சனி, 6 ஆகஸ்ட், 2011

உமர்[ரலி] அவர்கள், ஆட்சி தலைவராக இருந்தபோதும் ....

அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் அடியொற்றி வாழ்ந்த அருமை உமர்[ரலி] அவர்கள், ஆட்சி தலைவராக இருந்தபோதும் அடுத்தவர் நில விஷயத்தில் அதுவும் தனது உடலை அடக்கம் செய்ய தேவைப்படும் ஆறு அடி நிலத்திற்க்காக சம்மந்தப்பட்டவரிடம் அனுமதி கேட்ட அற்புதமான வாழ்க்கை பாரீர்;


அம்ர்இப்னு மைமூன் அல்அவ்தீ அறிவித்தார்;
உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன். தம் மகனை நோக்கி, அவர், 'அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் சொல்லிவிட்டு, என்னுடைய தோழர்களான (நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்' எனக் கூறினார். அவ்வாறே கேட்கப்பட்டதும். ஆயிஷா(ரலி) நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதைவிட்டுக் கொடுக்கிறேன்" என்றார். இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி) 'என்ன பதில் கிடைத்தது?' எனக் கேட்டார். இப்னு உமர்(ரலி) 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு அவர் அனுமதியளித்துவிட்டார்' எனக் கூறினார். உடனே உமர்(ரலி) 'நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (என்னுடைய உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மீண்டும்) என்னுடைய ஸலாமைக் கூறி, 'உமர் அனுமதி கேட்கிறார்' எனக் கூறுங்கள். எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள்.[ ஹதீஸ் சுருக்கம் நூல்;புஹாரி]


இந்த ஹதீஸில், முதலில் தன் மகன் மூலம் அனுமதி பெற்ற உமர்[ரலி] அவர்கள், தன்னை அந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கு முன்பாக மறுபடியும் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களிடம் அனுமதி கேட்குமாறு கூறுகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அல்லாஹ் உமர்[ரலி] அவர்களின் உள்ளத்தை விசாலமாக்கியிருக்கவேண்டும்? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிமல்லாத காந்தி அவர்கள், உமருடைய ஆட்சி போன்று ஆட்சி வேண்டும் என்று சிலாகித்து சொல்லும் அளவுக்கு உமர்[ரலி] அவர்களின் வாழ்க்கை/ஆட்சி இருந்தது. அந்த உமர்[ரலி] அவர்களின் கொள்கை வழிவந்த நாம் இனியாகிலும் அடுத்தவர் நிலத்தையோ,  பொருளையோ, அடுத்தவர் உரிமையையோ பறிக்காமல் வாழ்ந்து மரணிக்க முயற்ச்சிப்போம்.

கருத்துகள் இல்லை: