. நேரம் கடந்து விடும்பொழுது வாழ்க்கையும் நம்மைவிட்டு கடந்து விடுகிறது. எனவே நேரம்தான் வாழ்க்கை, வாழ்க்கைதான் நேரம். சரி, வாழ்க்கை என்பது என்ன? இம்மை, மறுமை வெற்றி எனும் இயக்குகளை உள்ளடக்கியது. இம்மை, மறுமை வெற்றியின் அவசியம் வாழ்க்கையை முக்கியத்துவப்படுத்திவிடுகிறது. வெற்றிகரமான வாழ்க்கையின் அவசியம், நேரத்தை முக்கியத்துவப்படுத்திவிடுகிறது. இன்னும் நேரத்தின் தன்மைகளை விளங்கிக் கொண்டால்தான் அதன் உண்மையான மதிப்பை உணர்ந்து கொள்ள முடியும்.
நேரத்தின் தன்மைகள்:
1) தீதோ நன்றோ, நலனோ பலனோ, வீணோ விரயமோ நேரத்தை எதில் பயன்படுத்தினாலும் அல்லது பயன்படுத்தாமல் விட்டாலும் நேரமானது சங்கிலித் தொடர் போன்று சீராக நம்மை விட்டு ஒவ்வொரு கனமும் நிற்காமல் கடந்து சென்று கொண்டே இருக்கும்.
2) கடந்து சென்ற காலத்தை, இந்த உலகத்தையே விலையாக கொடுத்தாலும் மீளப்பெற முடியாது. மரித்துவிட்ட, கைசேதம் அடைந்த கெட்ட ஆத்மா கேட்கும் ''இறைவா! எனக்கு சிறிது காலம் அவகாசம் கொடு, நான் நல்லது செய்து திரும்புகிறேன்" என்று. ''அவ்வாறு அல்ல, நீ பொய்யுரைக்கின்றாய்" என்று இறைவன் சொல்வான். ஏனெனில் அவன் வாழும் போதே அவன் வாழ்க்கை குறித்து கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டும், மரணம் குறித்து உணர்த்தப்பட்டும் இன்னும் அவனுக்கு பல அவகாசங்கள் கொடுக்கப்பட்டும், உணராதவனாகவும், கெட்டவனாகவும் மரித்தவன் ஆவான். ஆகவே தங்குமிடம் நரகம்தான்.
3) பிற பொருட்களைப்போல சேமித்து வைக்கமுடியாது. எதிர்கால தேவைக்கென்றோ அல்லது இப்போது விரும்புவதையெல்லாம் மனம் போன போக்கில் அனுபவித்துவிட்டு அல்லது செய்துவிட்டு பிறகு சாதிக்கலாம், நல்லது செய்யலாம் என்று பயன் படுத்துவதற்கோ நேரத்தை சேமித்து வைக்க முடியாது.
4) பயன்படுத்தாமல் விட்டால், பனிக்கட்டியைப் போன்று கரைந்தே போய்விடும். இன்றை, இக்கணத்தை, இப்போதே பயன்படுத்தியாக வேண்டும். இல்லையெனில் நேரம் கரைந்து காணாமல் போய்விடும்.
5) இரு தருணங்களுக்கு இடையில் தடையை ஏற்படுத்தி தொலைவை ஏற்படுத்த முடியாது. நாம் சிந்தித்து, விழிப்போடு நேரத்தை செய்ய வேண்டிய பணியை செய்யாமல் நேரத்தை வீணடித்து விட்டோமே! சரி பரவாயில்லை அந்த நேரம் வராமல் ஒரு தடையை ஏற்படுத்தி பணியை முடித்து விட்டு பின்பு தடையை நீக்கி நேரத்தை வரச்செய்வோம் என்று கற்பனையும் செய்ய முடியாது. ''பருவத்தை விட்டால் பயிர்கள் பதராகிவிடும்'' - எச்சரிக்கை!
6) நேரத்தை விலைக்கு வாங்கவோ விற்கவோ, வாடகைக்கு எடுக்கவோ கொடுக்கவோ முடியாது. நமது தேவைக்குத் தக்கவாறு நேரத்தின் கன பரிமாணத்தை விரிக்கவோ, சுருக்கவோ, கூட்டவோ குறைக்கவோ முடியாது. அது அதற்குரிய அளவில்தான் இருக்கும்.
7) கடந்து சென்ற தருணங்களைபாய்ந்து சென்று பிடிக்க முடியாது. ச்சே! கொஞ்ச நேரம் முன்னால் வந்திருந்தால் காரியம் கச்சிதமாக முடிந்திருக்குமே, ஃபிளைட் கிடைத்திருக்குமே, பஸ் தவறி இருக்காதே ம்ஹீம்... தருணங்கள் கடந்தது கடந்ததுதான்.
இவை எல்லாவற்றையும் விட நமது ஆயுள் என்பது ஒரு வினாடிகூட அதிகம் எடுத்துக்கொள்ள முடியாத நிர்ணயிக்கப்பட்ட கால அளவைக்கொண்டது. அதனை விட மிக முக்கியமான விடயம் அந்தக் கால அளவு எவ்வளவு என்பதை எவருமே அறிய முடியாத வகையில் மரணம் எனும் சூட்சுமத்தை இறைவன் வைத்திருக்கிறான். ஆக, நேரம் என்பது முக்கியமானது அல்ல. அதிமுக்கியமானது என்பதை ஒவ்வொருவரும் மனதிலே இருத்தியாக வேண்டும்.
அல்லாஹ் தனது திருமறையிலே அல்அஸ்ர் எனும் 103 வது அத்தியாயத்தில், எந்தக் காலத்தை மனிதன் வீணடித்துவிடக்கூடாதோ அந்த காலத்தின்மீது சத்தியமிட்டு கூறுகின்றான்.
''காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நட்டத்திலிருக்கிறான். எவர்கள் விசுவாசங்கொண்டு நற்கருமங்களைச் செய்தும், சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அத்தகையோரைத் தவிர''. ஆக நேரத்தை வீணடித்தவன் நாளை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்துக்குரியவன்.
இன்னும் இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்று ஓய்வு நேரம், மற்றது ஆரோக்கியம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி.

இறுதித்தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை தராதவரை மனிதன் இறைவனின் நீதிமன்றத்திலிருந்து அகன்று செல்லவே முடியாது. அதில் இரண்டு நேரத்தைப் பற்றியது அவை: 1) உன் ஆயுளை எவ்வாறு செலவிட்டாய், 2) உன் இளமையை எவ்வாறு கழித்தாய். என்பதாகும். ஆதாரம்: திர்மிதி

அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் பிரார்த்தனையில் இடம் பெறும் ஒரு வாசகம். ''இறைவா! எங்களை நேரம் குறித்து அலட்சியமாக இருக்க விட்டு விடாதே'' என்பதாகும்.

அடுத்து உமர்(ரலி) அவர்கள், ''இறைவா! எனது நேரத்தை அதிகப்படுத்துவாயாக. நேரத்தை சரியாக, சிறப்பாக பயன்படுத்தும் நற்பேற்றை அருள்வாயாக'' என்று பிரார்த்திப்பார்கள்.

இன்னும் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸில் முதுமை வருமுன் இளமையை, மரணம் வருமுன் வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள் என்ற நேரம் குறித்த பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நமது இந்த உலக வாழ்க்கை மிகவும் குறுகியது. அல்லாஹ்விடத்தில் 2 மணிநேரத்திற்கு உட்பட்டதாகும். ஆம்! அல்லாஹ் மனிதர்களுக்கு வாழ்க்கை எனும் கேள்வித்தாளை வழங்கி உலகம் எனும் ஹாலில் பரீட்சை வைத்திருக்கின்றான். இன்னும் முஃமின்களுக்கு இது ஒரு சோதனைக் களமாகவே இருக்கிறது எனச் சொல்லிக்காட்டுகின்றான்.
I.A.S பரீட்சை எழுதுபவனின் துடிப்பையும், பரபரப்பையும், பதபதைப்பையும் எண்ணிப்பாருங்கள். அந்த தருணங்களை அவன் வீணாக்கமாட்டான் என்பது அல்ல, வீணானதை நினைத்துக்கூட பார்க்கமாட்டான் என்பதுதான் முக்கியம். அதனைவிட லட்சம் மடங்கு முக்கியமாண வாழ்க்கை எனும் பரீட்சையில் உட்கார்ந்து கொண்டு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? சிந்திப்போம் வாருங்கள்!
II. நேரம் வீணாவதற்கான காரணங்கள்:
பொதுவாக நேரம் வீணாவதற்கான காரணங்களை நாம் அறிவோம். என்றாலும் அதனை பகுத்து ஆய்ந்தால்தான் வீணடிப்பதிலிருந்து விடுபட முடியும். ஆகவே நாம் இரண்டு கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும். 1) நேரமானது எப்படி வீணாகிறது? 2) ஏன் அவ்வாறு வீணாகிறது?
நேரம் வீணாவதற்கான காரியங்கள்:
இதில் முதல், முதலில்... இடம் வகிப்பது தொலைக்காட்சிப் பெட்டிதான். யதார்த்தமாக சொல்வதென்றால் இதன் மூலம் 5 % நன்மையைப் பெறுவதற்காக 95% கெட்டு நாசமாகிறோம். அதுவும் நல்ல விஷயத்தை இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பவர்களுக்கத்தான். எந்த நோக்கமும் இல்லாமல் ஷைத்தான் பெட்டியின் முன்பு அமர்ந்திருப்பவர்களுக்கு அதுவும் இல்லை. இன்னும் அந்த 5% நன்மையை, தீமையில் குறைவான பங்கு வகிக்கக்கூடிய பிற மீடியாக்களின் வாயிலாக நாளிதழ்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். T.V -யைப் பயன்படுத்தாமல் இருப்பதால் நட்டம் எதுவும் வந்து விடப்போவதில்லை. ஆனால் பயன்படுத்துவதால் நட்டம் உறுதி. அதுமட்டுமல்ல நாம் விரும்பாத நாசத்தையும் வா, வா என்று வலிய அழைத்து விருந்துவைக்கும். இதன்கூடவே இதன் அக்காவையும் சொல்லியாக வேண்டும். அதுதான் சினிமா.
சின்னத்திரையும் வெள்ளித்திரையும் சேர்ந்து தனி மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் நாட்டையே சீரழித்துக்கொண்டிருக்கிறது. இவற்றால் ஏற்படும் கேடுகளை, தீமைகளை சொல்லிமாளாது. குடும்ப கட்டமைப்பை, தனிமனித ஒழுக்கத்தை, சமூக கலாச்சாரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்குகிறது. பிஞ்சு உள்ளங்களில் காமம், கயமை, குரோதம், வக்கிரம், திகில் என எல்லாவிதமான நஞ்சையும் விதைக்கிறது. மனித இனத்தின் முன்னேற்றமான, பகுத்தறிவான சிந்தனை போக்கையே மழுங்கடித்து, மறக்கடித்து, சிதைத்து, திசைதிருப்பி, மனிதத்தின் புனிதத் தன்மைக்கு பெரும் தீங்கிழைக்கிறது.
கிரிக்கெட் - அறிவாளிகள் மத்தியில் இது ஒரு சிறந்த விளையாட்டா? என்ற சர்ச்சை ஒருபுறமிருக்கட்டும், இதற்கு இருக்கக்கூடிய மோகம், இல்லையில்லை வெறி.... சூதாட்டம் போல் ஆகிவிட்ட இதில் நமது நேரத்தை செலவிடுவது பெரிய அறிவீனம்.
அரட்டை - முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருடைய பெருவரியான நேரங்களை சாகடிப்பது இந்த அரட்டைத்தான். மனம் சலிக்காது, கண்கள் துஞ்சாது, நடு நிசியிலும் பிரிய மனம் இல்லாது செய்த அரட்டையினால் சாதித்தது எனன்? என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
அறிவுள்ள புத்தகங்களை விடுத்து அனாச்சாரமும், வீணும், விளையாட்டும் நிரம்பிய வார, மாத, வாரம் மிருமுறை இதழ்களுக்கென்றே வாழ்க்கையை அர்பணிப்பது. இவ்வாறு பரவலாக காணப்படுகிற சில முக்கியமான நேரத்தை வீணடிக்கும் காரியங்களை எடுத்துக்கூறியுள்ளேன். இவை போன்று ஊர் சுற்றுதல், தேவையற்ற மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சந்திப்புகள் என்று எத்தனை எத்தனையோ உள்ளன. கட்டுரையின் பக்கங்களைக் கருதி, விரிவஞ்சி சுருக்கித்தருகின்றேன். இதுவரை காரியங்களைப் பார்த்தோம். இனி இவ்வாறு நாம் வீணர்களாக இருப்பதன் காரணங்களை ஆராய்வோம்.
நேரம் வீணாவதற்கான காரணங்கள்:
பயனுள்ள காரியத்தை விடுத்து பயனற்ற காரியத்தை நோக்கி நமது மனோ இச்சை செல்வதற்கும், அதிலேயே லயித்து நேரம் வீணாவதற்கும் பல உளவியல் காரணங்கள் இருக்கின்றன.
மனக்கட்டுப்பாடின்மை, சோம்பல், தோல்வி, பயம் பிறகு செய்யலாம் என்ற எண்ணம், பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் மனப்பான்மை, அலட்சியப் போக்கு, தேவையற்ற மன உளச்சல்கள், துன்பங்கள், துயரங்கள், கவலைகள், திறமையின்மை, சீரான, உறுதியான முயற்ச்சியின்மை நிதானமின்மை... என்று பல வகையான உளவியல் பிரச்சினைகளே நேரம் வீணாவதற்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. மேற்சொன்ன காரியங்கள் அனைத்துமே இதன் வெளிபாடுகள்தான். சரி இந்தப் பிரச்சினைகள் இல்லாதவர்களும் நேரத்தை வீணடிக்கிறார்களே என்றால் அவர்கள் வாழ்வில் இலட்சியமோ இலக்கோ அற்றவர்கள் ஆகவே அவர்களும் வீணர்களே. வாழ்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகள் எத்தனையோ இருக்க, யாரும் விரும்பி நேரத்தை வீணடிப்பதில்லை. இருப்பினும் தங்களது இயலாமை, தாழ்வு மனப்பான்மை, உறுதியின்மை போன்ற மேற்சொன்ன சில அல்லது பல காரணங்களால் காரியங்களை தள்ளிப்போடுகிறோம். பிறகு செய்யாமலேயே விட்டுவிடுகிறோம், தோல்வி பயத்தால் நடுநடுங்குகிறோம், இலக்கின்றி வாழுகின்றோம். இதனால் வாழ்வில் விரக்தி, நேரத்தில் வெற்றிடம் ஏற்படுகிறது. இதனை மறக்க, அல்லது நேரத்தை போக்க மனம் எண்ணுகிறது. ஷைத்தான் இந்த தருணத்தை கன கச்சிதமாக பயன்படுத்துகின்றான். எவையெல்லாம் தீமையாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் மனதுக்கு இதம் அளிப்பதாகவும், சந்தோஷம் அளிப்பதாகவும் காட்டுகின்றான் விளைவு அழிவுப்பாதை...
நாளை வரும், நமது கவலைகள் தீரும், இன்பக்கடலில் நீந்துவோம் என்று இன்றை மறந்து இக்கணத்தை துறந்து நாளை கனவில் மூழ்குபவர்களுக்கு அந்த நாளை என்பது வரவேயில்லை, வரவும் செய்யாது.
என்ன ஆகிவிட்டது நமக்கு! வாழ்வு குறித்த சரியான கண்ணோட்டம் இல்லை, லட்சியம் இல்லை, லட்சியத்தை அடைந்தே தீருவேன் என்று கொப்பளிக்கும் ஆர்வம் இல்லை, திட்டம் இல்லை, கொள்கை இல்லை, கடந்து விட்ட நாட்கள் குறித்து நமக்கு கவலையில்லை, இனிவரும் தினங்கள் குறித்தும் அக்கரையில்லை, ஏன் இன்றைய பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கவும் கூட நம்மிடம் ஒரு செயல் திட்டமில்லை. இதே நிலை நீடித்தால் சாதிக்க முடியாது என்பது இருக்கட்டும், தோல்வியை தவிர்க்க முடியாது என்பது நினைவில் நிற்கட்டும். சரி! வெற்றிபெற வேண்டும். அதற்கு என்ன செய்ய? வாருங்கள் வெற்றி பெறுவோம்.

III நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்:
நேரம் வீணாவதைத் தடுத்து, நல்ல பயன்பாட்டில் அதனை வீரியப்படுத்தி வெற்றி பெற்றிட செய்ய வேண்டியது என்ன? முதலில் நேரம் குறித்த விழிப்புணர்வு நம்முள் ஆழமாக வேர் விடுவது மிக மிக அவசியம். நேரத்தை வீணாக்கிவிட்டோமே என்று விரக்தியுடன் அமர்ந்துவிட்டாலும் அது நேரத்தை வீணாக்கிவிடும். அதேபோல எதிர்காலத்துக்கு திட்டமிடலாம், ஆனால் எதிர்காலத்தை இப்போதே பயன்படுத்த முடியாது. ஆகவே இன்று, இக்கணம், இதைத்தான், இப்போதே பயன்படுத்த முடியும்.
ஒவ்வொரு நாளையும் தனது வாழ்வின் கடைசி நாளாக கருதி வந்தால், ஒவ்வொரு வினாடியையும் பதில் அளிக்கும் பொறுப்புணர்வுடன் கழித்தால் மனிதனுக்கு செயல்பட வேண்டும் என்ற ஊக்கமும், உற்சாகமும், உத்வேகமும் பிறக்கும். இன்னும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரம், அறிவு, செல்வம், திறமைகள், பதவி, குடும்பம் என்று எல்லாவற்றிற்கும் கணக்கு கேட்கப்படும், நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மனதில் பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இது நமது வாழ்க்கையையே புரட்டிப் போடும், திருப்புமுனையை ஏற்படுத்தும்.
நாளை செய்யலாம். பிறகு செய்யலாம், என பணிகளை தள்ளிப்போடுவது ஒரு மோசமான நோய் ஆகும். செய்ய வேண்டிய பணிகளை முன்னுரிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக காலம் நிர்ணயித்து செய்து முடிக்க வேண்டும். எல்லா வேலைகளையும் ஒரே சமயத்தில் மண்டையில் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. குறைந்த பணி நிறைந்த செயல்திறன் என்பதுதான் சிறப்பானது. வீண் வேலைகளை அறவே விட்டொதுக்க வேண்டும். தனது நேரம் முழுவதையும் அவசியப் பணிகளில் செலவிடுபவனே சிறந்த மனிதன்.
முதலில் சுயசீர்திருத்தம் அவசியம். நமது ஆளுமையை, நமது நடத்தையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். சீரான பழக்க வழக்கங்களுக்கான பயிற்ச்சியை மேற்கொள்ள வேண்டும். நமது அன்றாட அலுவல்களை ஒரு பெரிய அறுவை சிகிச்கை செய்து, தேவையற்றதை நீக்கி, அனைத்தையும் பயனுள்ளதாக மாற்றியமைக்க வேண்டும். நான், எனது விருப்பம், எனது திட்டம் என்று இல்லாமல் குழு உணர்வு, கூட்டுணர்வு வேண்டும். பல்வேறுபட்ட மக்களையும் அனுசரிக்க, அரவணைக்க, புரிதலுடன் செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். இது குறுகிய காலத்தில் இலகுவான வெற்றியைப் பெற்றுத்தரும்.
நமது எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள், உணர்வுகள், போன்றவற்றை அவ்வப்போது ஆய்வு செய்யவேண்டும். நமது விவகாரம், வியாபாரம், குடும்பம், சமூகம், நாடு என அனைத்திலும் மீதமான போக்கை (moderate) கையாள வேண்டும். ஒன்றிலேயே சாய்ந்து விடக்கூடாது. ஆலோசனை அவசியம் தேவை. ஆலோசனை செய்பவன் கைசேதம் அடையமாட்டான். எடுத்துக்கொண்ட எந்த வேலையையும் அரைகுறையாக இல்லாமல் கவனத்துடன் முழுஈடுபாட்டுடனும் முழுமைப்படுத்த வேண்டும். இன்றே செய்வோம் அதுவும் நன்றே செய்வோம் என்ற உத்வேகம் இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமது வாழ்வின் லட்சியம் குறித்து நம்மிடம் தெளிவான, தீர்க்கமான முடிவு இருக்க வேண்டும். அப்போது தான் அதனடிப்படையில் திட்டமிடவும், காரியங்களை அமைத்துக்கொள்ளவும் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், சூழ்நிலைகளையும் நமக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளையும் அதற்கொப்ப பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். இவ்விதமாக தாஃவா சென்டர் மூலம் ஏன் அறிவை பெருக்கிக் கொள்ளக்கூடாது? என்கிற சிந்தனை புரட்சி வெடித்துக்கிளம்ப வேண்டும்.

நமது இலக்குகளை, பணிகளை நீண்டகால, இடைக்கால, குருகியகால திட்டங்களாக தீட்டி, ஒருங்கிணைத்து. ஒழுங்குபடுத்தி, எளிதாகச் செய்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். புதிது புதிதாக சோதித்துப் பார்ப்பதைவிட வெற்றிகரமான அனுபவங்களிலிருந்து பாடம் பெற வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிறந்த தொழில்நுட்பத்தையும் கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். விழிப்புணர்வும், தொலைநோக்கு பார்வையும் வேண்டும். அவ்வப்போது ஆய்வும், சுயமதிப்பீடும் அவசியம் செய்தாக வேண்டும். மறுமைச் சிந்தனை இம்மை குறித்த விழிப்புணர்வை ஊட்டவல்லது. ஒரே நாளில் நாம் நம்மை சீராக்கிவிடமுடியாது. தேவை சிறந்த பயிற்ச்சியும், தொடர்ந்த முயற்ச்சியும்தான். இன்ஷாஅல்லாஹ்!
இன்று நமதாகட்டும்!
நாளை நம்பிக்கையாகட்டும்...

வஸ்ஸலாம்.

கருத்துகள் இல்லை: