திங்கள், 22 ஆகஸ்ட், 2011

அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்

அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்

(“தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?”
பகுதி : மூன்று )

“அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டியதாக” கூறும் இந்துத்வா பரப்புரை போல, “ஜெருசலேமில் யூதர்களின் ஆலயத்தை இடித்து விட்டு ஒமார் மசூதி கட்டியதாக” சியோனிசவாதிகள் கூறுகின்றனர். ஜெருசலேமை கைப்பற்றிய இஸ்லாமியர்கள், அங்கிருந்த யூதர்களின் ஆலயத்தை இடித்து விட்டு மசூதி கட்டியதாகவும், அதற்கு இஸ்லாமியப் படையெடுப்பை நிகழ்த்திய ஒமாரின் நாமம் சூட்டப்பட்டதாகவும் ஒரு கட்டுக்கதை உலாவுகின்றது. யூதர்களையும், இஸ்லாமியர்களையும் மோத விட்டு குளிர்காயும் மேற்கத்திய சூழ்ச்சிக்கு சில தமிழர்களும் இரையாகியுள்ளனர். வரலாற்றை திரிபுபடுத்தி புனையப்பட்ட இந்தக் கதை, இஸ்லாமியர் மீதான பகைமையை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ரோமர்கள் இடித்த யூத ஆலயத்தை, இஸ்லாமியர் இடித்தாதாக கூறுவது ஒரு வரலாற்று மோசடி. அதிலும் அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது “ஒமாரின் மசூதி” என்பது காதிலே பூச்சுற்றும் வேலை. அது ஒரு மசூதியல்ல. அதைக் கட்டியது ஒமாருமல்ல.
கி.மு. 70 ல் ரோமர்களால் ஜெருசலேம் தரைமட்டமாக்கப் பட்ட பொழுது, யூதர்களின் ஆலயம் அழிக்கப்பட்டதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜெருசலேமில் ரோமர்களின் அடிச்சுவட்டில் கிறிஸ்தவ ராஜ்ஜியம் பல நூற்றாண்டுகள் நிலைத்து நின்றது. கி.பி. 638 ல் இஸ்லாமியப் படைகள் ஜெருசலேமை வந்தடைந்தன. ஜெருசலேமில் மிகப் புனிதமான, இயேசுவின் தேவாலயத்தை நிர்வகித்த தலைமைப் பாதிரியார் சொப்ரோனியுஸ், இஸ்லாமியப் படைகளின் தளபதி ஒமார் முன்னிலையில் சரணடைய சம்மதித்தார். சொப்ரோனியுஸ் ஒமாருடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களின் அருகில் முஸ்லிம்கள் நடமாட முடியாது என்றும், அதே நேரம் யூதர்கள் ஜெருசலேமில் வசிக்க முடியாது என்றும் எழுதப்பட்டது. (“The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In” by Hugh Kennedy) இஸ்லாமிய மதத்தில் புனித நகரான ஜெருசலேத்தின் தனித்துவம் முஸ்லிம்களால் மதிக்கப்பட்டது. ஆனால் யூதர்கள் வசிக்க முடியாது என்ற வாக்கியம் ரோமர்களின் சட்டத்தை அடியொற்றி கிறிஸ்தவ பாதிரிகளால் சேர்க்கப்பட்டது.
இஸ்லாமியத் தளபதி ஒமார், ஜெருசலேமில் இயேசுவின் தேவாலயத்தை பார்வையிட சென்ற பொழுது, தொழுகைக்கு நேரமாகி விட்டது. உடனே ஒமார் தொழுவதற்கு ஏற்ற இடம் தேடிக் கொண்டிருந்தார். அப்போது தலைமைப் பாதிரி, தேவாலயத்தின் ஒரு பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த ஒமார் கூறிய விளக்கம் இது: நான் இந்த இடத்தில் தொழுகை நடத்தினால், பிற்காலத்தில் முஸ்லிம்கள் தேவாலயத்திற்கு உரிமை கோருவார்கள்.” ஒமார் பின்னர் தேவாலயத்தின் வெளியே சென்று தொழுகையை நடத்தி முடித்தார். இன்றைய அல் அக்சா மசூதி அந்த இடத்திலேயே கட்டப்பட்டது. இந்தக் குறிப்புகளை அரபு-கிறிஸ்தவ சரித்திர ஆசிரியர் Said Batriq எழுதி வைத்துள்ளார். (“The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In” by Hugh Kennedy)
Ka ‘ ab al Ahbar என்ற, இஸ்லாமியராக மதம் மாறிய முன்னாள் யூத மதகுரு, யூதர்களின் இடிந்த ஆலயம் இருந்த இடத்தில் மசூதி கட்டுமாறு, ஒமாருக்கு வழிகாட்டினார். ஆனால் அந்த கோரிக்கையை மறுதலித்த ஒமார், யூத ஆலய இடிபாடுகளை மூடியிருந்த குப்பைகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். (கிறிஸ்தவ ஆட்சிக் காலத்தில் அந்த இடம் பாரிய திறந்தவெளி குப்பைத் தொட்டியாக பயன்படுத்தப்பட்டது.) யூத ஆலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒமார் கட்டிய சிறிய மரத்தாலான மசூதி புனரமைக்கப்பட்டு, இன்று “அல் அக்சா மசூதி” என்று அழைக்கப்படுகின்றது.(“The Great Arab Conquests, How the Spread of Islam Changed the World We Live In” by Hugh Kennedy) உயரமான குன்றின் மேலே கட்டப்பட்ட குவிமாடம் ஒன்றை பலர் மசூதி என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். அது மும்மதத்தவருக்கும் பொதுவான தீர்க்கதரிசியான ஆபிரஹாம், தனது பிள்ளையை பலி கொடுக்க எத்தனித்த இடம் என்று நம்பப் படுகின்றது. ஒமாருக்கு பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தை ஆண்ட மாலிக்கின் காலத்தில் அந்த அழகான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. இன்றும் ஜெருசலேம் நகரின் அடையாளமாக விளங்கும் தங்க நிற குவிமாடத்தைக் கொண்ட கட்டிடம் ஒரு மசூதியல்ல என்ற உண்மை பலருக்கு தெரியாது. (http://nl.wikipedia.org/wiki/Rotskoepel)
சியோனிஸ்ட் பரப்புரையாளர்கள் : உலகெங்கும் யூதர்கள் அகதிகளாக அலைந்து திரிந்தார்கள். அவர்களது சொந்த நாட்டில் மோசமாக நடத்தப்பட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் இஸ்லாமியப் படையெடுப்பு.” என்று கொண்டு வந்து நிறுவ முயற்சிக்கின்றனர். கி.மு. 70 களிலேயே யூதர்களின் ஐரோப்பா நோக்கிய புலப்பெயர்வு நடந்தன என்ற எடுகோளுடன் முரண்படுகின்றது அந்தக் கருத்து. ரோமர்களில் காலத்திலேயே யூதர்களின் தேசம் தனது சுதந்திரத்தை இழந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வல்லரசால் “இஸ்லாமிய தாலிபான்” அரசு விரட்டப்பட்டது போல, கி.மு. 70 ல் ரோமர்கள் “யூத தாலிபான்” அரசை அகற்றினார்கள். (அன்றைக்கும் கடும்போக்கு யூத மத அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளை, ரோமர்கள் படையெடுப்புக்கு காரணமாக அறிவித்தார்கள்.) ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை முதல் எதிரியாக கருதிய இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், அமெரிக்கர்களை வலிந்து அழைத்திருந்தனர். சோவியத் படைகள் வெளியேறிய சில வருடங்களில், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. கிட்டத்தட்ட அதே போன்ற வரலாற்றைக் கொண்டவர்கள் தான் யூதர்களும். வரலாறு திரும்புகிறது என்று அடிக்கடி சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
யூத மத அடிப்படைவாத அரசு, கிரேக்கர்களுடன் போரிட்டு விடுதலை அடைந்திருந்தது. அன்று அவர்களைப் பொறுத்த வரை, சிரியாவை தளமாக கொண்டு ஆதிக்கம் செலுத்திய கிரேக்க சாம்ராஜ்யமே முதல் எதிரியாக தெரிந்தது. யூத அரசு தனது இறைமையை பாதுகாப்பதற்காக, எங்கோ இருந்த ரோம சாம்ராஜ்யத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் பிரகாரம், யூத அரசுக்கு ரோமாபுரி பாதுகாப்பு வழங்குமென்றும், ஒன்றின் எதிரி மற்றொன்றாலும் எதிரியாக கருதப்படும் எனவும், யுத்தத்தில் இரு தரப்பும் ஒரே பக்கத்தில் நின்று போரிடுவர் என்றும்,” உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. (பார்க்க: 1 மாக்காபீ 8:23-28) ரோமர்களை நண்பர்களாக கருதி செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம் யூத அரசின் பலத்தை அதிகரித்தது. அந்தக் காலகட்டத்தில் சைமன் (கி.மு 140 – 4) என்ற தலைவர், மதகுருமார் பேரவையில் தேர்ந்தெடுக்கப் பட்டார். சைமன் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஆன்மீக தலைவரும் கூட. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மதகுருமாரின் பேரவையில் முல்லா ஒமார் தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற சம்பவம் அது.
இன்று இஸ்ரேலை சுற்றி அரபு நாடுகள் இருப்பதைப் போல, சுதந்திர யூத தேசத்தை சூழ இருந்தவை அனைத்தும் கிரேக்க நாடுகள். கிரேக்கம் அரசு மொழியாக இருந்தது, ஆனால் வேறு மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்ந்தனர். அன்று பொதுவாக கிரேக்க மொழி பேசும் நாடுகளில் யூதர்கள் மீதான வெறுப்புக் (Anti Semitism) காணப்பட்டது. அது பிற்காலத்தில் கிரேக்கர்களால் கிறிஸ்தவ மதத்தில் நிறுவனமயப் படுத்தப்பட்டது. கிரேக்க சரித்திர ஆசிரியர் Diodorus Siculus பதிவு செய்த குறிப்புகளில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
யூதர்கள் பிற இனக் குழுக்களை பகைவர்களாக கருதுகின்றனர். யூதர்கள் எகிப்தில் இருந்து விரட்டப்பட்டவர்கள் என்று மற்றவர்கள் கூறுகின்றனர். எகிப்தியர்கள் தொழு நோயாளிகளையும், தேகத்தில் வெள்ளைப்புள்ளி கொண்டவர்களையும் சபிக்கப் பட்டவர்களாக கருதி எல்லைக்கு வெளியே விரட்டி விட்டார்கள். அகதிகளாக வெளியேறியவர்கள் ஜெருசலேமை கைப்பற்றிய பின்னர் தான் தம்மை யூதர்கள் என அழைத்துக் கொண்டனர். அவர்கள் மனித குலத்திற்கு எதிராக வெறுப்புக் கொண்ட காரணத்தால், வேடிக்கையான சட்டங்களை கொண்டிருந்தனர். அவர்கள் அந்நியர்களுடன் தமது ரொட்டியை பகிர்ந்துண்ண மாட்டார்கள். (Diodorus Siculus 34-35,1)
மத்திய கிழக்கில் அலெக்சாண்டர் நிறுவிய கிரேக்க சாம்ராஜ்யம் அழிந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் மேற்கே தோன்றிய ரோம சாம்ராஜ்யம் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மத்திய கிழக்கில் கால் பதிக்க இடம் தேடிக் கொண்டிருந்த ரோமர்கள், யூதர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஒரு வல்லரசை விரட்டிய யூத தேசம், இன்னொரு வல்லரசுக்கு அடிமையாகும் என்று அன்று யாரும் நினைக்கவில்லை. சுமார் நூறாண்டு கால சுதந்திரம், பொம்பியுஸ் என்ற ரோம தளபதியினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சிறு தேசங்களின் இறையாண்மை சாம்ராஜ்யவாதிகளின் நலன்களுக்கு குறுக்கே நிற்குமாயின், அந்த தேசங்கள் அழிக்கப்படும். இன்று தாலிபான்களை ஆப்கானிஸ்தானை அமெரிக்க ஏகாதிபத்தியம் இலகுவாக தூக்கி எறிந்தது போல, அன்று ரோம ஏகாதிபத்தியம் யூத தேசத்தை ஆக்கிரமித்தது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மத நம்பிக்கை போதும் என்று தாலிபான்கள் கருதியது போல, அன்றைய யூதர்களும் நம்பினார்கள்.
ரோம ஆக்கிரமிப்புக்கு எதிராக கெரில்லாப்போர் நடத்திய யூதர்களின் சீலோட் (Zealot) இயக்கம், நவீன பயங்கரவாத அமைப்புகளுக்கு முன்னோடியாக அமைந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். (Early History of Terrorism ) அன்றைய சீலோட் இயக்கத்திற்கும், நமது கால தாலிபானுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு குழுக்களும் கடும்போக்கு மத அடிப்படைவாதிகளை கொண்டிருந்தன. தாமே உண்மையான மத நம்பிக்கையாளர்கள், இறைவன் தமது பக்கமே நிற்கிறார் என நம்பினார்கள். பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் ஒரு பெரிய வல்லரசு இராணுவத்தை வெளியேற்றலாம் என கருதினார்கள். அன்று ரோமர்களால் இறுதியில் சீலோட் கிளர்ச்சி அடக்கப்பட்ட பொழுது, அமைப்பில் இருந்த அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர். பிற்காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் மத்தியில் சீலோட் அனுதாபிகள் இருந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. சீலோட் சைமன் என்று பெயரிடப்பட்ட ஒருவரை விவிலிய நூல் குறிப்பிடுகின்றது. ஜூதாஸ் கூட சீலோட் பாணியில் ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும் என வற்புறுத்தியதாகவும், இயேசு அதற்கு மறுத்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு. ரோமர்களும் மிதவாத இயேசுவை ஹீரோவாக்கி, தீவிரவாத ஜூதாசை துரோகியாக்கி விட்டிருக்க சாத்தியமுண்டு. ஏகாதிபத்திய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரி தான் இருக்கின்றது.
யூத தேசம் மீதான ரோம ஆக்கிரமிப்புப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஜோசெபுஸ் என்பவர் எழுதிய குறிப்புகளில் காணக் கிடைக்கிறது. போரைப் பற்றிய சரித்திரத்தை அவர் மட்டுமே எழுதி வைத்துள்ளார். (The Jewish War )
அவரின் எழுத்துகளை ஆராய்வதற்கு முன்னர், பின்வரும் தகவல்கள் முக்கியமானவை. முதலாவதாக அன்று இருந்த யூத தேசம் இஸ்ரேல் என்று அழைக்கப்படவில்லை. அதன் பெயர் யூதேயா. இரண்டாவதாக ஜோசெபுஸ் ரோமர்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சிப்படையின் தளபதியாக இருந்தவர். போரின் நடுவில் ரோமர்களிடம் சரணடைந்து ரோம பிரஜையாக மாறியவர். அதனால் அன்றைய யூதர்கள் ஜோசெபுஸ் ஒரு துரோகி என்றழைத்தனர். மூன்றாவதாக, ஜோசெபுஸ் தனது நூலில் இயேசு கிறிஸ்துவை பற்றி குறிப்பிடுகின்றார். அதைத்தான் கிறிஸ்தவர்கள் இயேசு என்பவர் வாழ்ந்ததற்கான சரித்திர ஆதாரமாக காட்டுகின்றனர். ஜோசெபுஸ் போன்றவர்கள் எழுதி விட்டதாலேயே, அவற்றை ஆதாரமாக கொள்ள முடியாது. ஏனெனில் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் அனைவரும் கிரேக்கர்களுடன், ரோமர்களுடன் கூட்டுச் சேர்ந்த யூதர்கள். அதாவது அன்றைய யூதர்கள் கிறிஸ்தவத்தை “துரோகிகளின் மதம்” என அழைத்தனர்.
ஜெருசலேமில் யூதர்களின் ஆலயத்தை நிர்மூலமாக்கிய ரோமர்கள், ஜெருசலேமை ரோம நகரமாக மாற்றினார்கள். அங்கே யூதர்கள் குடியேறக் கூடாது என தடையுத்தரவு போட்டனர். அது மட்டுமல்ல யூத வரி (Fiscus Judaicus) என்றொரு அநியாய வரி அறவிடப்பட்டது. ஆக்கிரமிப்புக்கு முன்னர் யூதர்கள் ஜெருசலேம் ஆலயத்திற்கு வரி செலுத்திக் கொண்டிருந்தனர். தற்போது சக்கரவர்த்தியின் உத்தரவுக்கிணங்க, ரோமாபுரியில் கட்டப்படும் ஜூபிட்டர் ஆலயத்திற்கு யூதர்கள் வரி கட்டினார்கள். இது சம்பந்தமாக ரோம வரித் திணைக்களத்திற்கு நிறைய முறைப்பாடுகள் வந்தன. சிலர் தாம் யூதர்கள் இல்லை என்று மறைத்தனர். யூதர்களை ஒத்த கலாச்சாரத்தை கொண்டிருந்த பிற மதத்தவரும் பாதிக்கப்பட்டனர். “ஒரு தடவை 90 வயது வயோதிபர் ஒருவர் (யூத மத சடங்கின் படி) சுன்னத்து செய்திருக்கிறாரா என, அதிகாரிகளின் முன்னிலையில் ஆடை அவிழ்த்து ஆராயப்பட்டதாக…” நேரில் கண்ட சாட்சியான Suetonius என்பவர் எழுதியுள்ளார்.
ஜெருசலேம் ஆலயத்தை நிர்மூலமாக்கிய காலகட்டத்தின் பின்னர் தான் யூதர்கள் உலகம் முழுக்க அகதிகளாக அலைந்தனர் என்று நினைப்பது தவறு. ஜெருசலேம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர், அலெக்சாண்டிரியா (எகிப்து), சிரேனே (லிபியா) ஆகிய நகரங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. அன்று அலெக்சாண்ட்ரியா நகரில் வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை, ஜெருசலேம் யூதர்களை விட பல மடங்கு அதிகம். அதாவது ரோம சாம்ராஜ்யத்தின் இரண்டாவது பெரிய நகரத்தின் மொத்த அரை மில்லியன் சனத்தொகையில் அரைவாசிப் பேர் யூதர்கள். அலெக்சாண்டரியாவில் வாழ்ந்த யூதர்களும் ஆரம்பத்தில் ரோமர்கள் பக்கம் நின்றனர். இதனால் மனதில் வன்மம் கொண்ட கிரேக்கர்கள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இனக்கலவரத்தில் இறங்கினார்கள். சிறு சச்சரவு கூட கலவரம் வெடிக்க காரணமாக இருந்தது. எண்ணிக்கையில் அதிகம் என்பதால், சில நேரம் யூதர்களின் கை ஓங்கியிருந்தது. ஆனால் ரோம ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், கிரேக்க சமூகத்தின் சார்பாக இருந்தன. ரோமர்களின் கடவுள் சிலைகள் அமைப்பதற்கு யூதர்கள் எதிர்த்ததும் அதற்கு காரணம்.
கலவரங்கள் காரணமாக அலெக்சாண்ட்ரியா யூதர்கள், தலைநகரான ரோமாபுரிக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். அதே நேரம் அங்கே ஏற்கனவே குடியேறிய யூத சமூகம் ஒன்றும் இருந்தது. ரோமர்களுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்ட மக்காபீக்களின் காலத்தில், பல ஜெருசலேம் யூதர்கள் ரோமாபுரியில் குடியேறினர். கி.மு. 63 ல், யூத தேசத்தை வெற்றி கொண்ட ரோம தளபதி பொம்பியுஸ், போர்க் கைதிகளை ரோமாபுரிக்கு அனுப்பி வைத்தான். இவர்களும் ரோமாபுரியில் வாழ்ந்த யூதர்களுடன் கலந்து விட்டனர். ரோம சாம்ராஜ்யத்தில் மத சுதந்திரம் காணப்பட்டது. யூதர்கள் அதைப் பயன்படுத்தி, ரோமர்களையும் தமது மதத்தில் மாற்றிக் கொண்டிருந்தனர். பிற்காலத்தில் கிறிஸ்தவ மத ஆதிக்கம் வந்த பின்னர் தான் மத மாற்றம் சட்டப்படி தடை செய்யப்பட்டது.
(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
2.இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா

கருத்துகள் இல்லை: